புதன், 6 டிசம்பர், 2017

கன்யாகுமரியில் 1500 மீனவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை !... பொன்னாரையும் காணவில்லையா?

பாதிக்கப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி!மின்னம்பலம் :புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்பிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களில் தமிழக அரசுக்குக் குழப்பம் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை டிசம்பர் 4ஆம் தேதி பார்வையிட்டார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். கன்னியாகுமரியிலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் அந்த தொகுதிகளின் எம்.எல்.ஏக்களும் உடன் இருந்தனர். அப்போது காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
நேற்று (டிசம்பர் 5) கன்னியாகுமரியிலிருந்து சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவே இல்லை என தெரிவித்தவர், காணாமல் போனவர்கள் குறித்த கணக்கில் தமிழக அரசு குழப்பத்தோடு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

“புயலால் ஏற்பட்ட பாதிப்புகளினால் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்று கணக்கெடுக்கும் பணியில்கூட இந்த அரசு ஈடுபடவில்லை. காணாமல் போனவர்கள் 97 பேர் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தார். அதன் பிறகு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் காணாமல் போனவர்கள் 97 பேர் என்று அறிவித்தார்.
ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 294 பேரை மீட்டுவிட்டோம், மீதமுள்ள 260 பேரை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று அறிவித்தார். இரண்டையும் கூட்டினால் மொத்தம் வரக்கூடிய கணக்கு 554 பேர். அதன்பிறகு, கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 2,124 பேர் என்று ஒரு கணக்கினை சொன்னார் ஜெயக்குமார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரு நாள்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டபோது, 2,384 பேரை காணவில்லை என்று தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு 2,570 மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இப்படி பல குழப்பமான கணக்குகள்தான் தரப்படுகின்றன.
இதையெல்லாம் தாண்டி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்து சென்றபோது, 1,000 மீனவர்களைக் காணவில்லை என்றொரு கணக்கினைத் தெரிவித்து, மீனவர்கள் தவறான கணக்கைச் சொல்கிறார்கள் என்று ஒரு செய்தியை வெளியிட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படுகின்றன.
புயல் குறித்து, வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், உரிய நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுக்க இந்த திறனற்ற, பெரும்பான்மை இழந்த, சட்டவிரோத மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. காணாமல் போயுள்ள மீனவர்கள் குறித்த துல்லியமான, தெளிவான விவரங்கள் ஏதும் இந்த மாநில அரசிடம் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என்றார் மு.க.ஸ்டாலின்.
கன்னியாகுமரியைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, உரிய நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தியிருக்கிறார். அதோடு, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது குறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக