செவ்வாய், 12 டிசம்பர், 2017

ராகுல் குமரிக்கு வருவது தெரிந்து விழுந்தோடி வரும் எடப்பாடி !

குமரி விசிட்:  முதல்வரை முடுக்கிய ராகுல்!மின்னம்பலம் :அனைத்து எதிர்க்கட்சிகளும் குமரியில் கொதித்துக்கொண்டிருக்கும் மீனவர்களும், ‘இன்னும் ஏன் முதல்வர் இங்கே வரவில்லை?’ என்று தொடர்ந்து கேட்டதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 12) குமரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குமரிக்கு விரைவில் வரலாம் என்ற தகவல் கிடைத்த பின்பே அவசர அவசரமாகத் தமிழக முதல்வரின் குமரிப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று கோட்டையிலிருந்து தகவல்கள் கசிகின்றன.
நவம்பர் 30, டிசம்பர் 1 தேதிகளில் ஒகி புயல் குமரி மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கியது. இதனால் மரங்கள், பயிர்கள், சாலைக் கட்டமைப்பு ஆகியவை கடும் சேதத்துக்கு உள்ளாயின. குமரியிலிருந்து கடலுக்குள் சென்ற மீனவர்களின் கதி என்னானது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். மீனவர்களின் உடல்கள் கடலில் செத்து மிதக்கின்றன.

இதற்கிடையில், டிசம்பர் 3ஆம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டது குமரி மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குமரிக்கு விசிட் அடித்தார். ஆனாலும் மீனவ கிராமங்களுக்கு அதிக அளவில் செல்லவில்லை. அப்போதுதான் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குமரிக்கு வந்து மீனவர்களைப் பார்வையிட்டு இரவு இரண்டு மணியளவில் பிரஸ் மீட் நடத்தினார்.
இந்நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் குமரி செல்ல வேண்டும் என்று அறிக்கை விட்டனர். சில தலைவர்கள் முதல்வரையும், மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரையும் தனிப்பட்ட முறையில் போனில் தொடர்புகொண்டு, “இவ்வளவு நடந்தபிறகும் முதல்வர் குமரி செல்லவில்லை என்றால் அது சரியாக இருக்காது” என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், “நானும் முதல்வரிடம் இது பற்றிப் பேசியிருக்கிறேன். அங்கே செல்வது ஒரு பக்கம் இருந்தாலும் கடற்படை அதிகாரிகளிடம் பேசி மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்” என்று பதிலளித்தாராம்.
இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகவல் தெரியவந்தது. டிசம்பர் 14ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பார்ப்பதற்காக திருவனந்தபுரம் வருகிறார் என்பதுதான் அந்தத் தகவல்.
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா ராகுலைச் சந்தித்து, “நீங்கள் வந்து பார்த்தால் மீனவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதையடுத்து திருவனந்தபுரம் வர ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி, அப்படியே கன்னியாகுமரி வருவதற்கும் திட்டமிட்டிருக்கிறாராம்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி வந்து மத்திய அரசையும், தமிழக அரசையும் கடுமையாகச் சாட வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன்பாவது குமரி சென்றுவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு த் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் புயல் தாக்கி முழுதாக 13 நாட்கள் முடிந்த பிறகு குமரிக்குப் புறப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் பொங்கல் முடிந்து குமரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மீனவர்களைச் சந்திக்காமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்குச் சென்றால் மீனவர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாலேயே முன்னெச்சரிக்கையாகக் குமரி செல்கிறார் முதல்வர் என்று குமரி அதிமுகவினரே சொல்கிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக