வியாழன், 7 டிசம்பர், 2017

ஜாலியன் வாலாபாக்: பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்! லண்டன் மேயர் ...

ஜாலியன் வாலாபாக்: பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்!மின்னம்பலம் :ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்காக இங்கிலாந்து அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சீக்கியர்களின் அறுவடை நாளான வைசாகி தினத்தில், ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பெருங்கூட்டம் ஒன்று கூடியது. ஒரேயொரு நுழைவு வாயில்கொண்ட அந்த இடத்துக்கு ஜெனரல் ரெஜினால்ட் டயர் தலைமையில் வந்த சிப்பாய்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி சுட்டதில் நிராயுதபாணியாக நின்ற நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் துயர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் இன்னும் இரண்டாண்டுகளில் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள லண்டன் மேயர் சாதிக் கான் அமிர்தசரஸ் பொற்கோயில், ஜாலியான் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். ஜாலியான் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில், "என்னுடைய ஜாலியன் வாலாபாக் வருகை நம்பமுடியாததாக நகர்ந்துகொண்டிருக்கிறது. 1919ஆம் ஆண்டு ஒரு வைசாகி தினத்தில் நடைபெற்ற இந்தத் துயர சம்பவத்துக்காக இங்கிலாந்து அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டிய இறுதி தருணமிது.” இவ்வாறு சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் தெரசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், சாதிக் கான் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன் வாலாபாக்கில் அஞ்சலி செலுத்தினார். “ஜாலியன் வாலாபாக் இங்கிலாந்தின் வரலாற்றில் மிகவும் வெட்கப்படக்கூடிய துயரமிகு சம்பவம்” என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்தச் சம்பவத்துக்கு அவர் அதிகாரபூர்வ மன்னிப்பேதும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக