வியாழன், 7 டிசம்பர், 2017

ஆர் கே நகரில் ஆரம்பமாகும் திமுக மதசார்பற்ற கூட்டணி டெல்லி ஆட்சியையும் குறிவைக்கிறது .....?

மெகா கூட்டணி: தேர் இழுக்கும் ஸ்டாலின்மின்னம்பலம் :நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு, மக்கள் நலக் கூட்டணி தனியாகப் போட்டியிட்டதும் ஒரு முக்கியக் காரணம் என்பது அரசியல் வட்டாரத்தில் அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டது.
அந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றன.
இது வெறும் ஆர்.கே.நகர் தேர்தலோடு முடிந்து போகிற கூட்டணி அல்ல... அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களுக்கும் திமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணியே தொடர வேண்டும் என்று விரும்புகிறார் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுபற்றி திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கடந்த சட்டமன்றத் தேர்தலை திமுக நூறு சதவிகிதம் ஸ்டாலின் தலைமையில்தான் சந்தித்தது. அப்போதே மக்கள் நலக் கூட்டணி அமைப்பதை ஸ்டாலின் தடுத்து நிறுத்தியிருந்தால் திமுக இந்நேரம் ஆட்சியில் இருந்திருக்கும். இதை அப்போது ஸ்டாலின் மீதான விமர்சனமாக அரசியல் நோக்கர்கள் வைத்தனர். கருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் ஜெ-வுக்கு எதிராக ஜம்போ கூட்டணி அமைத்திருப்பார் என்று அவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இப்போது அந்த விமர்சனம் தன் மீது விழக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் கவனமாகச் செயல்பட்டு, அந்த மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளை திமுக பக்கம் கொண்டுவருவதில் வெற்றி பெற்று விட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தகவல்கள் நிலவிய நிலையில், அவரிடம் பேசி வெற்றி கண்டார் ஸ்டாலின். பின் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளிடமும் திமுக சார்பில் முறைப்படி பேசப்பட்டு அவர்களை ஆர்.கே.நகரில் திமுகவை ஆதரிக்க வைத்தாயிற்று.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் கோபாலபுரம் வந்து கருணாநிதியைச் சந்தித்தபோதே அவர் திமுக கூட்டணிக்கு வருவார் என்று பேசப்பட்டது. ஆனால், அதன்பிறகு அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஸ்டாலின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வைகோவிடம் பேசியிருக்கிறார். அப்போது இருவரும் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசியுள்ளனர்.

தன்னை நம்பியிருப்பவர்களுக்கு அரசியல் வெற்றியைப் பரிசளிக்க வேண்டும் என்று அப்போது தனது எண்ணத்தை வெளிப்படுத்தினாராம் வைகோ. அதன்படி வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் வைகோவுக்குத் திருப்தியான அளவில் திமுக கூட்டணியில் பிரதிநித்துவம் இருக்கும் என்ற உறுதி கொடுக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகரில் திமுகவை ஆதரித்திருக்கிறார் வைகோ. மேலும், இந்த கூட்டணி தொடரும் என்றும் சொல்லியிருக்கிறார்.
வைகோவைத் திமுக கூட்டணிக்குக் கொண்டுவருவது பற்றி மூத்த தலைவர் துரைமுருகனுடனும் விவாதித்துள்ளார் ஸ்டாலின். கே.என்.நேரு, பொன்முடி போன்ற நிர்வாகிகளுடனும் பேசியிருக்கிறார். ‘திமுக இப்போது உங்கள் (ஸ்டாலின்) தலைமையில் இருக்கிறது. இந்த நிலையில் கூட்டணிக்கு வைகோ வருவதை தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம்’ என்று நேரு சொன்னாராம். பொன்முடியோ, ‘வைகோவின் பிரசார பலத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டாராம்.
ஏற்கெனவே தோழமையாக இருக்கும் காங்கிரஸ், மமக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் சேர்ந்து இப்போது ஒரு மெகா கூட்டணி அமைத்துவிட்டார் மு.க.ஸ்டாலின். இந்த மெகா கூட்டணி என்னும் தேரை நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களுக்கும் துளியும் இழப்பில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார் அவர்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்காக திமுக கூட்டணி பிரசாரக் கூட்டம் வரும் 11ஆம் தேதி நடக்கும் என்று அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். இதில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் தவிர பிற கூட்டணிக் கட்சியினர் மேடை ஏறுகிறார்கள். விரைவில் மார்க்சிஸ்ட்டையும் முறைப்படி கூட்டணிக்குள் அழைத்து வந்து, இந்த மேடையை அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான மேடையாகவும் மாற்ற முனைப்போடு இருக்கிறார் மு.க.ஸ்டாலின்” என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக