வியாழன், 9 நவம்பர், 2017

ஐ.பி.எஸ். படித்த டாப் டென் கொள்ளையன்!

மின்னம்பலம் : - அதிர வைக்கும் வாக்குமூலம்
ஐ.பி.எஸ்.  படித்த டாப் டென் கொள்ளையன்!தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டுகளில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள கொள்ளையனை கடலூர் போலீஸார் கைது செய்துள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அடிதடி வழக்குகள், கலவர வழக்குகள் குறைந்து தற்போது திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
சாலையில் நடந்து செல்லும் ஆண்கள், பெண்களிடம் செயினை அறுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். வீட்டு வாசலில், கடை வீதியில் நிற்கும் வாகனங்களைத் திருடிக்கொண்டு போகிறார்கள்.
திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க தினந்தோறும் வாகன சோதனைகளில் ஈடுபடச் சொல்லி காவலர்களுக்கு பிரஷர் கொடுக்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து செயின் அறுப்புச் சம்பவங்கள் அரங்கேறி வருவதை தடுக்க எஸ்.பி.விஜயகுமார், பீல்டிலும் மைக்கிலும் மாவட்டப் போலீஸாரை அலர்ட் செய்துகொண்டே இருப்பதால் போலீஸாரும் பரப்பரப்பாக செயல்பட ஆரம்பித்தார்கள்.

ஆனாலும் போலீஸை விட வேகமாக செயல்பட ஆரம்பித்தனர் கொள்ளையர்கள். அதற்கு உதாரணம்தான் சமீப நாள்களில் கடலூர் மாவட்டத்தில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்கள்!
கடலூர் பகுதியில் செயின் அறுப்பு அட்டூழியங்களை நடத்திய கொள்ளையர்கள், அடுத்து நெய்வேலியில் செயின் அறுப்பு, வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி என்று தீவிரமானார்கள். கடந்த வாரம் திட்டக்குடி டிவிஷனில், ஒரு அப்பாச்சி பைக்கில் இரண்டு பேர், ஒரு யமஹா பைக்கில் இரண்டு பேர், இன்னொரு யமஹாவில் மூன்று பேர் என மொத்தம் ஏழு பேர் மூன்று பைக்கில் வந்தனர்.
சிறுப்பாக்கத்திலிருந்து தொழுதூர் வரையில் சாலையில் சென்ற ஆண், பெண்களின் கழுத்திலிருந்த செயின்கள் என்று நான்கு பேரிடம் அறுத்துக் கொண்டு பறந்தார்கள்.
அதில்லாமல் இரண்டு பெண்கள் கழுத்தில் இருந்து அறுத்த தாலி சரடு கீழே விழுந்ததால், அதை எடுக்க நேரமில்லாமல் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இதையடுத்து அப்பெண்கள் அலறித் துடித்தனர். அந்தச் சம்பவம் கடலூர் மாவட்டத்தை உலுக்கியெடுத்தது.
இந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களின் படம் சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. எவ்வளவோ அலர்ட் செய்தும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறதே என்று கோபமான எஸ்.பி. கொள்ளையர்களை பிடிக்க சூளுரைத்தார்.
மழையிலும் போலீஸார் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். திட்டக்குடி டி.எஸ்.பி. பாண்டியன் திருடர்களை பிடித்தாக வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, வேப்பூர் காவல் நிலையம் லிமிட்டில், எஸ்.எஸ்.ஐ. செல்வராஜ், தலைமைக் காவலர் ராஜா இருவரும் இரவு ரோந்து போனபோது... வைத்தியநாதபுரத்தில், ஐந்து பேர் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். ரோந்து போலீஸார் நெருங்கியதும் நான்கு பேரும் காட்டுப் பகுதியில் தப்பித்து ஓடி விட்டார்கள். கொள்ளையர்களில் ஒருவனை மட்டும் கடுமையாகப் போராடிப் பிடித்தனர் போலீஸார்.
இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிந்து இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும், டிஎஸ்பி பாண்டியன் ஆகியோர் பிடிபட்ட திருடனிடம் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
விசாரித்த அதிகாரிகளுக்கு மயக்கம் வந்துவிட்டது. காரணம் திருடன் சொல்வது நிஜமா, கனவா என்று தெரியாமல்.

அந்த விசாரணை விவரத்தை லைவ்வாக இதோ தருகிறோம்.
டேய் உன் பெயர் என்ன?
சரவணன்.
என்ன ஊரு?
ராமநாதபுரம் தேனிக்கரை.
என்னடா படிச்சிருக்கே?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வில் பாஸ் பண்ணிருக்கேன். அந்த பரீட்சைக்கு படிக்கும்போது ரயில்வே எஸ்.பி. விஜயகுமார் எனது ரூம் மெட்தான். தமிழ்நாட்ல பல ஐ.பி.எஸ். அதிகாரிங்க என்னோட படிச்சவங்கதான்.
என்னடா சொல்றே?
சந்தேகமா இருந்தா... கேட்டு பாருங்க சார்.
சரிடா, ஐ.பி.எஸ். அதிகாரியாக வருபவன், திருட்டு, கொலை, கொள்ளைன்னு போனது ஏன்?
ஊரில் ஒரு பெண்ணை லவ் செய்தேன். அந்தப் பெண் வேற சமுதாயம். ஏற்கனவே ஒருவனுடன் நட்பாகவிருந்தபோது ஒருவனுடன் போட்டோ எடுத்திருக்கா. அந்த போட்டோவை வைத்து அவன் பிளாக்மெயில் செய்ததும், அவள் என்னிடம் சொல்லி கதறி அழுதாள். அதனால முதல்ல அவனை லவுக்காக கொலை செஞ்சேன். இதுல சிறைக்கு போயிட்டு வந்தபோது, பழிக்குப் பழி தீர்க்க இருவர் வந்தார்கள். அவர்களையும் போட்டுத் தள்ளினேன். அது இரண்டாவது வழக்கு.
இப்படி வரிசையா வழக்கு வந்ததால வக்கீல் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் வழிப்பறி, வாகனம் திருட்டு, வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதுமாக ஈடுபட்டேன்.
திருச்சி, மதுரை, தஞ்சாவூர், மத்திய சிறையிலிருந்தபோது ரவுடிகள், திருடர்கள் நெட்வொர்க் கிடைத்தது. அதனால தமிழகம் முழுவதும் பல சம்பவங்கள் செய்தேன். தமிழகத்தில் மொத்தம் என் மேல 19 வழக்குகள் உள்ளது.

உன் கூட வந்தவங்க யாருடா?
என்னோட வந்த நான்கு பேர்ல ஒருவன் பெயர் ராஜா, லால்குடி. மற்றவர்கள் பெயர் தெரியாது.
திருடவரும்போது கையில் என்ன ஆயுதம் எடுத்து வருவீங்க?
எல்லார் கையிலும் இரும்பு ராடு வைத்திருப்போம்.
இந்தத் தொழிலுக்கு வந்தது பற்றி வருத்தப்படறியா?
நான் ஏன் வருத்தப்படணும்? சிறைக்குள் நண்பர்கள், பெயில் எடுக்கப் பல வழக்கறிஞர்கள், சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.
என்று அதிரடியாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் சரவணன்.
நம்மிடம் பேசிய கடலூர் போலீஸார்,
“இந்த சரவணன்தான் மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுப்பான். மாநிலம் முழுவதும் நெட்வொர்க் இருக்கு. திருடர் கையிலிருக்கும் வெப்பன்ஸ் அளவுக்குக்கூட போலீஸ் கையில் வெப்பன்ஸ் இல்லை. திருடர்கள் பயன்படுத்தும் வாகனம் அளவுக்கு, போலீஸுக்கு இல்லை. அவர்கள் ஸ்பீடுக்கு, போலீஸால் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை.
தமிழகத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகளில் பத்தாவது இடத்தில் இருக்கிறான் இந்தக் கொள்ளையன் சரவணன்.

“ஜாபர் சேட் போன்ற ஓர் அதிகாரி வரணும். முக்கிய குற்றவாளிகள் பட்டியல் எடுத்து என்கவுன்ட்டர் செய்தால்தான் குற்றத்தை குறைக்க முடியும். ரவுடிகளுக்கும் பயமிருக்கும். சரவணனைப் பிடித்த உடனே, ஏகப்பட்ட வழக்கறிஞர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். போலீஸ் என்ன செய்வது? திருடர்கள் தற்பாதுகாப்புக்குப் பல இளைஞர்களை வழக்கறிஞர்களுக்குப் படிக்க வைக்கிறார்கள். கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது, சட்டங்களை அமல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணையம் குற்றவாளிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். காவல் துறையும் நீதி துறையும் குற்றவாளிகளை ஒடுக்க, குற்றத்தைத் தடுக்க ஆலோசனைகள் செய்வது நல்லது” என்கிறார் வழக்கறிஞரும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான சக்திவேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக