வியாழன், 9 நவம்பர், 2017

தேர்வு பயத்தில் சிறுவனைக் கொன்ற மாணவன்!

தேர்வு பயத்தில் சிறுவனைக் கொன்ற மாணவன்!
மின்னம்பலம் :டெல்லியில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் கழிவறையில் கொல்லப்பட்ட வழக்கில் ப்ளஸ் ஒன் மாணவனை போலீஸார் நேற்று (நவம்பர் 8) கைது செய்தனர்.
ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்யாமன் தாகூர் (7) கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலை எட்டு மணியளவில் கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளான். சிறுவன் அருகில் ஒரு கத்தியும் இருந்துள்ளது. பள்ளி வளாகத்துக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பள்ளி ஆசிரியர்கள், முதல்வரைக் கைது செய்ய வேண்டும் என்று சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிற பள்ளி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் நீரஜா பத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார்

இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை குர்கான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் அந்தப் பள்ளியின் பேருந்து ஓட்டுநருக்கு உதவியாளராக இருக்கும் அசோக் குமார் (42) என்பவரைக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தான் பள்ளி கழிவறையில் இருந்தபோது அங்கு வந்த சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாகவும், அதற்கு மாணவர் மறுத்தால் தன்னிடமிருந்த கத்தியால் மாணவரின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் அசோக் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து சிபிஐ விசாரணையில் ரயான் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர் தேர்வை தள்ளிப்போடுவதற்காகக் கொலையை செய்தது தெரியவந்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள், “சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பள்ளியில் படிக்கும் ப்ளஸ் ஒன் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதியன்று பள்ளியில் தேர்வு நடைபெறவிருந்தது. அந்தத் தேர்வை தள்ளிப் போடுவதற்காகவும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பையும் தள்ளிவைக்கவும் இந்தக் கொலையை மாணவர் செய்திருக்கிறார். இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர் டெல்லியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர், கொலை செய்யப்பட்ட நாளன்று கையில் கத்தியுடன் சுத்தியுள்ளார். மேலும், பள்ளியில் தேர்வுகள் நடைபெறாது என வகுப்பு மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் மாணவனைக் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு, அசோக் குமாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை, “என் மகன் இந்த வழக்கில் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளான். அவர் ஓர் அப்பாவி. அவனுடைய பள்ளி சீருடையில் ஒருதுளி ரத்தம் கூட இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக