புதன், 29 நவம்பர், 2017

ஆறு மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட வேண்டும்: கால தாமதமான தீர்ப்பா?

tamilthehindu :தமிழகத்தில் மணல் வளம் சுரண்டப்பட்டு வெளி நாடுகளிலிருந்து  வணிக தேவைகளுக்காக மணல் இறக்குமதி செய்யப்பட்டுவரும் காலகட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும், 6 மாதங்களுக்கு மூட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த எம். ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராமையா, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதுவும் குறிப்பாக இயற்கை வளம், விவசாயம், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு என்று கோடிட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் இந்த வரவேற்கத்தக்க தீர்பை வழங்கியுள்ளார்.

மணல் கொள்ளைக்கு எதிராக நீண்ட காலமாக தொடர்ந்து களத்தில் குரல் கொடுத்துவரும், போராட்டக்காரர்களின் குரலுக்கும் இந்தத் தீர்ப்பு சற்று வலிமை சேர்ந்துள்ளதாக கருதப்பட்டாலும், சரியான காலகட்டத்தில் இந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறதா என்ற கேள்வியை எழச் செய்கிறது.
உச்ச நீதிமன்றம் மதுரை கிளையின் இத்தீர்ப்பு குறித்து போராட்டக்காரர்கள் , சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
மணல் வணிக  நோக்கத்தில்  மட்டுமே பார்க்கப்படுகிறது: காஞ்சி அமுதன்
யோகநாதன், பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பு
 தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் தமிழக அரசு எந்த விதிமுறையும் இல்லாமல் தமிழக மணல் ஆதாரத்தை அழித்திருக்கிறது.
மத்திய அரசின் தொழில் கொள்கையைத்தான் தமிழக அரசு கடைபிடிக்கிறது. இந்த மோசமான தொழில் கொள்கைதான் மணல் தேவையின் காரணமாக இருக்கிறது.
இந்தத் தீர்ப்பில் ஆறு மாதம் என்று கால அளவு குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதற்குள் எவ்வளவு மணலை சுரண்ட முடியுமோ அவ்வளவு மணல் சுரண்டப்பட்டு விடும்.
மணல் தேவையை பூர்த்தி செய்ய வெளி நாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்யலாம் என்று சொல்லக் கூடிய அதே நேரத்தில், அங்கிருக்கக் கூடிய ஆறுகளையும், அங்கிருக்கக் கூடிய சுற்றுச் சூழலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இங்கிருந்த ஆற்றை அழித்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆகவே இங்கு மணல் வணிக நோக்கத்தில்தான் பார்க்கப்படுகிறது. இங்கிருக்கும் மணல் பிரச்சினை இயற்கை நோக்கத்தில் அணுகப்படவில்லை என்பதாகவே பார்க்கிறேன். அதேபோல் ஒவ்வொரு ஊரிலுள்ள உள்ளூர் பொருளாதாரம் அவ்வூரில் உள்ள வாழ்வியலுக்கான பொருளாதாரமாக இல்லாமல், வெளி நாடுகளுக்கு உற்பத்தி செய்யக் கூடிய பொருளாதார அமைப்பு இங்கு இருப்பதும்தான் மணல் தேவைக்கு காரணமாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் வெளி நாடுகளிருந்து மணலை இறக்குமதி செய்தாலும் இந்த வணிக அகோரப் பசி தீர்வதற்கு வாய்ப்பு கிடையாது.
எந்த இடத்திலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மணல் அள்ளப்படவில்லை. 3 அடிக்கு மேல் மணல் அள்ளக் கூடாது என்ற சட்டம் உள்ளது. ஆனால் இங்கு 50 அடி, 60 அடி என்றுதான் மணல் அள்ளி இருக்கிறார்கள். இவ்வாறு வரம்பு மீறி மணல் அள்ளியவர்கள் மீது நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தவறு செய்தவர்களை தண்டிக்காமல் மீண்டும், மீண்டும் மணலின் தேவை இருக்கிறது என்பதற்காக இயற்கையைக் கொலை செய்வது சரியான முறையல்ல.
தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளில் தற்போது மணல் இல்லை. இந்த நேரத்தில் இத்தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பு முன்னரே வந்திருக்க வேண்டும்.
சட்டவிரோதமாக சமூக அமைப்பு, சிலரின் லாபத்துக்காக சமூக அமைப்பாக உள்ளது. இயற்கையோடு மனித இனம் சேர்ந்து வாழக் கூடிய ஒரு வாழ்வியல் முறையை நாம் கடைபிடிக்க வேண்டிய தேவை உள்ளது.
மணல் என்பது வெறும் வீடு கட்டுவதற்காக மட்டுமல்ல; எந்தவித செலவும் இல்லாமல் தூய்மையான தண்ணீரை அது தருகிறது. அப்படிப்பட்ட மணலை ஆறுகளிருந்து அப்புறப்படுத்தியது தொடர்பான உரிய விவாதத்தை நாம் இந்த சமூகத்தில் நடத்தவில்லை.
மணல் என்பதை வெறும் வீடு கட்டுவதற்கான பொருளாகவே பார்க்கிறோம். மணலுடன் சேர்த்து நமக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான உயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதுதொடர்பான விவாதத்தை நாம் நடத்த வேண்டும்.
நம்மூர் ஆறுகளில் மழை பொழிந்தால் ஏரிகளுக்கு தண்ணீர் போகும். தற்போது மணலை சுரண்டிவிட்டதால் கால்வாய்கள் எல்லாம் மேடாகிவிட்டது, ஆறுகள் எல்லாம் பள்ளமாகிவிட்டது. அதற்கு அரசும், நாமும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்? மணல் சுரண்டலின் மூலம் பல்வேறு துன்பங்களை நாம் சந்திக்கிறோம், இனி சந்திக்கப் போகிறோம்.. அவை குறித்தான விவாதத் தேவை இருக்கும்போது மணலை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது தீர்வாகாது.
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது: வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்
 நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. தமிழகத்தில் தனியார் மணல் கொள்ளை அதிகமாக இருந்த காரணத்தினால் இனி மணல் ஏற்றுமதியை அரசே ஏற்று நடத்தும் என்ற நடவடிக்கை 2003-ல் கொண்டு வரப்பட்டது.
2003 -ம் ஆண்டுக்குப் பிறகு மணல் அள்ளுவதற்கான மணல் உரிமையை பொதுப்பணித்துறைதான் வாங்கி வருகிறது. மணல் அள்ளுவதற்காக உரிமை என்றால் அவர்களுக்கு கனிம வளம் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்த இரண்டு சட்டங்களுக்கு கீழ் அனுமதி பெற்றுவிட்டுதான் மணல் அள்ள வேண்டும். இந்த சட்டங்களுக்கு கீழ் அனுமதி எப்படி வழங்குவார்கள் என்றால், எந்த அளவுக்கு நீங்கள் மணல் எடுக்கிறீர்கள், எந்த மாதிரியான இயந்திரங்களைப் பயன்படுத்துகிறீர்கள், மணல் எடுப்பதினால் அந்த இடங்களில் எற்படும் நிலத்தடி நீருக்கு பாதிப்பு என்ன, மீண்டும் அந்த இடத்தில் அதே அளவு மணல் உருவாக்க எவ்வளவு காலம் பிடிக்கும், இவ்வாறு பல ஆய்வுகளுக்கு உட்பட்டே மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
ஆனால் இதெல்லாம் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை. விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுதான் தமிழகத்தில் மணல் அள்ளப்படுகிறது. கடந்த 10 வருடங்களாக அரசாங்க பொறுப்பில் மணல் அள்ளப்படுவது நடைமுறையிலிருந்தும், சட்டமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என்பதை மக்களின் சமீபத்திய போராட்டங்கள் காட்டுகிறது. எனவே மணல் அள்ளுதல் தொடர்பாக பொது நல வழக்கு போடுவது தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மணலைப் பாதுகாப்பதற்காக சட்டம் ஏதும் தனியாக இல்லை. இதுவே கேரளாவை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மணலை பாதுகாப்பதற்கு கேரளாவில்  ஈர நில பாதுகாப்பு சட்டம் உள்ளது. இதன் மூலம் கேரளாவில் எந்த நீர் நிலைகளிலும் நாம் மணலை அள்ள முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை இது அப்படியே தலைகீழாக உள்ளது. என்ன பிரச்சினை என்றால், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இங்கிருந்து மணல் அனுப்பப்படுகிறது.
இரண்டாவது மணல் அள்ளப்படுவது பொதுப்பணித் துறை மேற்பார்வையில் நடந்தாலும், அதற்கான வேலைகளுக்கு தனியார் நிறுவனர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் மூலம் மறைமுகமாக மணலை தனியார் நிறுவனங்கள்தான் அள்ளிக் கொண்டிருக்கின்றன. இதனால் விதிமீறல்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது இடைக்கால நிவாரணம் மட்டுமே. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் மணல் அள்ளுவதை முறைப்படுத்துவது அவசியமாகிறது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
தற்காலிகமான தீர்வுதான் : பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன்
 சரியான தீர்ப்பு வந்திருக்கிறது. அதுவும் தமிழகத்தில் இனி புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று கூறியிருப்பது வரவேற்கக்கூடிய ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரை மணல் குவாரிகள் அதிக அளவு உள்ளதால் நிலத்தடி நீரின் அளவு பெருமளவு குறைந்துவிட்டது.
ஏனெனில் மணல்தான் நிலத்தடி நீரை பிடித்து அதனை மீள் நிரப்பு செய்யும். தற்போது மணல் அங்கு இல்லாததால் நிலத்தடி நீர் வேகமாக ஓடிவிடுகிறது இதன்காரணமாகவே தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது.  
மணலை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்று கூறி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது தற்காலிகமான தீர்வுதான். மணலுக்குப் பதிலாக  மாற்று தொழில்நுட்பத்துக்கு நாம் செல்ல வேண்டும்.
இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் தமிழக அரசு மூலம் சரியான முறையில் நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார் சுந்தர்ராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக