ஞாயிறு, 1 அக்டோபர், 2017

MGR இன் உண்மையான நூற்றாண்டு விழா 2016ஆம் ஆண்டு தை தொடங்கி 2017ஆம் ஆண்டு தை வரை!

மக்களை வதைக்கவா எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா?
மின்னம்பலம் : ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் நோக்கம் மக்களை வதைப்பதுதானா? இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான செயல்கள் கண்டிக்கத்தக்கவை’ என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 1) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்று அஞ்சப்பட்டதோ, அவை அனைத்தும் ஆளுங்கட்சியால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கூட்டம் சேர்ப்பதற்காக மாவட்டம் முழுவதிலுமிருந்து மாணவர்களைச் சாதாரண உடையில் அழைத்து வரும்படியும், மக்களைக் கூட்டி வருவதற்காக தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அவற்றின் வாகனங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்துவதாகப் புகார்கள் எழுப்பப்பட்டதை கடந்த 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். அரசு நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நேர்மையாக நடந்திருந்தால் இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியினரின் அடிமையாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகம் இப்புகார்களைக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பணம் கொடுத்து ஆட்களைக் கொண்டுவருவதற்காக பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட எந்த அரசு விழாவுக்கும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால், அதை மீறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சாதாரண உடையில் கட்டாயப்படுத்தி எம்.ஜி.ஆர். விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, மாணவர்களை விழாவுக்கு அனுப்ப மறுத்த பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சேலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, சேலம் வழியாக கேரளத்துக்கும், கேரளத்திலிருந்து சேலம் வழியாக மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய வாகனங்கள் 70 கிலோ மீட்டருக்கும் கூடுதலாக சுற்றிச்செல்ல வேண்டியிருந்தன.
எம்.ஜி.ஆருக்கு இந்த அரசு கொண்டாடுவதே போலியான நூற்றாண்டு விழா ஆகும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது யாருக்கோ பயந்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மறுத்துவிட்ட ஆட்சியாளர்கள், இப்போது தங்களின் அரசியல் நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக விழாவை நடத்தி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் தேவையில்லாத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட்டதில்லை. தனது விழாவுக்குக் கூட்டம் சேர்ப்பதற்காக பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களையும், மாணவர்களையும் மிரட்டி வரவழைத்ததில்லை. அதனால்தான் அவர் இப்போதும் மக்களால் நேசிக்கப்படுகிறார். ஆனால், பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தன்னை இரண்டாவது எம்.ஜி.ஆராகவும், ஆண் ஜெயலலிதாவாகவும் நினைத்துக்கொண்டு அதிகார போதையில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இத்தகைய ஆட்டங்களை எம்.ஜி.ஆரே விரும்ப மாட்டார்.
எம்.ஜி.ஆரைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் அவருக்கு நூற்றாண்டு விழா நடத்துவதையும், அவரது கொள்கைகளுக்கு எதிராக மக்களைக் கொடுமைப்படுத்துவதையும்விட பெரிய அவமரியாதையை எம்.ஜி.ஆருக்கு செய்துவிட முடியாது. அனைத்து அத்துமீறல்களையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் மிகச்சரியான பாடத்தை அவர்கள் புகட்டுவார்கள்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக