ஞாயிறு, 29 அக்டோபர், 2017

BBC : மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் முறுகல் நிலை ...


இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கிரான் சந்தையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர். இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை வழக்கம் போல் கூடிய போது சந்தைக்கு அருகாமையில் "இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை" என்ற வாசகம் கொண்ட சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. தமிழர்கள் வாழும் பகுதியான கிரான் வாரச் சந்தையில் தமிழர்களை போன்று முஸ்லிம்களும் பொருட்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கமாகும். முஸ்லிம் வியாபாரிகள் வருகைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் கலகம் அடக்கும் பிரிவு உட்பட வழக்கத்துக்கு மாறாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

 முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் பொருட்களை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்தபோது உள்ளுர்வாசிகள் உட்பட சிலர் அதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அங்கு பதற்ற நிலை உருவானது.

 முஸ்லிம் வியாபாரிகளை குறித்த கால அவகாசத்திற்குள் வெளியேறுமாறு கோயில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஒரு சில மணிநேரத்தில் அவர்கள் வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த 2-3 நாட்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளுக்கிடையில் பதற்ற நிலை காணப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை சந்தியில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையில் எதிரொலியாகவே கிரான் சந்தை சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் பேருந்து நிறுத்தத்திற்கான அடிக்கல் கடந்த வியாழக்கிழமை நடப்பட்டது. இந்த அடிக்கல் மறுநாள் முஸ்லிம் ஆட்டோ சாரதிகளினால் மூடப்பட்டு அந்த இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து தமிழ் மற்றும் முஸ்லிம் ஆட்டோ சாரதிகளுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை திங்கட்கிழமை பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக