ஞாயிறு, 29 அக்டோபர், 2017

நெல்லை ஆட்சியரையும் தண்டிக்க வேண்டும் ! கந்து வட்டி தடுப்பு சட்டம் இயற்றிய வக்கீல் ஜோதி..

thehindu :குள.சண்முகசுந்தரம் நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு நான்கு உயிர்கள் தீயில் கருகிய பரிதாபம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. பார்க்கச் சகிக்காத அந்தக் கொடுமையைக் பார்த்துவிட்டு பதறுபவர்கள், “கந்துவட்டி கொடுமைகளை ஒழிக்க ஜெயலலிதா போட்ட சட்டம் அமலில் இருக்கா.. இல்லையா?” என்று ஆத்திரத்துடன் கேட்கிறார்கள்.
கந்துவட்டிக்கு எதிராக 2003-ல், அ.தி.மு.க அரசு கொண்டு வந்த ‘தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்புச் சட்டத்தின் (Tamilnadu Prohibition Of Charging Exorbitant Interest Act 2003) பின்னணியில் இருந்தவர் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் என்.ஜோதி. இந்தச் சட்டத்துக்கான அவசியம் ஏற்பட்ட சமயத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் ஓய்வில் இருந்தார். அவர் சம்பந்தப்பட்ட முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தவர் என்பதால் அப்போது எந்த நேரத்திலும் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பேசும் செல்வாக்குடன் இருந்தார் ஜோதி.
 தற்கொலை செய்துகொண்ட நண்பர் ஜெயலலிதாவை ஜோதி சந்தித்தபோது..
அந்த சமயத்தில், வேலூரைச் சேர்ந்த ஜோதியின் நெருக்கமான நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். காரணத்தை விசாரித்த போது, கந்துவட்டி கொடுமை தாங்காமல் தான் அவர் இந்த முடிவைத் தேடிக்கொண்டதாக தெரிய வருகிறது. அதற்கு சில தினங்கள் முன்பு தான் சினிமா தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் கந்து வட்டி நெருக்குதலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.
நண்பரின் பிரிவைத் தாங்கமுடியாத துயரத்தில் இருந்த ஜோதி, உடனடியாக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு, தமிழகத்தில் நடக்கும் கந்துவட்டி கொடுமைகளையும், அதை தடுப்பதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்தும் சுருக்கமாக விவரித்தார். இது விஷயமாக விரிவாகப் பேச உடனடியாக ஜோதியை ஹைதராபாத் அழைத்தார் ஜெயலலிதா.

மூன்று அமர்வில் விவாதித்த ஜெயலலிதா

அடுத்து நடந்தவைகளை ஜோதியே நம்மிடம் விவரித்தார். “ஹைதராபாத்தில் ஒரு நாள் தங்கியிருந்துதான் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது, கந்துவட்டி கொடுமைகள் குறித்து நான் சொன்ன விவரங்களைக் கேட்டு லேசாக அதிர்ந்தவர், ‘இந்தக் கொடுமைகளை தடுப்பதற்கான சட்ட முன்வடிவு ஒன்றை உடனடியாக தயார் செய்’ என்று சொன்னார். சென்னை வந்ததும் இரண்டே நாளில் 13 உட்பிரிவுகளைக் கொண்ட ‘தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்புச் சட்டத்தை’ உருவாக்கிக் கொடுத்தேன். ஜெயலலிதா சென்னை திரும்பியதும் என்னையும் தலைமைச் செயலாளர் உள்ளிட் டோரையும் அழைத்து புதிய சட்டத்தின் அம்சங்கள் குறித்து மூன்று அமர்வில் விவாதித்தார்.
அப்போது, கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் தாசில்தார், கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம் என ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. ‘அது சரிப்பட்டு வராது; நீதிமன்றத்தை நாடுவதே சரியான தீர்வாக இருக்கும்’ என்று நான் சொன்னதை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. இதையடுத்து, ஒருசில திருத்தங்களுடன், 09-06-2003-ல் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

12 சதவீதத்தைத் தாண்டினால் கந்துவட்டி

எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1979-81 காலகட்டத்தில் கடன் நிவாரண சட்டத்தில் மூன்று முறை திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, வட்டித் தொழில் சட்டத்தின் பிரிவு 7-ன் பிரகாரம், தற்போது 12 சதவீதம் மட்டுமே கடனுக்கான ஆண்டு வட்டியாக பெறமுடியும். வட்டிக்கு வட்டி வசூலிக்க முடியாது. 2003-ல் கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்படி, 12 சதவீதத்துக்கு கூடுதலாக வட்டி வசூலித்திருந்தால் அது கந்துவட்டியாகக் கருதப்படும். அப்படி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை அசலில் கழித்துக் கொள்ளலாம் என்கிறது புதிய சட்டம்.

நெல்லை ஆட்சியரையும் தண்டிக்கலாம்

கந்துவட்டி புகார்களில் சிக்குபவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்யவேண்டும். இவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றமாக இருந்தால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும். அதற்காகவே இந்த சட்டத்தின் கீழ் கைதானால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை எனச் சேர்த்தோம்.
 கந்துவட்டி கொடுமையில் யாராவது தற்கொலை செய்து கொண்டால், அவர்களை தற்கொலைக்குத் தூண்டிய அத்தனை பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யமுடியும். கந்துவட்டி கொடுமைக்கு தனது உயிரைப் பறிகொடுத்த எனது நண்பனை நினைத்து புதிய சட்டத்தின் 9-வது உட்பிரிவில் இந்த சரத்தைச் சேர்த்தேன். அதன்படி பார்த்தால், நெல்லை சம்பவத்தில் புகார்களை உதாசீனப்படுத்தி, இசக்கிமுத்துவின் குடும்பத்தையே மரணத்தின் விளிம்புக்குத் தள்ளிய குற்றத்துக்காக நெல்லை ஆட்சியர் உள்ளிட்ட அத்தனை பேரையும் கூண்டில் ஏற்ற வேண்டும். இவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க முடியும்” என்று சொன்ன ஜோதி,
“இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன்.. கடன் நிவாரணச் சட்டங்களை செயல்படுத்தி எளியவர்களை காத்த ராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இன்னமும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதைப் புரிந்துகொண்டு கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்க வேண்டும். அதேசமயம், கந்துவட்டிச் சட்டத்தின் சிறப்பு அம்சங்களை மக்களிடம் கொண்டு செல்வதற் கான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இப்போது திருத்தம் கொண்டுவரலாம்
“நீங்கள் உருவாக்கிய சட்ட வடிவில், கந்துவட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உதாசீனப் படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏதாவது அம்சங்களைச் சேர்த்திருக்கின்றீர்களா?” என்று கேட்டபோது, “அந்த நேரத்தில் எங்களுக்கு இந்த யோசனை தோன்றவில்லை. ஆனால், இப்போது அது தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரலாம்” என்று சொன்னார் ஜோதி
கடன் வாங்கியவரே கோர்ட்டுக்குப் போகலாம்
பணம் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு நெருக்கினால் கடன் வாங்கியவரே கோர்ட்டுக்குப் போகலாம். ’அரசு நிர்ணயித்த எளிய வட்டி விகிதத்தில் கடனை திருப்பிச் செலுத்த தயாராய் இருக்கிறேன்’ என்று சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு கோர்ட் உரிய பாதுகாப்பு அளிக்கும். கோர்ட்டுக்குப் போய் விட்டால் கந்துவட்டி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதற்கான முத்திரைக் கட்டணமும் அதிகமில்லை; வெறும் 100 ரூபாய் தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக