செவ்வாய், 5 செப்டம்பர், 2017

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: மதிமுகவினரை நீக்கிய வைகோ!

ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்: மதிமுகவினரை நீக்கிய வைகோ!
ஃபேஸ்புக்கில் தலைமையை எதிர்த்து ஸ்டேட்டஸ் போட்டதன் எதிர்வினையாக இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறார் வைகோ. மதிமுக இணையதளக் குழு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகதளங்களில் சிறப்பாக இயங்கி வருகிறது. வைகோவின் அறிக்கைகள், பேச்சுகளை வைரல் ஆக்கும் பணியை இவர்கள் செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில் அனிதா மரணத்தை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத வைகோ, அடுத்த நாளே ஸ்டாலின் தலைமயில் நடக்கும் முரசொலி பவள விழாவில் கலந்துகொள்கிறார் என்ற தகவலை ஒப்பிட்டு சில மதிமுகவினரே பதிவிட்டிருந்தனர்.
இதை வைகோவின் கவனத்துக்கு இணையதள மதிமுக நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர். செப்டம்பர் 3ஆம் தேதி ஸ்டேட்டஸ் போட்ட நிலையில் நேற்று இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் வைகோ.


இதுபற்றி நேற்று இரவு வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘கழகக் கட்டுப்பாட்டை மீறி, முகநூலில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதி வருகின்ற மானாமதுரை மருது, திருப்பூர் பழ.கௌதமன் ஆகியோர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றார்கள்.
தலைமைக் கழக அறிவிப்புகளைக் கண்டித்தும், அதை எதிர்த்தும் முகநூலில் விமர்சனம் செய்பவர்கள், கழகத்தின் உயர்நிலைக்குழுவில் ஆலோசித்துச் செயல்படுத்தப்படுகின்ற முடிவுகளை விமர்சித்துப் பொதுவெளியில் கருத்துகளைப் பதிகின்றவர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்களை விமர்சித்து முகநூலில் எழுதுபவர்கள், கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இணையதள வட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எழுதுகின்ற விமர்சனப் பதிவுகளை ஆதரிப்பவர்கள், அவ்வாறு நீக்கப்பட்டவர்களைக் கழக ஆதரவு இணையதளக் குழுக்களில் நிர்வாகிகளாக இணைத்து இருப்பவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துக் கருத்துக்கூற விழைவோர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களிடம் நேரில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்; அல்லது கடிதம் வழியாகப் பொதுச் செயலாளருக்குத் தலைமைக் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்; அல்லது மின் அஞ்சல் (sangolimdmk@gmail.com) வழியாகவும் அனுப்பி வைக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட பழ.கௌதமன் உடனடியாக இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பதிவில், ‘மகிழ்ச்சி. நன்றி. தயவுசெய்து ஆறுதல் வார்த்தைகளும் வேண்டாம், அறிவுரைகளும் வேண்டாம்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மதிமுகவினர் பலர் வைகோவின் இந்த நடவடிக்கையை ரசிக்கவில்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்தால் உள்கட்சி ஜனநாயகம் எப்படி இருக்கும் என்று மதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். இதைவிட சுவாரஸ்யமாக, நீக்கப்பட்டவர்களின் ஸ்டேட்டஸில் சில திமுகவினர் போய், ‘அண்ணே நீங்க இருக்க வேண்டிய கட்சி திமுக, வாங்கண்ணே’என்று வரவேற்கிறார்கள்.
ஸ்டேட்டஸ் போட்டதற்காகக் கட்சியில் இருந்து நீக்கும் புதிய ட்ரெண்டை வைகோ தொடங்கி வைத்திருக்கிறார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக