செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பிறந்த நாள் செப் . 5 ..

செக்கிழுத்த புண்ணை எல்லாம் செந்தமிழால் ஆற்றிக் கொண்டேன் என்று அகமகிழ்ந்த அண்ணலே .. நாட்டுக்காக செக்கிழுத்து வாழ்விழந்த வள்ளலே .... நின் திருவடிகளில் என் கண்ணீர் பூக்களால் வணங்குகிறேன் 
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தமிழ்நாட்டுத் தேச பக்தர்களுள் ஒருவர். தேச பக்தர் என்றாலே திரு.பிள்ளை அவர்களைத்தான் குறிக்கும். நாட்டின்மீது அவருக்கிருந்த பற்று உள்ளபடியே அளவைக் கடந்தது எனக் கூறலாம்.
பெரியார், காந்தியடிகளுக்கு முன்பே திரு.பிள்ளை இந்தியாவில் தேச பக்தராய் விளங்கியவர். அவர் உலக மானிய பாலகங்காதர திலகர் அவர்களின் அரசியல் மாணவர் ஆவர். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தொண்டு செய்திருந்த காலத்திலேயே திரு.பிள்ளை அவர்கள் இந்தியாவில் தேசத் தொண்டு செய்தவர்கள்.
பிள்ளையவர்கள் பல முறை சிறை சென்றவர்கள். அவர் செய்த குற்றமெல்லாம், இந்நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு கொண்டதுதான். இக்காலத்தில் சிறைக்குச் செல்ல விரும்புவோர் பலருக்கு நன்கு தெரியும். முதல் வகுப்பும், முந்திரிப் பருப்பும், அல்வாவும், ஆரஞ்சுப் பழமும் கிடைக்குமென்பது. அந்தக் காலத்தில் அனைவருக்கும் தெரியும். செக்கு இழுத்துக் சீரழிய வேண்டும்மென்பது. கற்கள் உடைபட வேண்டும். இன்றேல், பற்கள் உடைபட நேரிடும்.
குற்றுவதெல்லாம் நெல்லாய் இருக்கும். உண்பதெல்லாம் களியாய் இருக்கும். இக்காலம், சிறைக்குத் சென்றவர்கள் போற்றுதலும் துயரமும் பெருகிறகாலம். முடிவாகக் கூறவேண்டுமானால், அக்காலம் எல்லாச் சாதியினரும் சிறைக்குச் சென்றவர்களை வெறுத்து, சமூக பகிஷ்காரம் செய்த காலம் எனக் கூறலாம். அப்படிப்பட்ட காலத்திலேதான் திரு.பிள்ளை அவர்கள் சிறை புகுந்தார்கள். செக்கும் இழுத்தார்கள். களைப்பு மிகுதியினால் குடிக்கத் தண்ணீர் கேட்டு நீர் பெறாமல் சவுக்கடியையே பெற்றார்கள். சில நாள்கள் அல்ல... பல ஆண்டுகள் நாட்டுப் பற்றுக் காரணமாக உயிர்போகும் வேதனையைப் பெற்று வாடி வதங்கி வருந்தி உழைத்தவர் திரு.பிள்ளை அவர்கள் ஆவர்.
படிப்பு இல்லாமல் தேசத்தொண்டு செய்யப்போன வல்லர் அவர். அக்காலத்திலேயே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். தொழிலில்லாமல் தேசத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தவர். வருமானமில்லாமையால் தேசபக்தி காட்டப் புறப்பட்ட வக்கீல்களைச் சேர்ந்தவர் அல்லர் அவர். தொழிலில் நல்ல வருமானத்தைப் பெற்று வந்தவர். புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டுப் பொதுத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அல்லர் அவர். எவ்வளவு கத்திப் பேசினாலும், இந்துவும் சுதேசமித்திரனும் ஏழு எட்டு வரி கூட எழுதாத காலம் அது. அப்படிப்பட்ட காலத்திலேதான் இப்படிப்பட்ட பிள்ளை அவர்கள், தேசத்தொண்டு செய்து வந்தார்கள். உள்ளத் தூய்மையையும் உழைப்பின் சிறப்பையும் விளக்க இதைவிட வேறெதுவும் கூற வேண்டுவதில்லை.
உயர்ந்த அறிஞர்கள் உயிரோடிருக்கும்போது அவர்களைச் சிறிதும் மதியாமல், அவர்கள் அறிவைப் போற்றாமல், செயலை வாழ்த்தாமல், நடத்தையைப் பின்பற்றாமல், அவர்கள் வருந்தும்போது ஒருவேளை உணவுக்கும் வழி செய்யாமல், மாண்ட பிறகு மணி மண்டபம் கட்டுவதும், காலடி பட்ட மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றுவதும், ‘மாண்டாயோ மன்னவனே’ என மாரடித்து அழுவதும், படம் திறப்பதும், பாக்கள் பாடுவதும், பூமாலை சாற்றிப் போற்றிப் புகழ்வதும் ஆகிய பழக்கத்தைக் கொண்ட இப்பாழாய்போன தமிழ் நாட்டிலேதான் திரு.பிள்ளை அவர்களும் பிறந்தார்கள். அதானாலேயே அவர்களும் இக்கூற்றுக்கு இலக்கானார்கள்.
இன்னும் ஒருபடி தாண்டி, வாழ்ந்தபோது வைது கொண்டிருந்தவர்கள், மாண்ட பிறகு மாறி, நாட்டுக்கு அவர் பெயரும், ஊருக்கு அவர் சிலையும் வேண்டுமென ஊருக்கு முன்னே ஓடோடி ஆலோசனை கூறும் மக்களுள்ள இத்தமிழ் நாட்டிலே திரு.பிள்ளை அவர்கள் பிறரால் வையப்பட்டாலும் வாழ்த்தப்பட்டாலும் வாழ்ந்து வந்தது ஒரு சிறப்பேயாகும்.
திரு.பிள்ளை அவர்களின் பேச்சு, நரம்புத் துடிப்புடன் எலும்புகளையும் துடிக்கச் செய்யும். உணர்ச்சி கலந்த அரசியல் ஆவேசப் பேச்சுகள் திரு.பிள்ளை அவர்களோடு மறைந்து ஒழிந்தன.
பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிகள் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கட்டணத்தை உயர்த்தித் தமிழ்நாட்டு வர்த்தகத்துக்கே கேடு விளைவித்தன. இதையறிந்த திரு.பிள்ளை அவர்கள், அவர்களோடு போராடியும், நியாயத்துக்கு இணங்க மறுத்ததனால் அவர்களோடு போட்டியிட்டு தாமே ஒரு கப்பலை ஓட்டியும் தமிழ்நாட்டு வர்த்தகத்துக்குத் தொண்டு தலைவராயிருந்தவர்.
அவர் ஒருமுறை சிறை சென்றபோது, தூத்துக்குடி ரயில்வே நிலையமும் சர்க்கார் கட்டடங்களும் தூள் தூளாக்கப்பட்டன. நெருப்புப் பொறிகளும் பறந்தன. அரசாங்கமே நடுங்கி அஞ்சுகின்ற அளவுக்கு அவர் ஊர் ஆபத்தான மனிதரெனக் கருதப்பட்டார்.
அவருடைய தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டிலே நன்கு பதிக்கப் பெற்றிருக்கிறது. அதுதான் “திருக்குறள் வ.உ.சிதம்பரம்பிள்ளை பதிப்பு”என்பது. அது இன்றும் நம்மிடையே இருந்துகொண்டு அவரையும் அவரது தமிழ்ப்பற்றையும் நினைபூட்டி வருகிறது.
திரு.பிள்ளை சிறையிலிருப்பார். வீட்டிலிருந்து செய்தி வரும். வருகின்ற செய்தி, “குழந்தைகளுக்கு துணியில்லை. உணவுக்கு வறுமையில்லை” என்றிருக்கும். கண்கள் கலங்கும். மனம் கலங்காது. இத்தகைய செய்திகள் பலவற்றை, அரசாங்க அதிகாரிகளே அவரிடம் அனுப்பிவைப்பார்கள். காரணம், எந்த வகையிலாயினும் மன்னிப்பைப் பெற்று விடுதலையடைந்து வெளியேற வேண்டுமென்பதுதான். இருமுறை ஆயுட்கால தண்டனை, அந்தமான் தீவுக்கு நாடு கடத்தும் தண்டனையைப் பெற்று, செக்கிழுத்து வாடி வதங்கி அடைத்துப்போன காதுகளுக்கு இச்செய்திகள் எட்டும். அவர் மடிவதில் மனம் கொண்டாரேயன்றி, மன்னிப்பில் மனம் கொள்ளவில்லை.
நாட்டுத் தலைவர் ஒருவரின் மனைவியையும் மக்களையும் காப்பாற்றத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாமையினால், அவர்கள் விரும்பி உதவி செய்யவில்லை. அவர் வாழ வகையின்றி வருந்தினார். “இப்படிப்பட்ட மக்களுக்காகச் சிறை புகுந்து, செக்கிழுத்து மடிவதும், நம்மை நம்பியுள்ள மனைவி மக்களை இப்படிப்பட்டவர்களிடம் உயிரோடு ஒப்புவித்து அவர்களையும் மடியச் செய்வதும் நியாயமாகுமா?” என்று சிறையில் பல ஆண்டுகள் எண்ணி எண்ணி நொந்தார். கடைசியாக ஒரு நாள் கோர்ட்டு அவருக்கு மன்னிப்பு அளித்தது. அவர் மீண்டும் வக்கீல் தொழிலை நடத்தினார். நான் திரு.பிள்ளை அவர்களோடு சேர்ந்து நான்கு கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசுகின்ற சில ஊர்களுக்கும் அவர்கள் வந்திருக்கிறார்கள். தமிழுக்காக அவர்மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அதற்காக என்மீது அவருக்குப் பற்றுதல் உண்டு. தமிழ் ஒன்றே எங்களைப் பிணைத்தது.
அரசியலிலே நாங்கள் மாறுபட்ட கொள்கையுடையவர்கள். வேறுபட்ட இயக்கங்களைச் சார்ந்தவர்கள். பிள்ளையவர்கள் ஒருநாள் என்னைத் தட்டப்பாறையில் சந்தித்து , “உங்களைப் போன்றவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை விட்டு, காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேர வேண்டும்” எனக் கூறினார்கள். எனது இளமை முறுக்கினாலும், ரத்தத் திமிரினாலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கடுஞ் சொற்களைக் கூறிவிட்டேன். அது நிகழ்ந்து இன்றைக்கு முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின என்றாலும், இன்றைக்கும் அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அச்சொல் "உங்கள் அறிவும், திறமையும், உழைப்பும், தமிழர் நலனுக்குப் பயன்படாமல் அறியாமை காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகின்றன. அத்தவறை நானும் செய்ய வேண்டுமா?” என்பதுதான். இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை, அவர்கள் வீட்டுக்கு என்னை அழைத்து சென்று பல மணி நேரம் நிலைமையை விளக்கி, எனது கருத்தை மாற்றி, அவர் தவறு செய்யவில்லை என மெய்ப்பித்ததுதான். பொதுவாக அவர்கள் உள்ளத்தைத் திறந்து காட்டி, தம்முள்ளத்தே மறைத்து வைத்திருந்த பல செய்திகளையும் கூறிக் கண் கலங்கினார்கள். வருந்தினேன். எனது வலக்கையால் அவரது கண்ணீரைத் துடைத்ததுதான் இன்றைக்கு ஆறுதலாய் இருந்து வருகின்றது. அவர் கூறிய செய்திகளை வெளியிடும் காலம் இன்னும் வரவில்லை. அவர் மனைவியார் என் வயிற்றுக்கு ஒருவேளை உணவளித்தார்கள். அவரோ, என் அறிவுக்குப் பல நாள் உணவளித்து மறைந்தார். அவர் அளித்த உணவு, “எவரையும் வையாதே, வைவது தமிழன் பண்பன்று - பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே. எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு. தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான்.
திரு.பிள்ளை அவர்களின் அறிவுரையும் அற உரையுமாகிய இது எனக்குப் பயன்பட்டது. உங்களுக்கும் பயன்படுமா? முயலுங்கள்.
எனது தலை, சிலருடைய திருவடிகளில் மட்டுமே வணங்கியிருக்கிறது. திரு.பிள்ளை அவர்கள் திருவடிகளும் அவற்றுள் சேர்ந்ததுதான். காரணம், பிள்ளையவர்கள் பொய் பேசுவதில்லை என்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கையாகக் கொண்டு உண்மையையே பேசி வந்தார்கள். அதுமட்டுமின்றி உயிர் போகும் வரை ஒழுக்கத்தைக் கையாண்டு வந்த ஒரே தலைவர் அவர் என்பதும் ஆம்.
வாழ்க வ.உ.சி புகழ்!
வாழ்க அவர் பிறந்த நாடு!
குறிப்பு: கி.ஆ.பெ.விசுவநாதம், வ.உ.சி-யைக் குறித்து எழுதிய கட்டுரை. இக்கட்டுரையில் நீதிக் கட்சிக்கு வருமாறு வ.உ.சி-யை அழைத்தபோது காங்கிரஸ் இயக்கத்தில் நான் ஏன் இருக்கிறேன் என்பதை விசுவநாதத்திடம் அறிவுறுத்தியுள்ளார். எனினும், வ.உ.சி-க்கு ம.பொ.சி. அவர்கள் மிகவும் முயற்சி செய்து சிலை எடுத்தபோது காங்கிரஸ் கட்சி பல்வேறு வழிகளில் அதனைத் தடுக்க முயற்சி செய்ததை ‘எனது போராட்டம்’ நூலில் விளக்கியிருப்பார். இக்கட்டுரை 1954இல் பாரி நிலைய வெளியீடாக வந்த ‘எண்ணக் குவியல்’ நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக