செவ்வாய், 5 செப்டம்பர், 2017

BBC : நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் திமுக மாநாடு

கட்டாய நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறி,அவரது மரணத்திற்கு நியாயம் கேட்கவும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரவும், அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை திமுக திருச்சியில் வெள்ளிக்கிழமையன்று> (செப்டம்பர் 8) நடத்தவுள்ளது. சென்னை அறிவாலயத்தில் திங்களன்று (செப்டம்பர் 4) அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, திருச்சியில் எல்லா கட்சியினரும் ஒன்று கூடும் நிகழ்வு முதற்கட்டமானது என்றார்.
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கவும், உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மத்திய அரசு உடனே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக திருச்சி மாநாடு அமையும் என்றார் ஸ்டாலின்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுபேற்க வேண்டும், நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டம் நடத்துவது ஆகியவை பிரதான தீர்மானங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நீட் தேர்வு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு தனது 92 வது அறிக்கையில் விருப்பம் இல்லாத மாநிலங்களை விட்டுவிட்டு நீட் தேர்வை அமல்படுத்தலாம் என்று அறிக்கை அளித்தபின்னரும் நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வுக்கு தற்காலிக விலக்குக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக