வெள்ளி, 15 செப்டம்பர், 2017

கிரேஸ் பானுவை ரிமாண்டில் நிர்வாணமாக்கிய காண்டுமிராண்டி போலீஸ் ...

மிகுந்த வலியோடு, நிர்வாணமாக தலைகுனிந்து நின்றேன்...திருநங்கை கிரேஸ் பானு நீட் தேர்வை  எதிர்த்துப் போராட்டம் நடத்திச் சிறை சென்ற திருநங்கை கிரேஸ் பானுவை, சிறைக் காவலர்கள் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர்.நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற அவலம் இனியும் தொடரக்கூடாது என்ற காரணத்தால்தான் கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். உலக வணிக அமைப்பில் உள்ள கல்வியை, சேவைப்பட்டியலில் சேர்க்கக்கோரியும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினோம். அப்போது அங்கு வந்த போலீஸார், ‘ரிமாண்ட் செய்யமாட்டோம்’ என்று கூறி, பின்னர் எங்களைக் கைதுசெய்து, பல மணி நேரம் அலைக்கழித்து நள்ளிரவில் மேஜிஸ்டிரேட் முன்பு நிறுத்தினர். அதன் பின்னர் மேஜிஸ்டிரேட், எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், ‘பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்றும் கூறினர்.

அப்போது நான், ‘ஏன் நிர்வாணமாக நிற்க வேண்டும். நாங்கள் ஒன்றும் கஞ்சா விற்றுவிட்டோ அல்லது வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டோ இங்கு வரவில்லை. மக்களுக்கான போராட்டத்தை நடத்திவிட்டுத்தான் சிறைக்கு வந்துள்ளோம். அதற்கு ஏன் எங்களை நிர்வாணமாகச் சோதனை செய்யவேண்டும்’ என்று கேள்வி எழுப்பினேன். ‘இல்லை… நீங்கள், திருநங்கையா என்பதற்கு அறுவை சிகிச்சை செய்தீர்களா’ என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’ எனக் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் பேசினர்.பெண் கைதிகள் சிறையில் உங்களை நாங்கள் அனுமதிப்பது தவறு… நீங்கள், அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், எங்களுக்குத்தான் பிரச்னை வரும். அதனால், நீங்கள் நிர்வாணமாக நிற்கத்தான் வேண்டும்’ என்று நிர்பந்தம் செய்தனர்.
அதற்கு நான், ‘என்னுடைய பெயர் கிரேஸ் பானு. அரசு கெஜட்டிலும் மாற்றியுள்ளேன். அரசும், என்னை கிரேஸ் பானு என்றே அங்கீகரித்துள்ளது. ‘கிரேஸ் பானு’ என்ற அடையாள அட்டையும் வழங்கி உள்ளது. நான் அறுவைசிகிச்சை செய்யாமல் எப்படி அரசாங்கம் எனக்கு அங்கீகாரம் அளிக்கும்’ என்று கேள்வி எழுப்பினேன். ‘நீங்கள், என்ன ஸ்கிரீனிங் (screening) டெஸ்ட் எடுக்கிறீர்களா? நான் எதற்கு உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்று மறுப்பு தெரிவித்து பலமணி நேரம் போராடினேன். என்னுடைய பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்தனர் .#அந்த நேரத்தில் என் மனநிலை என்னவாக இருந்திருக்கும், யோசித்தார்களா… அந்தக் காவலர்கள்?அவர்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா? அதைவிடக் கொடுமை, அறுவைசிகிச்சை செய்துகொண்ட இடத்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன். அந்த இடத்தில் ஒரு பெண் வந்திருந்தால், ‘நீ பெண்தானா’ என்று கர்ப்பப்பையைக் காட்டச் சொல்வார்களா இந்தப் போலீஸார்? தரம் தாழ்ந்து நடந்துகொண்ட அந்தப் பெண் போலீஸாரை எந்த இனத்தில் சேர்ப்பது? தனிமனித சுதந்திரத்தைப் பற்றிப் பேகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். தனிமனித உரிமை பற்றிச் சட்டம் படித்த போலீஸாரே அசிங்கமாக நடந்துகொண்டார்களே… இதுதான் தனிமனிதச் சுதந்திரமா?
மிகுந்த வலியோடு, நிர்வாணமாக தலைகுனிந்து நின்றேன். அதன் பின்னர், சிறை விதிமுறைப்படி ‘குவாண்டி செக்‌ஷன்’ என்ற பிரிவில் ஒருநாள் வைத்திருந்துவிட்டு, அடுத்த நாள் ரிமாண்ட் பிரிவுக்கு அனுப்பவேண்டும். ஆனால், எங்களை ரிமாண்ட் பிரிவுக்கு அனுப்பவே இல்லை. ‘எங்களை, ஏன் ரிமாண்டுக்கு அனுப்பவில்லை’ என்று கேட்டால்… ‘உங்களைப் பெண் கைதிகளுடன் வைக்க முடியாது’ என்று கூறினர். ‘சரி, பெண் கைதிகளுடன் வைக்க வேண்டாம். ஆண் கைதிகளுடன் வைக்க வேண்டியதுதானே’ என்று அவர்களிடம் வாதாடினேன். ‘எங்களுக்கு நீங்கள் கட்டளையிட வேண்டாம். உங்களை எங்கு வைக்க வேண்டும்… எங்கு வைக்கக்கூடாது’ என்பது எங்களுக்குத் தெரியும். ‘வாயை மூடிக்கிட்டு வா’ என்று அசிங்கமாகச் சொல்லி,தொற்றுநோயுள்ள கைதிகளை அடைத்துவைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்துவைத்தனர்.
உச்ச நீதிமன்றமே, ‘திருநங்கைளைப் பெண்களாகக் கருதவேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளது. அப்படியிருக்கையில், சிறையில் உள்ள காவலர்கள் நடந்துகொண்டது அறமா? இன்னும் எங்கெல்லாம் நாங்கள் புறக்கணிப்பையும்… அவமானத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கும் ஒரு சட்டம் கொண்டுவாருங்கள்… பொறுத்துக்கொள்கிறோம்” என்றார் ஆவேசத்துடன்.
கடந்த ஆகஸ்ட் 2 -ம்தேதிதான், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதில், ‘திருநங்கைகளின் உரிமைகள் முழுவதுமாகப் பாதுகாக்கப்படும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. கிரேஸ் பானுவை நிர்வாணமாக்கி நிறுத்தி பார்த்திருப்பதுதான் திருநங்கைளின் உரிமைகளைப் பேசும் பாதுகாப்பு மசோதாவா?
பி.கு: இந்தச் செய்தியில் தங்கள் படத்தைப் பயன்படுத்த வேண்டுமா என தயக்கத்துடன் கேட்ட போது… “பயன்படுத்துங்கள், நான் எனக்கான நீதியைத்தான் கேட்கிறேன், தவறு செய்தவர்கள்தானே பயப்படவேண்டும்”Grace Banu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக