வெள்ளி, 15 செப்டம்பர், 2017

BBC :இந்தி தினம்: .. இந்தி ஆதிக்க தினம் ! இந்தி பேசாத மாநிலங்கள் மீது மோசமான வன்முறை’

இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும்
இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல தசாப்தங்களாக இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த வரலாறு கொண்ட தமிழ் நாட்டில், இந்தி தினம் குறித்த கருத்துகள் எப்படி இருக்கின்றன ?
இந்தி தினம் கொண்டாடப் படுவதையொட்டி தமிழ்நாட்டில் சில மத்திய அரசுத் துறைகள் சார்பில், இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து ‘தமிழில்’ கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்துள்ளன. பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும் இந்தி மொழி தினத்தை வெவ்வேறு வழிகளில் அனுசரித்துள்ளன.< ஆட்சியில் அமர்ந்த திராவிடக் கட்சிகள்: சுதந்திரத்துக்கு முன்பே, 1937-ஆம் ஆண்டு பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், பள்ளிகளில் இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கியபோது அதற்கெதிராக நீதிக்கட்சியும், பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான இயக்கமும் எதிர்த்தன.

கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டனர். போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் மரணம் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. கடைசியாக, 1940-இல் அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் ஜான் அர்ஸ்கின் அரசின் உத்தரவைத் திரும்பப் பெற்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தி கற்பிப்பதை கட்டாயமாக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு அப்போதைய மதராஸ் மாகாண அரசும் ஒப்புக்கொண்டதால் மீண்டும் இந்திக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து இந்தி விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டது.
1950-இல் சுதந்திர இந்தியாவில் அமலுக்கு வந்த அரசியல் சட்டத்தில் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும் ஆனால் ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இந்தியுடன் ஆட்சிமொழியாகத் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த 15 ஆண்டு காலக்கெடு முடிவடையவிருந்த நிலையில், இந்தி மொழி ஒரே ஆட்சி மொழியாக அறிவிக்கப்படக்கூடிய சூழ்நிலையால், தமிழ் நாட்டில் வெடித்த இந்தி எதிர்ப்பு உணர்வை அடுத்து, இந்தி மொழி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும் என்று உத்தரவாதமளித்தார் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.
1965-இல் அந்த 15 ஆண்டுகள் முடிந்ததும், பிரிக்கப்பட்ட மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான தமிழ் நாட்டில் மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கின. அந்தப் போராட்டங்கள் திராவிடக் கட்சியான தி.மு.க, காங்கிரசிடம் இருந்து 1967ல் நடந்த அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தன.

அதன் பின்னர் திராவிடக் கட்சிகளான தி.மு.
க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளே தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. இன்று வரை காங்கிரஸ் கட்சியால் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஆட்சியை இழக்க முக்கியக் காரணம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களே.

பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், இந்தி தினம் என்று ஏன் கொண்டாட வேண்டும், ‘இந்திய மொழிகள் தினம்’ என்று ஏன் கொண்டாடக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
“அனைத்து மாநில மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறும்போது, ஒரு மொழியை மட்டும் வளர்த்து, அதன் ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதற்காக ஒரு நாள் கொண்டாடப்படுவது, இந்தி பேசாத மாநிலங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒரு மோசமான வன்முறை என்று கூறினார்.”
“தமிழகத்தில் மக்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் இந்தி படிப்பதில் இந்தப் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், இந்தி படித்தால்தான் தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை என்று சொன்னால் கண்டிப்பாக எதிர்ப்போம்,” என்று கூறினார் செந்தில்நாதன்.
இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வளர்ச்சி மோசமான நிலையில் இருப்பதாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் இருப்பதுபோல நமது கல்விக் கொள்கையில் தாய் மொழிக்கு முக்கிய இடம் இல்லை என்றும் அவர் கூறினார்.தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சி அமைக்க இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் முக்கியக் காரணமாக இருந்தது. < ’ஆங்கிலமே போதுமானதாக இருந்தது’
தமிழ்நாட்டில் தற்போது தங்களிடம் இந்தி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2.20 லட்சமாக உள்ளது என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் தக்ஷிண பாரத் இந்தி பிரசார் சபா சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகர்தலாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் இளநிலைப் பட்டம் படித்தபோது முதல் மூன்று ஆண்டுகள் தனக்கு இந்தி தெரியாது என்றும், அதன் பின்னர் அடிப்படை இந்தி மட்டுமே கற்றுக்கொண்டதாகக் கூறும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சோ.சாய்குரு, நண்பர்களிடம் அதிகமாகப் பேசுவதைத்தவிர வேறு எதையும் தான் பெரிதாக இழக்கவில்லை என்று பிபிசி தமிழிடம் கூறினார்.
தற்போது அவர் ஐ.ஐ.டி டெல்லியில் முதுநிலைப் பட்டம் படித்து வரும் அவர் பிறருடன் உரையாட ஆங்கிலமே போதுமானதாக இருந்தது என்று கூறினார். ’தமிழ் வாரம் கொண்டாடிக்கொள்ளட்டும்’ பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் பஞ்சாப், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பிபிசி தமிழிடம் கூறினார்.
“தமிழகத்தில் இந்தியை எதிர்ப்பவர்கள் தமிழ் வாரம் என்று கொண்டாடிக்கொள்ளட்டும். யார் அவர்களைத் தடுத்தது?,” என்று கூறும் அவர், சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் இந்தி படித்தவர்களுக்கு சுலபமாக அமையக்கூடிய வகையில் வினாத்தாள்கள் இருந்ததால் தமிழ்நாட்டில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்குக் கூட வட இந்திய மாநிலத்தவர்கள் அதிகம் தேர்வானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்,” என்று பதில் அளித்தார்.
“கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் அவர்கள் மாநில மொழி கட்டாயமாக இருப்பதுபோல, இங்குள்ளவர்கள் ஏன் தமிழைக் கட்டாயமாக்கவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக