மின்னம்பலம் : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் மதுக்கடைகள், பார்களை மீண்டும். திறக்கத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுபான விற்பனைக் கடைகளால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இந்தக் கடைகளை அகற்ற வேண்டும்'' என்று வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், 'தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள கடைகளை அகற்ற வேண்டும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குக் கடைகளை அமைக்கக் கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் கடைகளுக்கு மார்ச் 31 வரை அளிக்கப்பட்ட அனுமதியைப் புதுப்பிக்கக் கூடாது, கடைகளை நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும் என்று கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்து இருந்த 3,400 கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், இந்தத் தடை குறித்து, உச்ச நீதி மன்றம் சமீபத்தில் ஒரு விளக்கம் அளித்தது. அதில், பெருநகரங்கள், நகரங்கள், கிராமங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை ஒட்டி மதுக் கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத்தடை உத்தரவில், நகர் பகுதிகளில், உரிமம் பெற்று, மது விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து தமிழக அரசு இன்று (செப் .1) ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி எல்லைகளில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஏதேனும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தால் அவற்றைத் திறக்கலாம் என்று தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
மேலும், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதா, திறக்கப்பட்ட மதுக்கடைகளின் நிலை என்ன என்பது தொடர்பாக அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மதுக்கடைகளுக்கு எதிராகத் தீவிர போராட்டம் நடந்துவரும் வேளையில் அரசின் இந்த உத்தரவு மது எதிர்ப்பு அமைப்பினர் மற்றும் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக