வெள்ளி, 1 செப்டம்பர், 2017

மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !

நம் மீது நம்பிக்கை இழந்த அந்தத் தருணத்தில் தான் அனிதா பாசிஸ்டுகளால் ‘கொல்லப்பட்டார்’. என்ன செய்யப் போகிறோம்?
னிதா, அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி. இவரது தந்தை, சுமை தூக்கும் கூலித் தொழிலாளி . பத்தாண்டுகளுக்கு முன்னரே தனது தாயை இழந்த அனிதா, மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து அனிதாவின் கனவில் ’நீட்’ என்னும் கொள்ளி வைத்து கனவைக் கருக்கி விட்டனர்.
தனது மருத்துவராகும் கனவைச் சுமந்தபடி, அதற்கான முழு முயற்சிகளையும் செய்து படித்தார் அனிதா. அதன் விளைவாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு கட்- ஆஃப் மதிப்பெண்ணாக 196.75 பெற்றிருந்தார்.

இந்த ஆண்டு நீட் தேர்வு முறையின் மூலம் தான் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவில் இருள் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு கல்வியாளர்களும் மருத்துவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடினர்.
பணமிருக்கும் மாணவர்கள், நீட் பயிற்சிக்குச் சென்று நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஏழை மாணவர்களின் நிலை? சுமை தூக்கும் தொழிலாளியான அவரது தந்தையால் எங்கிருந்து ’நீட்’ பயிற்சிக்கு இலட்சங்களில் பணத்தைக் கொட்ட முடியும்?
’நீட்’ ஏழைகளுக்கு எதிரானது என்பதை உணர்ந்த அனிதா அதற்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களிலும் பங்கேற்றார். உச்சநீதிமன்றத்தில் ’நீட்’டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் மூலமாக எவ்வாறு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு துரோகமிழைப்பதாக ‘நீட்’ தேர்வு  முறை உள்ளது என்பதை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் இவ்வாதங்கள் அனைத்தையும் தூக்கிக் குப்பையில் எரிந்தது உச்சநீதிமன்றம்.
கடைசியாக ’அவசரச் சட்டம்’ என்ற பூச்சாண்டியைக் காட்டி ஏமாற்றியது மாநில அரசு. காரியம் ஆகும் வரை அதற்கு ‘ஆமாம் சாமி’ போட்டது மத்திய அரசு. தமிழகத்தில் தனது எடுபிடி கும்பல்கள் அதிமுகவில் ஐக்கியமானதும், உச்சநீதிமன்றத்தில் அவசரசட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டு மொத்தத் தமிழர்களின் முதுகிலும் குத்தியது மத்திய அரசு. உச்சநீதி மன்றமும் தமிழகத்தில் நீட் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பெழுதியது. அனிதாவின் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்
அனிதாவின் மருத்துவக் கனவு சிதைந்தது. அனிதாவிற்கு நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் சீட் கிடைக்கவில்லை. கடந்த 3 நாட்களாக யாரிடமும் அதிகமாகப் பேசாமல் சோகமாக இருந்த அனிதா இன்று பிற்பகலில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அனைத்து செய்தி ஊடகங்களும், பரபரப்புச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவரகள், பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்றும் மற்ற நீட்டுக்கு எதிராகப் போராடிய அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களிடமும் பேட்டி எடுத்துப் போடுகின்றன. ஆனால் அனிதாவைக் கொலை செய்த எந்த ஒரு பாஜக கிரிமினலிடமும் இது குறித்து கருத்துக் கேட்க மறுக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய், நியூஸ் 18 தொலைக்காட்சி, ஒரு கேள்வியை கேட்கிறது. ”அனிதாவின் மரணத்திற்குப் பொறுப்பானவர் யார்? மாணவர் அமைப்புகளா ? அரசியல் கட்சிகளா ? அல்லது சமூக ஜனநாயக அமைப்புகளா ?” ஆனால் பெயருக்குக் கூட மத்தியில் ஆளும் கிரிமினல் கும்பலின் பெயரைக் குறிப்பிடவில்லை.  ரஜினி, கமல் போன்ற காரியவாதிகளும் பாஜகவைக் குறிப்பிடாமல் தங்களது அனுதாபங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
ஊடகங்களும், சினிமா கழிசடைகளும் மத்திய அரசின் குற்றங்களை மனதளவில் கூட கண்டிக்க மாட்டார்கள் என்பது  ஜல்லிக்கட்டு போராட்டத்திலேயே அம்பலத்திற்கு வந்த விசயம் தான். ஆனால், போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் ?
சினந்தெழ வேண்டிய நேரம் இது .. வீதியில் இறங்க வேண்டிய வேளை இது ..
மீண்டும் நடத்துவோம் டெல்லிக் கட்டு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக