வெள்ளி, 1 செப்டம்பர், 2017

ஊட்டியில் படப்பிடிப்புக்கு கெடுபிடி .. சினிமா தொழிலை பதம் பார்க்கும் மாமூல் அதிகாரிகள் !

ஆர்.டி.சிவசங்கர்: ஒரு காலத்தில், ரிச்சான அவுட்டோர் ஷூட்டிங் என்றாலே அது ஊட்டியாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது ஊட்டி பகுதியில் படப்பிடிப்பு வாகனங்களைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாய் இருக்கிறது.
கருப்பு – வெள்ளை காலம் தொட்டு தற்போதைய டிஜிட்டல் யுகம் வரை ஊட்டியில் படப்பிடிப்பு நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குநர்களின் கதைக் களமாக உதகை இருந்துள்ளது. முன்பு, குளு குளு காட்சிகளை படம்பிடிக்க காஷ்மீருக்கும் சிம்லாவுக்கும் ஓடிக் கொண்டிருந்தவர்கள், காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்துக்குப் போனதும் ஊட்டிப் பக்கம் திரும்பினார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஊட்டியும் கேமரா கண்களுக்கு குளுமை தந்தது. இதனால், பிறமொழி இயக்குநர்களும் ஊட்டிக்கு வண்டியைத் திருப்பினார்கள்.
வருமானம் தந்த சினிமா

சினிமா கம்பெனிகளின் இந்த தொடர் படையெடுப்பு ஊட்டி மக்களின் பொருளாதாரத்துக்கும் வெகுவாக உதவியது. சினிமாக் கம்பெனிகளுக்குத் தேவையான வாகனங்கள் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்தல் என ஊட்டி மக்களுக்கு ஏகத்துக்கும் வருமானம் தந்தது சினிமா தொழில். இதுதவிர, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் தேவையையும் உள்ளூர் மக்களே பூர்த்தி செய்தார்கள்.
இந்த வருமானமெல்லாம் இப்போது சுத்தமாய் அடைபட்டுவிட்டது. காரணம், படப்பிடிப்பு நடத்த வனத்துறையினர் விதிக்கும் கெடுபிடிகள் என்கிறார்கள். ஊட்டியில் சினிமா கம்பெனிகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்களை ரெடிசெய்து கொடுக்கும் புரொடக் ஷன் மேனேஜர் ஏ.டி.லாரன்ஸ் இதுகுறித்து நம்மிடம் பேசினார். “ஊட்டியில் பூங்காக்கள், சாலைகள், அரசு கட்டிடங்களில் படப்பிடிப்பு நடந்தால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்; சுற்றுலாவும் மேம்படும். ஆனால், இப்போது இங்கே படப்பிடிப்பு நடத்துவதே பெரும் சவாலாய் இருக்கிறது.
கடுமையாக்கப்பட்ட நடைமுறைகள்
நகராட்சிப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமாகவும், பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த ரூ.50 ஆயிரமாகவும் படப்பிடிப்புக் கட்டணங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. அத்துடன், படப்பிடிப்புக்கு அனுமதிபெறும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.
ஊட்டியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தவேண்டுமானால் முன்பு, சென்னையிலுள்ள தலைமை வனப் பாதுகாவலரிடம் அனுமதி பெற்று அதற்கான கட்டணத்தை கட்டினால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் இப்போது, சென்னையில் அனுமதி பெற்றாலும் மாவட்ட வன அலுவலரிடம் ஒப்புதல் பெறவேண்டும். அந்த ஒப்புதலை சென்னைக்கு எடுத்துச்சென்று தலைமை வனப்பாதுகாவலரிடம் காட்டினால்தான் இறுதி அனுமதி கிடைக்கும்.
ஒற்றைச்சாளர முறையில்..
இதனால், முன்பு மூன்று நாட்களில் பெறப்பட்ட அனுமதிக்கு இப்போது 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால், படத்துக்கான பட்ஜெட் எகிறுவதுடன் நடிகர்களுக்கான கால்ஷீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டு, குறிப்பிட்ட நாளுக்குள் படப்பிடிப்பை முடிக்கமுடியாத சூழல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கல்களால்தான் இப்போது சினிமா கம்பெனிகள் ஊட்டிப் பக்கம் வரவே தயங்குகின்றன. பழையபடி ஊட்டிக்கு சினிமா கம்பெனிகள் வரவேண்டுமானால், படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிப்பதை ஒற்றைச்சாளர முறையில் எளிதாக்க வேண்டும்” என்றார் லாரன்ஸ்.
ஊட்டி அருகே கீழ் ஓடையரட்டி கிராமத்தில் தெலுங்கு படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்த ‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’ படத்தின் இயக்குநர் கிஷோர், ”ஊட்டியின் இயற்கை எழிலை வேறெங்கும் பார்க்கமுடியாது. அதனால் தான், கதை ஊட்டியில் நகர்வதுபோல என்னைப் போன்ற இயக்குநர்கள் களம் அமைக்கிறோம்; சிரமங்கள் பல இருந்தாலும் இங்கே படப்பிடிப்பை நடத்துகிறோம்.” என்கிறார்.
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கும் நடைமுறைகளை எளிதாக்கினால் மட்டுமே ஊட்டிக்கும் சினிமாவுக்குமான உறவு மீண்டும் மலரும்.
hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக