சனி, 5 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின் வேண்டுகோள் : டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்ப வேண்டும்

மின்னம்பலம் :‘தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்ப வேண்டும்’ என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு ஏற்கெனவே 41 நாள்கள் முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் உச்சகட்டமாய் நிர்வாணப் போராட்டம் நடத்தியும் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை 16 முதல் மீண்டும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 4ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…

“தாங்கமுடியாத கடன் தொல்லைகளால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் துயரத்தைக் கண்டு வேதனைப்படும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் (அதிமுக, பாஜக தவிர) ரயில் மறியல் உள்ளிட்ட எத்தனையோ போராட்டங்களை நடத்தி விட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் மற்றும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பியிருக்கிறது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு நானே கைதானேன்.
விவசாயச் சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி அனைத்து விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்த இருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் ஒருமுறை டெல்லியில் போராடினால் பிரதமர் நரேந்திர மோடி மனம் இரங்குவார் என்று நம்பி தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மீண்டும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு டெல்லியில் கிடைத்த பரிசு அடக்குமுறையும் கைதும் மட்டுமே. அதைவிட போராடும் விவசாயிகளுக்கு உயிர் பயம் ஏற்படுத்தும் வகையில் கொலை மிரட்டல்கள் விடுத்தும் வருகிறார்கள்.
‘கடன் தள்ளுபடி மாநில அரசின் கடமை’ என்று மத்திய பாஜக அரசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதும் வருத்தமளிக்கிறது. தஞ்சை தரணியிலிருந்து டெல்லிக்குச் சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கக்கூட பிரதமர் அவர்கள் மறுக்கிறார் என்பது உள்ளபடியே தமிழக விவசாயிகள் நாதியற்றவர்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஆனால், தமிழக விவசாயிகளுக்காக இந்த ஏழரைக் கோடி தமிழர்களும் குரல் எழுப்புவார்கள் என்ற உணர்வைகூட புரிந்து கொள்ளாமல் டெல்லியில் போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி மாநில பாஜக-வினர் பேசி வருவதும், சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்வதும் மிகுந்த கவலையளிக்கிறது. போராடும் விவசாயிகள் டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார்கள். அவரோ, ‘மதுக்கடைகள் மூடப்பட்டதால் என்னிடம் கடன் தள்ளுபடி செய்ய பணம் இல்லை’ என்று கை விரித்துள்ளார். ஆனால் அரசு செலவில் ஆடம்பர விழாக்கள் நடத்துவதற்கும், தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசு டெண்டர்களையும்’, ‘கான்டிராக்டுகளையும்’ அள்ளிக்கொடுக்க மட்டும் பணமும், மனமும் முதலமைச்சரிடம் இருக்கிறது.
விவசாயிகள் பற்றி கவலைப்படாத அரசு மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் நேரத்தில் டெல்லியில் போராட்டம் நடத்துவதால் எந்தப் பலனும் இருக்காது என்பது முதல் 41 நாள்கள் போராட்டத்திலும் தெரிந்துவிட்டது. இப்போது நடக்கும் 19 நாள்கள் போராட்டத்திலும் தெரிய வந்திருக்கிறது. ஆகவே, ‘கவலைப்படாதீர்கள். காலம் கனிந்து வரும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி விரைவில் அமையும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றப்படும்’ என்ற உறுதியை அளித்து, டெல்லியில் போராடும் விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறு என் இதயபூர்வமாக மட்டுமல்ல - உங்களுடன் ஒன்றிணைந்துவிட்ட உணர்வுடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக