சனி, 5 ஆகஸ்ட், 2017

மாநிலங்கள் அவையில் காங்கிரசை விட பாஜகவுக்கு அதிக ஆசானங்கள் ...

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, அதிக ராஜ்யசபா உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 13 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். இதில் கடந்த 2ஆம் தேதி வரை காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் தலா 57 உறுப்பினர்களுடன் சம பலத்தில் இருந்து வந்தன. இந்த நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக-வைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் சம்பதியா உகே, மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் பாஜக எம்.பி-க்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. மேலும், காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி மாநிலங்களவையில் முதன்முறையாக தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் குஜராத்திலிருந்து போட்டியிடும் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோரின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் மாநிலங்களவையில் பாஜக-வின் பலம் மேலும் அதிகரிக்கவுள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 57 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் பெரும்பாலான இடங்கள் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளது. மேலும் நாட்டின் 18 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சியே நடைபெறுகிறது. எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக