ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

மோடியின் நேரடி ஊழல்களின் ஒரு சிறிய தொகுப்பு:

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல் தொடுத்திருக்கும் மரணத் தாக்குதல்கள், விவசாயத்தில் அழிவு, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், அதிகரித்து வரும் பசு பயங்கரவாத தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சுகாதாரத்துறையின் சீர்கேடுகள், குழந்தைகள் மரணம், இந்தியாவின் கழுத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சீனக் கத்தி, எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், நட்பு நாடுகளாக இருந்த அண்டை நாடுகளின் விரோதம்..
கடந்த மூன்றாண்டுகளில் மோடி சந்தித்திருக்கும் தோல்விகளின் சிறிய பட்டியல் இவை. இன்னொருபுறம் தொடர்ந்து மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று வருகின்றது. இந்த வெற்றிகளுக்கு குறிப்பிட்ட மாநிலங்களில் நிலவும் உள்ளூர் அரசியலின் நிலை, சாதி வாக்கு வங்கிகளின் பலாபலன்களைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்வது, மத ரீதியில் சமூகத்தைப் பிளந்து வைத்திருப்பது, வலுவான எதிர்கட்சிகள் இல்லாத நிலை என பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும், அவையனைத்தையும் கடந்து “மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் பராமரிக்கப்படுகிறது.
தமிழகத் தொலைக்காட்சி விவாதங்களில் கூட ஊழல் என்றாலே அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு ஆகிய கட்சிகளோடு தொடர்புடைய விசயம் போலவும், பாரதிய ஜனதா ஊழலின் கறைபடாத புனிதப் பிறவி போலவும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுபுத்தியை அனைவரும் (தி.மு.க, அதிமுக உள்ளிட்டு) ஏற்றுக் கொண்டே விவாதிக்கின்றனர்.
ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?
இதோ மோடியே நேரடியாக பங்கேற்ற ஊழல்களின் ஒரு சிறிய தொகுப்பு:

2005 -ம் ஆண்டு தனது வழக்கமான பாணியில்; “கிருஷ்ணா கோதாவரி படுகையில் சுமார் 2.2 லட்சம் கோடி மதிப்பிலான எரிவாயு கண்டறியப்பட்டிருப்பதாக” அறிவித்தார் மோடி.
அதைத் துரப்பணம் செய்ய சுமார் 20,000 கோடி நிதியை ஒதுக்குகிறார். குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பரேஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடைந்தால், 2007 -ம் ஆண்டுக்குப் பின் இந்தியா பெட்ரோலை இறக்குமதி செய்யவே தேவையிருக்காது என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.
இறுதியில் மக்களின் வரிப்பணம் இருபதாயிரம் கோடியைக் கடலில் கொட்டிய பின்னும் எதிர்பார்த்த அளவில் எரிவாயு துரப்பணம் செய்யப்படவில்லை. கடைசியில் நட்டத்தில் மூழ்கிய குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி கையகப்படுத்த பிரதமரான பிறகு உத்தரவிடுகிறார் மோடி.
  • மோடி முதல்வராக இருந்த போது, சுமார் நானூறு கோடி மதிப்பிலான மீன் பிடி ஒப்பந்தம் முறையான டெண்டர் இல்லாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • சுமார் 6,237.33 கோடி மதிப்பில் 2003 -ம் ஆண்டு குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட சுஜலாம் சுபலாம் யோஜனா என்கிற திட்டத்தில் சுமார் 500 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதை குஜராத் சட்டமன்றப் பொதுக் குழுவே அம்பலப்படுத்தியது.
  • குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு (GSPC) சொந்தமான பிபாவாவ் மின் உற்பத்தி நிலையத்தை ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கு எந்த டெண்டரும் கோராமல் 381 கோடி ரூபாய் அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • மத்திய கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கைப்படி மோடி முதல்வராக இருந்த காலத்தில் போர்டு, எல்&டி, அதானி, எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு 580 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • ஆனந்தி பென் பட்டேலின் மகளுக்கு குஜராத் கிர் காடுகளுக்கு அருகில் உள்ள சுமார் 145 கோடி மதிப்பிலான 245 ஏக்கர் நிலம் வெறும் 1.5 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 16,000 ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் 32 ரூபாய் விலைக்கு அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, ஒரு சதுர மீட்டருக்கு 6000 ரூபாய்!. இதனால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 6,546 கோடி.
  • “ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்” மூலம் குஜராத்துக்கு அழைத்து வரப்பட்ட ரத்தன் டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு வழங்கிய மொத்த சலுகைகளின் மதிப்பு 33,000 கோடி. இதில் 1100 ஏக்கர் நிலம், சதுர மீட்டர் 900 ரூபாய் மதிப்புக்கு சல்லி விலைக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது. மேலும் இண்டி கோல்ட் ரிபைனரிஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 40 கோடி இழப்பு.
இவ்வாறு சலுகைகள் வழங்குவதால் தொழில்கள் வளர்ந்து அதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது முதலாளிய அறிஞர்களின் அருள்வாக்கு. ஆனால், குஜராத்தில் அவ்வாறு நிகழவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகளால் மக்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதானி என்கிற ஒரே ஒரு முதலாளியின் நிறுவனத்தின் வருமானம் 2002 -ம் ஆண்டு 3,741 கோடியாக இருந்து 2014 -ல் 75,659 கோடியாக உயர்ந்துள்ளது.
அதானியின் வளர்ச்சிக்காக வளைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் மீறப்பட்ட மரபுகளின் பட்டியல் மிக நீண்டது. நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் குஜராத்திகளுக்கு பட்டை நாமம் போட்ட விவகாரத்தை மாத்திரம் வருவாய் புலணாய்வுத்துறை முறையாக விசாரித்தால் சுமார் 15,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என்கிறார் அத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
இதோனேஷியாவில் உள்ள தனது நிலக்கரி நிறுவனத்திடமிருந்து 50 டாலர் மதிப்பு கொண்ட ஒரு டன் நிலக்கரியை 82 டாலருக்கு இறக்குமதி செய்துள்ளார். இவ்வாறு மிகை மதிப்பு கூட்டிய (Over invoiced) நிலக்கரியின் சுமையை மக்கள் சுமந்தனர் – ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் 1.5 ரூபாய் அதிகம் கட்டினர். இறக்குமதி விதிகளை மீறி மிகை மதிப்புக்கான ஆவணங்களை உருவாக்கவும், அரசை ஏமாற்றவும் மொரீஷியஸ் மற்றும் துபாய் வழியில் கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனையில் (Money laundring) ஈடுபட்டிருந்தார் அதானி.
கௌதம் அதானி பிரதமர் மோடியின் உற்ற நண்பர் என்பதையும், தேர்தல் பிரச்சார காலத்தில் அவரது விமானத்தைத் தான் மோடி டாக்சியாக பயன்படுத்தினார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
ஊழல் மட்டுமா, ஹிண்டால்கோ நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டில் குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடிக்கு நேரடியாக சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் ரொக்கமாக வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் சி.பி.ஐ கைப்பற்றியது. எனினும், அது தொடர்பான விசாரணை சூடுபிடிப்பதற்கு முன் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மோடி பிரதமராகி விட்டார். “சந்தர்ப்ப சாட்சியங்களின்’ அடிப்படையில் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், கையும் களவுமாக பிடிபட்ட மோடியின் வழக்கை ஊத்தி மூடியது என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை; என்றாலும் அப்படித்தான் நடந்தது.
அனைத்து முனைகளிலும் தோல்வியுற்று விட்ட மோடியை “யோக்கியன்” என்கிற அந்தக் கிழிந்த முகமூடி தான் பாதுகாத்து வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பாரதிய ஜனதா இறக்கி விட்டுள்ள கூலிப்படையினரும், ஊடகங்களுமாக சேர்ந்து மோடியின் முகமூடியையும் அவரது பிம்பத்தையும் காப்பாற்றி வருகின்றனர். மேலே பட்டியலிடப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பல்வேறு சந்தர்பங்களில் வெளியான தகவல்கள் தான் எனினும், தொடர்ந்து நினைவூட்டுவதும் மக்களின் நினைவுகளைத் தூண்டிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக