வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நீதிமன்றத்தில் பொய் உரைத்த கிர்ஜா வைத்தியநாதன்? ... பாவம் இவளொரு பாப்பாத்தி

பொய்யான ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கிரிஜா துணிந்தார் என்றால் அவரது தலைமைச் செயலர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ? அவர் உண்மையை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தால், அதிகபட்சம், அவர் தனது தலைமைச் செயலர் பதவியை இழந்திருப்பார். வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பார். இதைத் தவிர ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை எந்த அரசும் எதுவும் செய்து விட முடியாது.
jeyaganthan-paavam-ival-oru-pappaththi
maxresdefault
.savukkuonline.com தலைப்பை பார்த்ததும் கொதித்தெழும் பக்தாள் கவனத்துக்கு.  இந்த வாக்கியம் என்னுடையது அல்ல.   எழுத்துச் சிற்பி ஜெயகாந்தன் 1979ம் ஆண்டு எழுதிய நாவலின் தலைப்பே இது.  என்னை செதுக்கிய ஜெயகாந்தனின் தலைப்பை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் இந்திய வெளியுறவுப் பணியான ஐஎஃப்எஸ் மற்றும் இதர சில பணிகளுக்கான தேர்வு. இதல் யாருக்கு ஐஏஎஸ் கிடைக்கும் என்பது ஒருவர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும். ஐஏஎஸ் பதவியைத்தான் அனைவரும் விரும்புவார்கள்.   ஏனென்றால் அந்த பதவியில்தான் மக்களோடு நேரடி தொடர்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் அரசின் கொள்கை முடிவுகளை அமல்படுத்த முடியும். ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வெற்றி பெற்ற பல கதைகளை நீங்கள் இணையத்தில் காணலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஎஃப்எஸ் ஆகிய பதவிகள் அனைத்துக்கும் அடிப்படை பயிற்சி ஒன்றாகத்தான் நடக்கும்.    முசூரியில் இருக்கும் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில்தான் இந்த பயிற்சி நடக்கும்.   முதல் கட்ட பயிற்சி மூன்று பிரிவுகளுக்கும் ஒன்றாக நடக்கும்.   இந்த முதல் கட்ட பயிற்சி முடிந்தவுடன், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐதராபாதில் உள்ள, வல்லபாய் பட்டேல் அகாடமிக்கு சென்று விடுவார்கள்.   ஐஎஃப்எஸ் அதிகாரிகள் நாக்பூரில் பயிற்சிக்கு சென்று விடுவார்கள்.  ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டும், லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி மையத்துக்கு மீண்டும் திரும்புவார்கள்.
அந்த பயிற்சியின்போது முதல் வகுப்பில் தவறாமல், அனைத்து ஆசிரியர்களும் சொல்லும் வார்த்தை என்னவென்றால், The Scum is out.   We are the steel frame of the nation.   கழிவுகள் வெளியேறி விட்டன.  நாம்தான் இந்த தேசத்தின் இரும்பு அஸ்திவாரங்கள் என்பதே.   அது ஒரு வகையில் உண்மையும் கூட.  ஐஏஎஸ் அதிகாரிகள்தான் இந்த தேசத்தின் அஸ்திவாரங்கள்.   அவர்கள்தான் அரசாங்கத்தின் தூண்கள்.  அவர்கள்தான் தேசத்தின் கொள்கைகளை செயல்படுத்துகிறார்கள்.     இத்தகையதொரு பெருமை வாய்ந்த பதவிதான் ஐஏஎஸ் அதிகாரி பதவி என்பது.
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இத்தகையதொரு ஐஏஎஸ் அதிகாரி.    கிரிஜா வைத்தியநாதனை நான் லஞ்ச ஒழிப்புத் துறை பணியில் இருந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன்.   அப்போது நான் புள்ளி விபரங்களை கவனிக்கும் பணியை லஞ்ச ஒழிப்புத் துறையில் கவனித்துக் கொண்டிருந்தேன்.  விழிப்புப் பணி ஆணையராக இருக்கும் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஒவ்வொரு காலாண்டுக்கும் ஆய்வு கூட்டம் நடத்துவார்.  அந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த காலாண்டில், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, எத்தனை முடிக்கப்பட்டுள்ளன, புதிய நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்வார்.
இந்த கூட்டம் ஒவ்வொரு காலாண்டின் துவக்கத்திலும் நடக்கும்.  லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து ஒரு அதிகாரி, அவரின் துணைப் பரிவாரங்கள், தலைமைச் செயலாளர் அல்லது அவரால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரு துறைச் செயலாளர், மற்றும் விழிப்புப் பணி ஆணையர் ஆகியோர் பங்கேற்பர்.   அப்போது சத்ரசால் சிங் என்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி விழிப்புப் பணி ஆணையராக இருந்தார்.   அவருக்கு வேலையே, இதர ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து உட்கார வைத்து மொக்கை போடுவதுதான்.    இந்த மொக்கையை பல அதிகாரிகளால் தாங்கவே முடியாது என்றாலும், வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.    மூத்த ஐஏஎஸ் அதிகாரியாயிற்றே…  வேறு என்ன வழி ?
இது போல ஒரு நாள் ஒரு காலாண்டுக் கூட்டத்துக்கு புள்ளி விபரங்களை தயார் செய்த என்னையும் அழைத்துச் சென்றார்கள்.  அப்போது தற்போது டிஜிபியாக உள்ள கே.பி.மகேந்திரன் ஐஜியாக இருந்தார்.   முதன் முறையாக அதிகாரிகள் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பதை அப்போதுதான் நேரில் பார்த்தேன்.   அந்த கூட்டத்துக்கு செல்கையில் எனக்கோ அடி வயிறு கலக்கும் அளவுக்கு பயம்.   ஏனென்றால், புள்ளி விபரங்களின் இறுதிக் கணக்கு சரியான முறையில் வராத காரணத்தால் பல எண்ணிக்கைகளை மாற்றி, இறுதிக் கணக்கு மிகச் சரியாக வரும் வகையில் தயார் செய்திருந்தேன்.   யாராவது ஒரு அதிகாரி  அந்த கணக்கை சரி பார்த்து கண்டு பிடித்தால், என் வாழ்க்கை என்ன ஆவது என்ற பயம் மட்டுமே எனக்கு.
கூட்டம் தொடங்கியது.  கூட்டத்துக்கு அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் கிரிஜா வைத்தியநாதன். கூட்டம் தொடங்கியது.  கூட்டத்தின் ஒவ்வொரு கணத்தையும் நான் கவனமாக கவனித்து வந்தேன்.  எப்போது புள்ளி விபரக் கணக்கை எடுப்பார்கள், நமது சீட்டுக் கிழியும் என்பது மட்டுமே எனது கவலை.    கூட்டத்தில் யாருமே பேசவில்லை.   சத்திரசால் சிங் என்ற விழிப்புப் பணி ஆணையர் மட்டுமே பேசத் தொடங்கினார்.   நரசிம்மராவ் அரசின் பல ஊழல்கள் அதற்கு முன்னால் சிபிஐ அமைப்பால் விசாரிக்கப்பட்டன.   அதில் ஒன்று உர இறக்குமதி ஊழல்.    அந்த சிறப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த சத்திரசால் சிங், அந்த புலனாய்வுக் குழுவில் எப்படியெல்லாம் சிறப்பாக ஊழலை கண்டுபிடிக்க செயல்பட்டார் என்பதை விளக்கமாக விவரித்துக் கொண்டிருந்தார். 133 கோடியை இந்தியா வழங்கியுள்ளது.  ஒரே ஒரு துகள் உரம் கூட இந்தியாவுக்கு வந்து சேரவில்லை என்றார்.
அதிகாரிகள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.   என்னைப் போன்ற க்ளர்க்குகள் பென்ச்சில் அமர்ந்திருந்தனர்.   லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து நானும் எனது மேலாளரும் வந்திருந்தோம்.  பக்கதில் வேறொரு பென்ச் இருந்தது.  அதில் தலைமைச் செயலக பணியாளர்கள் அமர்ந்திருந்தனர்.    அவர்கள் எங்களை இழிபிறவிகள் போல் ஏளனமாக பார்த்தனர்.    தலைமைச் செயலக பணியாளர்கள் அல்லவா ?
அதிகாரிகள் அனைவருக்கும் டீயும், குட் டே பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.    நல்ல தரமான பிஸ்கட்.    அவர்கள் அனைவரும் சாப்பிடத் தொடங்கியதும்,  எங்கள் இணை இயக்குநர் என்னிடம் திரும்பி, “தம்பி ஃபிகர் எல்லாம் சரியா இருக்குல்ல” என்று கேட்டார்.    இயல்பான எனது குசும்பு, இந்த அறையில் ஒரு ஃபிகர் கூட இல்லையே… எந்த ஃபிகரை பற்றி பேசுகிறார் என்று முதலில் தோன்றினாலும், வேலை குறித்த பயம், “சார்.  எவ்ரிதிங் பர்ஃபெக்ட் சார்” என்று பதில் சொல்ல வைத்தது.   என்னமோ எல்லாவற்றையும் சரி பார்த்தது போல, அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
அதிகாரிகள் தின்று முடிக்கும் தருவாயில்தான் எங்களுக்கு பிஸ்கட்டும் டீயும் வழங்கப்பட்டன.    சத்தியமாக சொல்கிறேன்.  நான் அது வரை குட் டே பிஸ்கட்டை சாப்பிட்டதேயில்லை.   அது பணக்காரர்களின் பிஸ்கட் என்று நானாக கற்பிதம் செய்து கொண்டு இருந்தேன்.  அந்த பிஸ்கட்டை எடுத்து வாயில் வைக்கப் போகும் போது, எனது அருகில் இருந்த அனுசுயா என்ற மேலாளர், வைப்பா என்று காதில் கத்தினார்.   முழுமையாக பயந்துபோய் அப்படியே பிஸ்கட்டை தட்டில் வைத்தேன்.
மீண்டும் சத்திரசால் சிங் பேசத் தொடங்கினார்.    சுகாதாரத் துறை செயலாளர் இங்கே இருப்பதால் நாம் சுகாதாரத் துறையின் வழக்குகளை முதலில் எடுத்துக் கொள்வோம் என்றார்.   எனக்கு செம்ம சந்தோஷம்.   ஏனென்றால், சுகாதாரத் துறையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை.  அதனால் அதன் புள்ளி விபரத்தில் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லை.
அந்த புள்ளி விபரத்தை எடுத்தவுடன், கிரிஜா வைத்தியநாதன், படபடப்படைந்தார். பரபரப்பான ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.  அப்போது எனக்கு அவ்வளவு ஆங்கில அறிவு கிடையாது.  (இப்போதும் கிடையாது).   எனது உறவினர் ஜிஎச்சுக்கு போனாங்க.  அங்க ஸ்ட்ரெச்சர் தள்ற ஆளு 10 ரூபா ப்ரைப் வாங்கினான்.  என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்க டிப்பார்ட்மென்ட் ? இது ஒன் டைம் இன்சிடென்ட் இல்ல.  தொடர்ந்து நடக்குது. என்று பொறிந்து தள்ளினார்.
கிரிஜா வைத்தியநாதன் இவ்வாறு பேசியதும், விழிப்புப் பணி ஆணையர் சத்திரசால் சிங், எங்கள் துறை சார்பாக வந்திருந்த கேபி.மகேந்திரனை பார்த்து “வாட் ஆர் யூ பீப்பிள் டூயுங்”  என்றார்.   “சார். வி வில், இம்மிடீயட்லி டேக் ஆக்சன்” என்று கேபி.மகேந்திரன் பதில் கூறினார்.    சிறிது நேரத்தில் மீட்டிங் முடிந்தது.
அதிகாரிகள் தனித்தனி காரிலும், அல்லு சில்லுகள் தனி காரிலும் கிளம்பினோம்.   அலுவலகம் சென்றதும், கேபி.மகேந்திரன் என்னை அழைத்து புள்ளி விபரங்கள் குறித்த விபரங்களை கேட்பார் என்றே மிகவும் பயந்து கொண்டிருந்தேன்.    ஆனால் அவர் கடைசி வரை கேட்கவேயில்லை.
இவ்வளவு நேரம் உங்களுக்கு மொக்கையான கதையை சொல்லிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன ?   கிரிஜா வைத்தியநாதன்.  குறைந்தது 15 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை ஜிஎச்சில் ஸ்ட்ரெச்சர் தள்ளுபவன் 10 ரூபாய் வாங்கியதற்கு கொதித்தெழுந்தவர்தான் இந்த கிரிஜா வைத்தியநாதன்.    தலைமைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட வரை, அவர் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் கிடையாது.
ஆனால் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட சூழலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஜெயலலிதாவின் அனைத்து ஊழல் நடவடிக்கைகளுக்கும் துணையாக இருந்த ராம் மோகன ராவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைகளை அடுத்தே கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது நடைபெறும் புளிமூட்டை பழனிச்சாமியின் அரசு எத்தகைய அரசு என்பது நம் அனைவருக்குமே தெரியும்.  ஊழலின் மேடையில் நடைபெற்று வரும் அரசுதான் இந்த அரசு.   இப்படிப்பட்ட ஒரு அரசின் தலைமைச் செயலாளராக ஒரு நேர்மையான அதிகாரியால் எப்படி மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட முடியும் ?
கிரிஜா வைத்தியநாதனின் அயோக்கியத்தனம் முழுமையாக வெளிப்பட்டது குட்கா விவகாரத்தில்தான்.    சட்டவிரோதமாக தமிழகம் முழுக்க குட்கா வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவது வெளிப்பைடையான உண்மை.    அந்த வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதற்காக, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மாமூல் வசூலித்தது ஆதாரத்தோடு ஊடகங்களில் அம்பலமானது.   அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தள்ளும் கடைநிலை ஊழியன் 10 ரூபாய் வாங்கியதற்காக கொதித்த கிரிஜா வைத்தியநாதன், பல கோடி ரூபாய் ஊழலில் தொடர்புள்ள அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் அளவுக்கு வீழ்ந்தார்.
83066a39-5a00-4905-bb37-f08f95cc7e57
அரசு அதிகாரம் என்பது பிரமிட் கோபுரம் போல.  தொடக்க காலத்தில் நேர்மையாக பணியைத் தொடங்கும் அதிகாரிகள் பிரமிட்டின் உயரத்துக்கு செல்லச் செல்ல, எந்த சமரசத்துக்கும் தயாராவார்கள்.  பிரமிட்டின் உயரத்தில் பதவிகள் மிகவும் குறைவு என்பதால், போட்டி கடுமையாக இருக்கும். அந்த பிரமிட் கோபுரத்தின் உச்சத்தில்தான் கிரிஜா வைத்தியநாதன் தற்போது அமர்ந்திருக்கிறார்.   இது நாள் வரை, எவ்விதமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத கிரிஜா, தன் தலைமைச் செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, மிக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கி விட்டார் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது.
குட்கா விவகாரம் தொடர்பாக 9 ஜுலை 2016 தேதியிட்ட வருமான வரித்துறையின் கடிதம், தன் அலுவலகத்துக்கு வரவில்லை என்று ஒரு பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கிரிஜா தாக்கல் செய்தார்.   குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையின் உயர் அதிகாரி, முன்னாள் தலைமைச் செயலர் ராம் மோகன ராவிடம் நேரில் அளித்த விபரம் ஊடகத்துக்கே தெரிகையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.  இணைப்பு.  அப்படி இருக்கையில் பொய்யான ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கிரிஜா துணிந்தார் என்றால் அவரது தலைமைச் செயலர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ? அவர் உண்மையை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தால், அதிகபட்சம், அவர் தனது தலைமைச் செயலர் பதவியை இழந்திருப்பார்.   வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பார்.   இதைத் தவிர ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை எந்த அரசும் எதுவும் செய்து விட முடியாது.
2015-16ல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஒரு ஆய்வில், குட்கா வகை புகையிலையை பயன்படுத்துபவர்களில் 90 சதவகிதத்தினருக்கு அவற்றை பெறுவதில் எந்த சிரமமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.   குட்கா போன்ற புகையிலை பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது என்பது அப்பட்டமான உண்மை.
தன் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக நீதிமன்றத்தில் ஒரு முழு பொய்யை வாக்குமூலமாக தாக்கல் செய்த கிரிஜா வைத்தியநாதனை விட, ஸ்ட்ரேச்சரை தள்ளுவதற்காக 10 ரூபாய் வாங்கிய அந்த கடை நிலை ஊழியன் பல மடங்கு நேர்மையானவனே.
கிரிஜா வைத்தியநாதன் எப்படிப்பட்ட அதிகாரி என்பதை வள்ளுவர் மிக எளிமையாக விவரித்துள்ளார்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
உரை:
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக