வியாழன், 6 ஜூலை, 2017

விகடன் : ராமஜெயம் கொலைக்கு மூன்று காரணங்களைச் சொல்லும் முதல்வர் பழனிசாமி!

தி.மு.க முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலைக்கான மூன்று காரணங்களைச் சொல்லி விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை குறித்து முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கத்தில், "திருச்சி, தில்லை நகரைச் சேர்ந்த லதா ராமஜெயம் என்பவர், 29.3.2012 அன்று, அதிகாலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்ற தனது கணவரும், முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராமஜெயம் வீடு திரும்பவில்லையெனவும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அன்றைய தினம் காலை 11.45 மணிக்கு புகார் அளித்ததன் பேரில், தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் சுமார் 11.30 மணியளவில், திருச்சி-கல்லணை சாலையில் உள்ள பொன்னுரங்கபுரம் என்ற இடத்துக்கு அருகில், ராமஜெயத்தின் உடல் காயங்களுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதுதொடர்பாக, திம்மராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், திருவரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், இவ்வழக்கு தில்லைநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் இணைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 27.6.2012 அன்று இவ்வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் இவ்வழக்கில்
12 தனிப்படைகள் அமைத்து, இச்சம்பவம் தொழில்போட்டி அல்லது அரசியல் விரோதம் அல்லது குடும்ப பிரச்னை காரணமாக நடந்துள்ளதா என அறிய பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்து குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் திருச்சி சென்று, புலன் விசாரணை பற்றி ஆய்வு செய்து அறிவுரைகள் கொடுத்துள்ளார். குற்றப்புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் ஒருவரின் நேரடி மேற்பார்வையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவரின் உறவினர்கள், அவருடைய பணியாட்கள், அவருடன் தொழில் ரீதியாக அறிமுகம் உள்ளவர்கள், அரசியல் தொடர்பு உடையவர்கள் எனப் பலரும் விசாரிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து விவரங்களைப் பற்றியும் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,100 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாகச் சோதனை நடத்தி தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டது. வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சம்பவங்கள் சிசிடிவி பதிவுகள் மூலம் பார்வையிடப்பட்டன. இறந்தவரை வாகனத்தில் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் திருச்சியை ஒட்டி உள்ள சுங்கச்சாவடிகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகப்படக்கூடிய வகையான 294 வாகனங்கள் சோதனைச் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற கடத்தல் அல்லது கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பார்களா என்றும் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 2,910 கைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டு அவற்றைப் பயன்படுத்துவோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் இறந்து போன நபருடன் நெருங்கிய தொடர்புகொண்ட மூன்று நபர்கள் தங்களது வாக்குமூலங்களில் முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததால், அவர்களுள் இருவர் சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள தடய அறிவியல் உளவியல் துறையில் உண்மை அறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மற்றொருவர், அப்பரிசோதனைக்கு மறுத்ததால், அவர் அப்பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வழக்கைப் பொறுத்தவரையில் கடத்தப்பட்டதற்கும், கொலை செய்ததற்கும் நேரடி சாட்சிகள் எதுவுமில்லை. இறந்து போன நபருக்கு தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்விலும் பலவழிகளில் விரோதங்கள் இருந்துள்ளன. இது பற்றிய விவரங்கள் அறிந்து ராமஜெயத்துக்கு நெருக்கமானவர்கள் அளித்துள்ள தகவல்களின் பேரிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் மேலும் ஒத்துழைப்புத் தந்து விவரங்கள் அளித்தால் அவை அனைத்தும் விசாரணை செய்யப்படும்.> 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது திருச்சியைச் சேர்ந்த இருவர் வையம்பட்டி அருகில் ஒரு காரில் மர்மமாக எரிந்த நிலையில் கிடந்தது பற்றிய வழக்கு நான்கு ஆண்டுகள் திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வழக்கில் 2013-ம் ஆண்டு குற்றப்புலனாய்வுத் துறையினர் தக்க துப்பு கிடைத்ததும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். அதுபோல இவ்வழக்கிலும் காவல்துறையினர் தகுந்த துப்பு கிடைத்ததும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள். ராமஜெயத்தின் மனைவி, இவ்வழக்கு புலன் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) விசாரணைக்கு மாற்றம் செய்யக் கோரி 10.3.2015 அன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் பல்வேறு தினங்களில்  நடைபெற்றபோது நீதிமன்றம் கூடுதல் அரசு வழக்கறிஞர் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டதன் பேரில், மாநில குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை ஒவ்வொரு விசாரணையின்போதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், 19.1.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம், புலன் விசாரணை முடிக்க மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி, மனுவை ஒத்தி வைத்தது. இவ்வழக்கு மீண்டும் 27.4.2017 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர் இவ்வழக்கில் மேற்கொண்ட விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, இவ்வழக்கை தீர்ப்பிற்காக ஒத்தி வைத்துள்ளது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக