வியாழன், 6 ஜூலை, 2017

மோடி- சீன அதிபர் சந்திப்பு கிடையாது என சீனா அறிவிப்பு!


ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷின் ஜிங்பிங்கும் சந்திப்பதாக இருந்த நிலையில் இந்தச் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என்று சீனா அறிவித்துள்ளது.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாடு நாளை (ஜூலை 7ம் தேதி) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, இன்று இரவு ஹம்பர்க் வருகிறார். இதில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஹின் ஜிங்பிங்கும் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்காது எனச் சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது சூழல் சரியானதாக இல்லை. கடந்த 19 நாட்களாக இரு நாடுகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா எல்லை தாண்டி ஊடுருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தற்போது சூழல் சரியில்லாததால் இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முறையான தகவல் ஏதும் வரவில்லை என்று இந்திய அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தனது அரசு செய்தித்தாள் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. சிக்கிம் மாநிலத்திற்கு அருகில் சீனா உரிமைக்கூறும் பகுதியில் இருந்து இந்தியா ராணுவத்தைப் பின் வாங்கவேண்டும். அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை கட்டுமான பணியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. தற்போது இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்கு வாய்ப்பு இல்லை என்று சீனா கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக