ஞாயிறு, 16 ஜூலை, 2017

தம்பிதுரை திடீர் ஞானோதயம் : மத்தியரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது .. அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்

மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது: அரசியல் ரீதியாக
அதிமுக எதிர்கொள்ளும்: தம்பிதுரை நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் எனவும் தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை சகாநாயகருமான தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா, தினகரன் ஆகியோர் லஞ்சம் கொடுத்தாக புகார்கள் தொடர்ச்சியாக வருவது தொடர்பான கேள்விக்கு, எதிர்கட்சிகள் லஞ்சப் புகார்கள் தெரிவித்து அரசியல் செய்கின்றன எனவும் இதை அரசியல் ரீதியாக அதிமுக எதிர்கொள்ளும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் நீட் பிரச்சினைக்கு காரணம் திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம். தற்போது அந்த இரு கட்சிகளும் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்கமுடியாது.


தமிழகத்திற்கு தேவையான பொறியியல், மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் எடுத்து செல்ல முயல்கிறது. இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழகம் முனிசிபாலிட்டியாக மாற கூடாது. மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை எடுக்க முடியாது. நீட் விவகாரம் கோர்ட்டிற்கு சென்று விட்டதால் மத்திய அரசை அதிமுகவால் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் குரல் எழுப்பபடும்.

 தமிழக மாணவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் அதிமுக மேற்கொள்ளும். அதிமுகவில் ஓரே அணிதான் இருக்கிறது. பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் கமல் அரசியலுக்கு வந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், ஆட்சியில் தவறுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும். அதிமுக மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறது மற்ற கட்சிகளுக்கு பயப்படாது என தம்பிதுரை தெரிவித்தார்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக