வெள்ளி, 14 ஜூலை, 2017

ஓவியர் வீர.சந்தானம் மறைவு!


ஓவியர் வீர.சந்தானம் மூச்சுக் கோளாறினால் நேற்று இரவு இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி தமிழக செயல்தளங்கள் பலவற்றிலும் ஒரு மௌனமான அதிர்வலையைக் கடத்திச் சென்றது. புதிதாகக் களம்காணும் பத்திரிகையாளர்கள் உட்பட பலருக்கும், ‘பீட்சா படத்தில் மந்திரவாதியாக வருவாரே’ என்று சொன்னால் தெரியும். குறும்படங்கள் ஆவணப்படங்கள் சார்ந்து இயங்குபவர்களிடையே ‘வேட்டி’ என்றதும், வீர.சந்தானம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவையெல்லாம் புதிதாக வருபவர்கள் அவரைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்பவை. ஆனால், அவருக்கென்ற தனித்துவம் தோல் பாவை ஓவியத்தில் இருக்கிறது.

மராட்டியத்தில் தோன்றியதாக இருந்தாலும், தமிழக மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாகக் கலந்துவிட்ட இந்த தோல் பாவைக் கூத்துகளில், ஆட்டுத் தோலில் நாடகத்தின் கதாபாத்திரங்களை வரைந்து பாவைகளாகப் பயன்படுத்துவார்கள். இந்த ஓவியத்தில் தனித்திறன் பெற்றிருந்த வீர.சந்தானம், தீவிர தமிழ்த்தேசியவாதி. ஈழத் தமிழர்களைப்பற்றி சீரிய அறிவும், புரிதலும் கொண்டிருந்த வீர.சந்தானம் தனது கலையின் ஊடாகவும் அவர்களது வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.


வீர.சந்தானம் இல்லாத ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்களே தமிழகத்தில் நடைபெற்றது இல்லை எனும் வகையில், தமிழகத்தின் எந்த இடுக்கிலிருந்து அழைப்பு வந்தாலும் எவ்வித தயக்கமுமின்றி, காற்றுகூட தள்ளிவிடக்கூடிய வயதில் நெஞ்சுரம் தீராமல் சென்று முன்வரிசையில் நின்று போராட்டக் குரலை எழுப்புபவர் வீர.சந்தானம். இவரது இழப்பு, ஓவியத்துறை, திரைத்துறை மட்டுமல்லாமல் தமிழ் தேசியத்தளத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய படைப்பாளியை இழந்த துயரத்தில், மின்னம்பலம் இணையதளமும் பங்கெடுத்துக் கொள்கிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக