ஞாயிறு, 16 ஜூலை, 2017

பாமக குடியரசு தேர்தலை புறக்கணிக்கிறது ... ராமதாஸ் அறிவிப்பு!

மின்னம்பலம் :நாளை (ஜூலை 17) நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ளது. இதில், பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் இரண்டு பேருமே தலித் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தியாகராய நகரில் பாமகவின் 29-வது தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது,அப்போது விழாவில் கலந்து கொண்ட பின், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறினோம். ஆனால், அவர்கள் இதுபற்றி எந்தப் பதிலையும் தரவில்லை. அதனால் பாமக நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம்.

பாமக-வைபோல் எந்தக் கட்சியும், மக்களுக்கும், மொழிக்கும் பாடுபட்டதில்லை. அதிமுக முடிந்து போன கட்சி. அணையப் போகும் நேரத்தில் விளக்கு பிரகாசிப்பதை போல் இப்போதைய நிலை உள்ளது. திமுக ஆட்சிக் கனவும் பலிக்காது. இந்த 2 கட்சிகளாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாமக நிரப்பும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் 15 எம்.பி. தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கின்ற வகையில் வெற்றி பெற்றே தீருவோம். நிச்சயம் மாற்றம் வரும். நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை பாமக புறக்கணிக்கிறது. எந்தக் கட்சிக்கும் அன்புமணி வாக்களிக்க மாட்டார். துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக