ஞாயிறு, 16 ஜூலை, 2017

மீரா குமாருக்குப் பெருகும் ஆதரவு! மனசாட்சி கருதுகோள் வெற்றியை நோக்கி?

மின்னம்பலம் : ஜனாதிபதி தேர்தல் நாளை ஜூலை 17ஆம் தேதி நடைபெற இருக்கும்
நிலையில், இரண்டு அணிகளாக இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் அணி, மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைவதையடுத்து, புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை ஜூலை 17ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அதையொட்டி, வேட்பாளர்கள் இருவரும் தங்கள் தரப்பு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ஆளும்கட்சியாக இருந்த சமாஜ்வாடி பெரும் தோல்வியடைந்ததையடுத்து, சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் அணி என்றும், அகிலேஷ் யாதவ் அணி என்றும் இரண்டாக உடைந்தது. இதில், முலாயம் சிங் யாதவ் கடந்த ஜூன் 20ஆம் தேதி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியைக் கவுரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், இந்நிகழ்ச்சியில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளரான மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று சமாஜ்வாடி தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகிய இருவரையும் மீரா குமார் நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ராம் கோவிந்த் சவுதாரியும் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ-க்கள் என்று மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள், தலைமைச் செயலக நுழைவு வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன. நாளை 17ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. அதன் பின்னர், இந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்பில் வைக்கப்படும். வருகின்ற 20ஆம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக