வெள்ளி, 7 ஜூலை, 2017

மாறுகிறது நிதிஷ்குமார் நிலைப்பாடு!

மாறுகிறது நிதிஷ்குமார் நிலைப்பாடு!
மின்னம்பலம் : பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிப்பதை நிறுத்தும்படி அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டிருக்கிறார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் பாஜக-வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பதாக முடிவெடுத்ததும் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் குறிப்பாக பீகார் மாநில காங்கிரஸ் கட்சியினர் நிதிஷ்குமாரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சௌத்ரியை டெல்லிக்கு அழைத்த ராகுல் காந்தி, “லாலு பிரசாத்துடன் பேசி நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்ததே காங்கிரஸ்தான். இன்று அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்பதற்காக அவரைத் தாக்க வேண்டாம். இனியும் நிதிஷ்குமாரைப் பற்றி காங்கிரஸ் சார்பில் யாரேனும் கடுமையாக பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார் ராகுல்.
ஏன் இந்த எச்சரிக்கை என்று விசாரித்தால்… “நாங்கள் பிஜேபி-யின் தோட்டத்தில் பூத்தப் பூ அல்ல; அக்கட்சியை எப்போதும் ஆதரிப்பதற்கு! எங்களுக்கும் சில கொள்கை முடிவுகள் உண்டு. பீகார் கவர்னரையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியதால்தான் நிதிஷ்குமார் அவருக்கு ஆதரவு அளித்தாரே தவிர, வேறொன்றும் இல்லை. அடுத்து வரும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் நாங்கள் பாஜக பக்கம் இருக்க மாட்டோம். துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு எங்களை அழையுங்கள். நாங்கள் கண்டிப்பாக வருகிறோம் என்று காங்கிரஸ் தரப்புக்கு நிதிஷ் செய்தி அனுப்பிவிட்டார்.
மேலும், நிதிஷ்குமார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேசி தியாகியும் இதை பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார். எனவே, துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிதிஷ்குமாரின் நிலைப்பாடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக