வெள்ளி, 7 ஜூலை, 2017

டெல்லி கல்லூரிகள்: கட் ஆஃப் எவ்வளவு தெரியுமா?

டெல்லி கல்லூரிகள்: கட் ஆஃப் எவ்வளவு தெரியுமா?அண்மையில் டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட் ஆஃப் மதிப்பெண்ணை வெளியிட்டது. அதில், பி.ஏ. (ஹானர்ஸ்) சைக்காலஜி படிப்பில் சேர 98.25 சதவிகித மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண் என்பது மாணவர்களை ஆச்சர்யத்தில் மலைக்க வைத்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் பல துறைகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி, டெல்லி பல்கலையில் இளங்கலை பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி ஜூலை 30ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டது. இந்த கட் ஆஃப் மதிப்பெண் மாணவர்களையும் கல்வியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வியப்புக்குக் காரணம் டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பெண்கள் ஸ்ரீராம் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) சைக்காலஜி படிப்புக்கு 98.25 சதவிகிதம் கட் ஆஃப் மதிப்பெண் என்றும், இதற்கு அடுத்து அதே கல்லூரியில், பி.ஏ. (ஹானர்ஸ்) ஜர்னலிஸம் படிக்க 97.75 சதவிகிதம் கட் ஆஃப் மதிப்பெண் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டது. அதில், எஸ்.ஜி.டி.பி. கல்சா கல்லூரியில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) எலெக்ட்ரானிக்ஸ் படிக்க 99.66 சதவிகித கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டது.
அதேபோல, பெண்கள் ஸ்ரீராம் கல்லூரியில், பி.ஏ. (ஹானர்ஸ்) ஆங்கிலம் படிப்புக்கு 97.25 சதவிகித கட் ஆஃப் மதிப்பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல படிப்புகளுக்கு அதிகபட்சமான கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டாலும், டெல்லி பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லுரிகளில் மிகவும் குறைவான கட் ஆஃப் மதிப்பெண் அறிவித்துள்ள கல்லூரியும் உண்டு. டெல்லி லக்ஷ்மிபாய் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) சமஸ்கிருதம் படிக்க 44.75 மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு இதற்கு அடுத்த கட் ஆஃப் மதிப்பெண் நாளை ஜூலை 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் தனது நிர்வாகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளிள் உள்ள 54,000 இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனால், டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக