புதன், 28 ஜூன், 2017

திறன் நகரங்கள் பங்குச் சந்தையில் தனியார் கொண்டாட்டம் Smart Cities: Companies Profiting from Urban Challenges

Smart thing about ‘smart solutions’ is that once installed, it makes the city permanently dependent on the private service provider, much like how your dependence on your smartphone is far greater, and of many dimensions, than it ever was with your non-smartphone. Whether or not an urban problem is solved by a smart city project, a market would have been created.
உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளைப் போக்க, நகரங்களுக்கு மேலும் மேலும் நிதி தேவைப்படுகின்றது. நகர நிர்வாகங்கள் நிதி திரட்டலுக்கான புதிய வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நகராட்சி பங்கு பத்திரங்கள் (Municipal Bonds) அவ்வாறான வழிவகைகளில் ஒன்று. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அவை (நகராட்சி பங்கு பத்திரங்கள்) பயன்படுத்தப்படுவதில்லை என்பது உண்மை தான். எனினும் மாறி வரும் சூழலில் நகர மறுநிர்மானப் பணிகளுக்கு முதலீட்டின் தேவை அதிகரித்திருப்பதை கணக்கில் கொண்டு நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” – என்று பேசியுள்ளார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு.

கடந்த 22-ம் தேதி பூனே நகராட்சியின் பங்குபத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையில் வெளியிடப்பட்ட நிகழ்வில் வெங்கையா நாயுடு பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முதற்கட்டமாக நகராட்சியின் பங்கு பத்திர விற்பனையின் மூலம் சுமார் 200 கோடி திரட்ட உத்தேசித்துள்ளதாகவும், ஐந்தாண்டுகளில் 2,264 கோடி பங்குச் சந்தையின் மூலம் திரட்டவும் அந்த நிதியைக் கொண்டு பூனா நகருக்கான குடிநீர் வழங்கல் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டுக்குள் பத்து மேலும் நகரங்களின் நகராட்சி பங்கு பத்திரங்களை வெளியிட வேண்டும் என்றும், மற்ற நகரங்கள் பூனா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் காட்டியுள்ள உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நகராட்சி பங்கு பத்திரங்களை பங்குச் சந்தையில் வெளியிட்டு நிதி திரட்டுவதன் மூலமே திறன்நகரங்களை (Smart Cities) வடிவமைக்கப் போதுமான நிதியைப் பெற முடியும் என்கின்றன முதலாளிய பத்திரிகைகள்.
இரத்தமும் சதையுமான மனிதர்களையும், மனிதர்களின் இயக்கத்தையும், வாழ்வையும் உள்ளடக்கிய நகரங்களைப் பங்குகளாக விற்பனை செய்ய முடியுமா?
முடியும் என்கிறது உலகமயமாக்கம். அரசின் வேலை அரசாளுகை செய்வது மட்டுமே என்றும், தொழில்களில் ஈடுபடக் கூடாது என்கிற இந்தியா கையெழுத்திட்டுள்ள காட் ஒப்பந்தத்தின் சரத்துகள். முதலாளித்துவ நியதியின் படி, தண்ணீர் உட்பட மனிதன் உயிர்வாழத் தேவையான அத்தியாவசியமானவைகள் அனைத்துமே சந்தையின் சரக்குகள் என்பதால், காட் ஒப்பந்தத்தின் விதிகள் குடிநீர், மின்சாரம், நகர நிர்மாணம், சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்கள் என அனைத்தையுமே “தொழில் நடவடிக்கைகளாக” வரையறுத்துள்ளது. வெங்கையா நாயுடுவின் பேச்சில் குறிப்பிட்ட “பல்வேறு காரணங்கள்” என்பதை மக்களின் எதிர்ப்பு என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரங்களைத் தனியார்மயமாக்கும் வேலைகளை மோடி தற்போது துரிதப்படுத்தியுள்ளார்.
நகரங்களையும் அதன் நிர்வாகத்தையும் மொத்தமாக தனியார்மயமாக்கும் போக்கை தமிழ்நாட்டின் திருப்பூரில் தான் முதன் முறையாக பரிசோதிக்கப்பட்டது. புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் (New Tiruppur Development Corporation) என்கிற நிறுவனம் ஒன்றை அரசு மற்றும் தனியார் கூட்டுடன் ஏற்படுத்தி பங்குச் சந்தையில் 90களிலேயே பட்டியலிட்டனர். பங்குகளின் மூலம் சந்தையில் இருந்து நிதி திரட்டப்படுகின்றது என்கிற முகாந்திரத்தின் அடிப்படையில் தான் திருப்பூரின் குடிநீர் வழங்கல் படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகங்களைப் பங்கு பத்திரங்கள் வெளியிடச் செய்வது, அதன் மூலம் சந்தையின் முதலீடுகளைப் பெறுவது, இவ்வாறு பெரும் முதலீடுகளை திட்டங்களுக்கு ஒதுக்குவதற்காக சிறப்பு நோக்கச் செயலாக்க நிறுவனம் (Special Purpose Vehicle) ஒன்றை உருவாக்குவது உள்ளிட்டவைகளைக் கொண்ட திறன் நகர வழிகாட்டுதலை (Smart City Guidelines) அரசு வெளியிட்டுள்ளது. 2013-ம் ஆண்டின் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் சிறப்பு நோக்கச் செயலாக்க நிறுவனங்கள் (அதாவது நகரங்களை நிர்வகிக்க உள்ள அரசு – தனியார் கூட்டு நிறுவனம்) உருவாக்கப்படும்.
தலைமைச் செயலதிகாரி (CEO) ஒருவரால் நிர்வகிக்கப்படும் மேற்படி நிறுவனத்திற்கு “திறன் நகரத்தில் எல்லைக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பொருத்தளவில், தெரிவு செய்யப்பட்ட நகராட்சி கவுன்சிலர்களுக்கு உள்ள அதிகாரங்களும் வரம்புகளும் வழங்கப்படும்” என்கிறது திறன் நகர வழிகாட்டு விதிகள். மேலும் இந்த நிறுவனத்திற்கு வரி வசூல் செய்வது, நகரத்தின் சார்பாக தனியார் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் இன்னும் மூன்றே ஆண்டுகளில், திறன்நகரங்களை ஏற்படுத்துவதற்கான சந்தையின் மதிப்பு 1.56 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும்
ஐ.பி.எம், சிஸ்கோ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் திறன்நகரங்களுக்குத் தேவையான வடிவமைப்பு மற்றும் மென்பொருட்களை உருவாக்கியுள்ளனர். உலகளாவிய அளவில் இன்னும் மூன்றே ஆண்டுகளில், திறன்நகரங்களை ஏற்படுத்துவதற்கான சந்தையின் மதிப்பு 1.56 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது ஃப்ரோஸ்ட் & சல்லிவன் என்கிற தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம்.
திறன் அரசாங்கம் (Smart Governance), திறன் கல்வி (Smart Education) திறன் பாதுகாப்பு (Smart Security), திறன் உட்கட்டமைப்பு (smart Infra) திறன் போக்குவரத்து (Mobility), திறன் சுகாதாரத்துறை (Smart Healthcare) மற்றும் திறன் கட்டுமானம் (Smart Building) உள்ளிட்ட ஏழு அம்சங்களைக் கொண்டவை தாம் திறன் நகரங்கள். இவையனைத்துக்கும் தேவையான நிதி திரட்டல், திட்ட அமலாக்கம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவிருக்கும் தனியார் கார்ப்பரேட்டுகள், பதிலுக்கு தமது சேவைக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது, வசூலிப்பது, வரி வசூலில் ஈடுபடுவது போன்றவற்றையும் தாமே மேற்கொள்ளும்,
எனில் அரசாங்கத்தின் வேலை?
’சேவைகளுக்கான’ விலை அதிகம் என்று மக்கள் முணுமுணுத்தால், அந்த முணுமுணுப்புகளை பூட்ஸ் காலால் நசுக்கத் தேவையான இராணுவத்தையும் போலீசையும் பராமரிப்பது மட்டும் தான்.
இதுவரை அரசுக்குச் சொந்தமாக தனித் தனிப் பொதுத் துறை நிறுவனங்களாக தனியார்களுக்கு விற்றுக் காசாக்கி வந்த ஆளும் கும்பல், இப்போது மொத்தமாக நாடு நகரங்களைத் தனியாருக்கு தாரைவார்க்கத் துணிந்து விட்டது. காங்கிரசு மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி தனியார்மயத்தை மெல்லக் கொல்லும் விசமாகக் கொடுத்து வந்த நிலையில், மோடி அரசோ மக்களின் குரல்வளையை அறுத்து விசக் குடுவையை உள்ளே கவிழ்க்கத் தயாராகியுள்ளது.
செய்தி ஆதாரம்: வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக