புதன், 28 ஜூன், 2017

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகம் என்றும், தற்போது அது 200 கோடி பயனீட்டாளர்களை எட்டிவிட்டதாகவும் அந்த சமூக ஊடக வலைத்தளம் பறைசாற்றிக்கொள்கிறது.
தன்னுடைய தளத்தில் பிரசுரமாகும் மிகப்பெருமளவிலான விஷயங்களை நெறிப்படுத்த வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், இந்தக் மைல்கல்லை இந்த இணையப் பெரு நிறுவனம் அடைந்துள்ளது.
13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள் இதோ.
வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம்
ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஃபேஸ்புக் தன்னைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. அக்டோபர் 2012-இல் 100 கோடி பயனாளிகளை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

200 கோடி பயனாளிகளை அடைந்துள்ளதாக, செவ்வாயன்று, அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் பெருமையுடன் கூறியுள்ள எண்ணிக்கை, அவரின் சமூக ஊடகப் போட்டி நிறுவனங்களை விடவும் மிகப்பெரியதாகும்.
32.8 கோடி செயல்பாட்டில் உள்ள மாதாந்திர பயனாளிகளைக் கொண்டிருப்பதாக ட்விட்டர் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்தி

உலக மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் மேலாக ஃபேஸ்புக் பயனாளிகள் உள்ளனர்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து பெரும்பாலான புதிய ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் வருகின்றனர்.
இன்னும் பெரிய பொறுப்புகள்
தீவிரவாதப் பிரசாரம் என்று கூறப்படும் உள்ளடக்கங்களை இணையத்திலிருந்து நீக்க இன்னும் அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டி, அதிக அழுத்தங்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.
கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் நேரலையாக ஃபேஸ்புக் மூலம் ஒளிபரப்பப்பட்ட பின்பு ஃபேஸ்புக் மீதும் கவனம் குவிந்தது. தன்னுடைய வலைத்தளத்தில் இருக்கும் உள்ளடக்கங்களை நெறிப்படுத்தும் "சமூக செயல்பாடுகள் குழுவிற்கு" இன்னும் 3000 பேரைப் பணியமர்த்தவுள்ள திட்டத்தை, கடந்த மாதம் அந்நிறுவனம் அறிவித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
அமெரிக்காவிலிருந்து இயங்கும் இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மார்ச் 2017-இல் 18,770-ஐ அடைந்தது.
2004-இல் நிறுவப்பட்ட ஃபேஸ்புக்கின் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் 33 வயதான மார்க் சக்கர்பர்க் உள்ளார்.
வருவாய் பற்றிய பயங்கள்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் விளம்பரங்கள் மூலம் வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் விளம்பரதாரர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக இருந்ததாக ஃபேஸ்புக் கூறியிருந்தது.
2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஃபேஸ்புக்கின் வருமானம் 300 கோடி அமெரிக்க டாலர்களை விடவும் சற்று அதிகமாகவே இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 76 சதவிகிதம் அதிகமாகும்.
எனினும், தன் விளம்பர வருமானம் குறையக்கூடும் என்று கடந்த மாதம் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தொலைதூரப் பகுதிகளுக்கான எதிர்காலத் திட்டங்கள்
இணையத் தொடர்புக் கற்றைகளை வெளியிடும் சூரிய மின்னாற்றலில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானங்களின் குழுவை இயக்க வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
'அகுய்லா' (Aquila) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நோக்கம், சூரிய மின்னாற்றலில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானங்கள் மூலம் உலகின் அணுகமுடியாத தொலைதூர பகுதிகளுக்கு இணைய சேவை வழங்குவதாகும்.
ஆனால் தன் இலட்சியங்கள் நனவாக இன்னும் பல ஆண்டுகளாகும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக