புதன், 21 ஜூன், 2017

திமுகவின் ஏழு எம் எல் ஏக்கள் மீது உரிமை மீறல்... குடியரசு தேர்தலில் வாக்களிக்க முடியுமா?

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்!
வர இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு எம்.எல்.ஏ. வாக்கும், ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கும் முக்கியமானது. அதனால்தான் தன் கட்சியில் ஒரே ஒரு எம்.பி.யாக இருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியை கூட போனில் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டிருக்கிறார் மத்திய அமைச்சரான வெங்கய்யா நாயுடு.
மேலும் திமுகவுக்கு 89 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையும் தொடர்புகொண்டு தங்கள் வேட்பாளரான ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டுள்ளார் வெங்கய்யா நாயுடு. இந்த நிலையில் கோட்டையில் இருந்து கசியும் ஒரு செய்தி திமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி நம்பிக்கை வாக்கு கோரியபோது சட்டமன்றத்தில் ரகளை நடந்து ஸ்டாலின் உட்பட பலரது சட்டை கிழிந்தது. இந்த களேபரத்தை அடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பிப்ரவரி 2௦ ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் சபாநாயகரிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில், ‘’கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் இந்தியாவில்வேறு எந்த சட்டமன்றத்திலும் நடக்காத அளவுக்கு வன்முறை செயல்களில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள். பேரவைத் தலைவர், செயலாளர் ஆகியோரின் மேஜையை உடைத்தது, ஆவணங்களை கிழித்து எறிந்தது, பேரவைத் தலைவரை கையைப் பிடித்து இழுத்து வெளியே போக முடியாமல் தடுத்தது என்று மிகவும் வன்முறையில் இறங்கினார்கள்.
இவ்வாறு வன்முறையில் இறங்கிய எஸ். அம்பேத்குமார், கே.எஸ். மஸ்தான், கே.எஸ். ரவிச்சந்திரன், என்.சுரேஷ் ராஜன், க. கார்த்திகேயன், முருகன், கு.க. செல்வம் ஆகிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவருகிறேன்’’ என்று கடிதம் கொடுத்தார்.
அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் அன்று கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ் பேரவைத் தலைவரிடம் இருக்கிறது. அதன் மீதான நடவடிக்கைவிரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் அதனால்.,.. மேற்கண்ட குறிப்பிட்ட ஏழு தி.மு.க. உறுப்பினர்களும் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாதபடி சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளாக்கப்படலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
இதனால் திமுகவின் மேற்குறிப்பிட்ட ஏழு சட்டமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி சட்டமன்றம் நடக்கும் நிலையில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக