புதன், 21 ஜூன், 2017

கருணைக்கொலை செய்துவிடுங்கள் : ராபர்ட் பயஸ் மனு !

கருணைக்கொலை  செய்துவிடுங்கள் : ராபர்ட் பயஸ் மனு !மின்னம்பலம் : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு, தமிழக அரசுக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 26 வருடங்களாக முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களில் ராபர்ட் பயஸ் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நளினி தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி அளித்த மனுவும், பேரறிவாளனின் பரோல் மனுவும் சிறைத்துறையால் நிராகரிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்றொரு கைதியான ராபர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு இன்று ஜூன் 21 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் 'முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையிலிருந்து வருகிறேன். கடந்த 11ஆம் தேதியுடன் நான் சிறைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த எங்களுடைய விடுதலை முடிவு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் எங்களுடைய விடுதலையை ஆதரிக்க, நீதிமன்றமும் விடுதலைக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அனைத்து நிலைப்பாடுகளும் எங்களுக்கு ஆதரவாக இருந்த நிலையிலும், எந்த காரணத்தால் எங்களது விடுதலை நிறுத்திவைக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

முன்பிருந்த மத்திய அரசும், தற்போதைய மத்திய அரசும் எங்களுடைய விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆக சிறைக்குள்ளேயே எங்களுடைய வாழ்வை முடித்துவிட வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நீண்ட நாள் சிறைவாசம் தனிப்பட்ட முறையில் என்னை மட்டுமின்றி, எனது குடும்பத்தையும் தண்டனைக்குள்ளாக்கியுள்ளது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக எனது குடும்பமோ, உறவுகளோ தமிழகம் வந்து என்னை சந்திக்காத நிலையில், என்னுடைய வாழ்வில் பெறும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

1999 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் எனக்கு எதிரான வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுள் ஒருவராகிய நீதியரசர் வாத்வா,என்னை குற்றமற்றவர் என்று அறிவித்த பிறகும் இந்த 26 ஆண்டுகள் சிறை வாழ்க்கை எனக்கு பெரும் வேதனையைத் தருகிறது. ஆகவே கடந்த 26 ஆண்டுகளில் இதுவரை தோன்றாத எண்ணம் தற்போது ஆழமாக வேரூன்றியுள்ளது. இனி விடுதலை இல்லை என்ற நிலையில், உயிர் வாழ்வதிலும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனவே என்னை கருணைக் கொலை செய்து என்னுடைய உடலை என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக