புதன், 21 ஜூன், 2017

சுப. உதயகுமாரன்:அர்னாபின் ஸ்டிங் ஆபரேஷன்: நடந்தது என்ன? அர்னாப்பின் மோசடி அம்பலம்

அர்னாப் கோஸ்சுவாமியின் ரிபப்ளிக் டிவி, செவ்வாய்கிழமை கூடங்குளம்
அணு உலை எதிர்ப்பு செயல்பாட்டாளரும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப் பாளருமாகிய சுப. உதயகுமாரன் மீது வெளிநாட்டு நிதி பெற்றதாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளது. இதற்கு ‘ஆதாரமா’க ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ ஒன்றையும் அந்த டிவி ஒளிபரப்பியது. அந்த வீடியோ குறித்தும், ரிபப்ளிக் டிவி சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து சுப. உதயகுமாரன் தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.
“வட இந்திய டிவி ஒன்றில் என்னைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி பரப்பப்படுவது எனக்குத் தெரியும். அவர்கள் நிகழ்ச்சியிலேயே மதியம் 2 மணிக்கு பதில் சொல்லிவிட்டேன். கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணு உலைகள் கட்டுவதற்கு அரசு முடிவு செய்து, அடுத்த மாதம் அஸ்திவாரப் பணிகளைத் துவங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நாங்கள் நெல்லையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் ஒன்றை மே மாதம் நடத்தினோம். ஊர் ஊராகச் சென்று மக்களை சந்திக்கவும் முடிவு செய்தோம். இந்த நிலையில்தான் போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பணமும், சர்ச் பணமும் வந்திருக்கின்றன என்கிற அவதூறைக் கிளப்புகிறார்கள். இது கேட்டுக் கேட்டு புளித்துப்போனக் குற்றச்சாட்டு. என்ன நடந்தது?
இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஓர் இளம்பெண் வீட்டுக்கு வந்து தான் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு செய்வதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். நிறையப் புத்தகங்கள் இலவசமாகக் கொடுத்தேன். கேள்விகள் கேட்டாள், பதில் சொன்னேன். வீட்டில் டீ போட்டுக் கொடுத்தார்கள்.

தனது பேராசிரியர் ஒருவர் கொஞசம் நிதியுதவி செய்ய விரும்புவதாகச் சொன்னாள். நான் இயக்கத்துக்கு எப்போதுமே வங்கிக் கணக்கு கிடையாது அதனால் நான் அந்த உதவியைப் பெற முடியாது என்றேன். வேறு எந்த வழியிலும் உதவ முடியாதா என்று கேட்டாள். எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எங்கள் கட்சிக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதிலும் வெளிநாட்டு பணம் போட முடியாது என்றெல்லாம் சொன்னேன்.
நீ கூட வெளி நாட்டிலிருந்து பணம் போட முடியாது, ஆனால் உன் பெற்றோர் இந்தியாவுக்குள்ளே இருந்து பணம் போட முடியும் என்பது போன்ற விபரங்களைச் சொன்னேன். பணம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ரசீது கொடுத்துவிடுகிறோம் என்பதையும் சொல்லி, வெளிநாட்டுப் பணம் பெற நான் விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன். இதுதான் நடந்தது. அவளிடம் என் புத்தகங்களுக்குக்கூட காசு வாங்கவில்லை. வருங்காலத்தில் பணம் அனுப்பு என்றும் சொல்லவில்லை.” என தெரிவித்துள்ளார். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக