ஞாயிறு, 11 ஜூன், 2017

ரஜினின் அரசியல் பிரவேசம் ... நக்கீரன் கருத்து கணிப்பு

தமிழக அரசியலில் ரஜினி' -இதுதான் நக்கீரன் மேற்கொண்ட ஸ்பெஷல் சர்வே. தமிழகம் முழுவதும் களம் இறங்கிய நக்கீரன் சர்வே டீம், கடந்த 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில், தமிழகத்தின் நீள, அகலங்களில் பத்தாயிரம் பேரை சந்தித்தது.>சினிமா நட்சத்திரங்களின் அரசியலுக்கு தொடக்க கட்ட எதிர்பார்ப்பும் வரவேற்பும் தமிழக மக்களிடம் இருப்பது இயல்பானதுதான். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய எதிர்பார்ப்புகளையும் பலவிதத்தில் பார்க்க முடிந்தது. தமிழக மக்கள் திரளில் எத்தனை சதவிகிதம் பேர் "நான் ரஜினி ரசிகன்" என வெளிப்படையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோம். தமிழக மக்கள் திரளில் பெரும்பான்மையானோர் இன்றளவிலும் ரஜினியை ரசிப்பவர்களாக இருந்தாலும் அவர்களில் 28 சதவிகிதம் பேர் நம்மிடம், "நாங்கள் ரஜினி ரசிகர்கள்' என வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள். பெண்கள் மத்தியில் ரஜினி அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார்.


நமது சர்வேயில் பங்கேற்றவர்களில் 28 சதவிகிதம் பேர் "ரஜினி ரசிகர்கள்' என சொல்லிக் கொண்ட நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை 29 சதவிகிதம் மக்கள் ஆதரிக்கிறார்கள். "தமிழக அரசியலில் திராவிட கட்சிகளுக்கு மாற்று' என உருவான கட்சிகளை விட இப்போது ரஜினி பேசிய அரசியல் பேச்சு பெரிய அளவில், எளிய மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதை உணர முடிந்தது. ஆனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்கிற சந்தேகம் பொதுமக்கள் மனதில் இன்னமும் இருக்கிறது.

ரஜினி 96-ம் ஆண்டு டி.வி.யில் ஜெ.வுக்கு எதிராக பேசி, தி.மு.க.-த.மா.கா. கூட்டணியின் வெற்றிக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அப்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்று முதல்வராகவே வந்திருப்பார்' என்கிற ஆதங்கத்தையும் அவரது ரசிகர்கள் மத்தியில் கேட்க முடிந்தது.

"இப்போ அரசியலுக்கு வருவது லேட்தான். ஆனா ரஜினி, லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டாக வருவார். அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என இன்னமும் தெளிவாக சொல்லல. அதனால் நாங்க இப்ப எதையும் தெளிவாக சொல்ல முடியல. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்றால் ஒரு எழுச்சி கண்டிப்பாக உருவாகும்'' என்கிறார் இளங்கலை அறிவியல் படித்து முடித்துவிட்டு இரு பிள்ளைகளுக்கு தாயாக இருந்து... வீட்டு வேலைகளை கவனித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த ப்ரியா.

பி.ஜே.பி.தாங்க ரஜினிகாந்த்தை தமிழக முதல்வராக்கிப் பார்க்கணும்கிற வேகத்தில் மறைமுகமாக வேலை செய்யுது. பி.ஜே.பி. சப்போர்ட்டோட வர அவர் முயற்சி செய்வதை சிறுபான்மையினரான நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கிறோம்'' என்கிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த நசிமுதீன். சிறுபான்மையினரிடம் மட்டுமின்றி அன்றாட அரசியலை கவனிக்கும் அனைத்து தரப்பிலும் "பா.ஜ.க. தான் ரஜினியை தற்போது அரசியலுக்கு இழுத்து வருகிறது' என்கிற கருத்து நமது சர்வேயில் எதிரொலித்தது.

 "ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிக்க மாட்டோம்' என சொல்பவர்கள் மத்தியில் ரஜினிக்கும் பா.ஜ.க.வுக்குமான தொடர்பு பற்றிய சந்தேகம் தெரிகிறது.<">ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய சந்தேகத்தை 30 சதவிகித மக்கள் வெளிப்படுத்துகின்றனர். ""அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும்; அப்போது அவரைப் பற்றிய எங்களது நிலையை சொல்கிறோம்'' என்கிறார்கள் இந்தத் தரப்பினர்.

"அரசியலுக்கு வரும் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து தனியாக போட்டியிட வேண்டுமா? அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டுமா?' என்கிற கேள்விக்கு, ""அவர் எந்த முடிவெடுத்தாலும் சரி'' என 39 சதவிகிதம் பேர் நம்மிடம் கருத்து தெரிவித்தனர். அதிலிருந்து ஒரு சதவிகிதம் குறைவாக 38 சதவிகிதம் பேர்
"ரஜினி தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார்' என தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்

."ரஜினி தனியாக போட்டியிட்டால் ஜெயிக்க முடியாது, அவர் கூட்டணி வைத்தால் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும்' என 23 சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்கிறார்கள். இதில் பா.ஜ.க. ஆதரவு மனநிலை கொண்டோருடன், ரஜினி ரசிகர்களில் தி.மு.க.வுக்கு தொடர்ந்து வாக்களித்து வருபவர்களும் அடக்கம். எனினும், "தனிக்கட்சியே ரஜினிக்கு நல்லது. பா.ஜ.க. போன்ற கட்சிகளின் வலையில் விழுந்து விடக்கூடாது' என்ற கருத்து பரவலாக வெளிப்பட்டது.

"ரஜினி தமிழரல்ல என விமர்சிக்கப்படுவது தவறு' என்று 66 சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்கிறார்கள். ""தமிழ் இனப் படுகொலை 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்தது. இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனா தமிழர்களைக் கொன்று குவித்தான். அப்பொழுது முதன்முதலாக தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர் ரஜினி. மதுரையில் உள்ள 4 மாசி வீதிகளிலும் ரஜினி ரசிகர்கள் ஊர்வலம் நடத்தினோம். அந்த ஊர்வலத்தின் முடிவில் விளக்குத்தூண் பகுதியில் ஜெயவர்த்தனாவின் கொடும்பாவியை ரஜினி ரசிகர்கள் கொளுத்தினோம். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியபோது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து, மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தவர் ரஜினி'' என்கிறார் மதுரை தெற்குத் தொகுதி நிர்வாகியான பழனி பாட்ஷா.

"இந்த ரஜினியால தமிழர்கள் கண்ட பலன் என்ன சார்? காவிரி பிரச்சினையில, ஹைட்ரோ கார்பன் பிரச்சினையில, நீட் தேர்வு, இப்ப மாட்டுக்கறி விவகாரம் இதுல எதுக்காக ரஜினி குரல் கொடுத்தார்'' என கேட்கிறார் துரையரசபுரம் கண்ணன்.

"சினிமாவில் ரஜினி செய்வது போல, நிஜத்திலும் ரஜினியால் அரசியல் சிஸ்டம் மாறுமா? "சிஸ்டம் கெட்டுப் போச்சு எனச் சொல்லும் ரஜினி அதை மாற்றுவாரா?' என தமிழக மக்களிடம் கேட்டபோது "ரஜினி சொன்னது மாதிரி அரசியல் சிஸ்டத்தை மாற்றுவார்' என 25 சதவிகிதம் பேர் அப்படியே ரஜினி மீது மலை போன்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். 33 சதவிகிதம் பேர் அது பற்றி தெரியாது, என சொல்ல, "ரஜினியால் சிஸ்டம் மாறாது' என 42 சதவிகிதம் பேர் உறுதியாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு அரசியலின் மீது அத்தனை நம்பிக்கை.>ஆண், பெண் என இருபாலர்களிடமும் அடித்தட்டு முதல் மேல் மட்டம் வரை தமிழக மக்கள் மத்தியில் "ரஜினி' என்கிற பெயருக்கு ஈர்ப்பு இருப்பதை நம்மால் உணர முடிந்தது. •    ரஜினியின் அரசியல் வருகை என்ன மாற்றத்தை உருவாக்கும்?•    ரஜினி அரசியலுக்கு வந்தால் அது எந்த கட்சியை பாதிக்கும்? •    இரு கழகங்களின் செல்வாக்கு எப்படி உள்ளது?•    மற்ற கட்சிகளின் பலம்?இவை பற்றிய சர்வே முடிவுகள் வரும் இதழில்...

தொகுப்பு: தாமோதரன் பிரகாஷ்
உதவி : சி.சுரேஷ்குமார்


மற்றும் நக்கீரன் சர்வே படை

பரமசிவன், சக்திவேல், ராமகிருஷ்ணன், சிவசுப்ரமணியன், ஜீவாதங்கவேல், எஸ்.பி.சேகர், ஜெ.டி.ஆர்., ராஜா, வடிவேல், அருள்குமார், பகத்சிங், செல்வகுமார், முகில், மணிகண்டன், அரவிந்த், ஜீவாபாரதி, அருண்பாண்டியன், சுந்தரபாண்டியன், காளிதாஸ், ஷாகுல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக