புதன், 28 ஜூன், 2017

தலித்தியம் என்பது இவர்களுக்கு தனித்துவத்தை அளிக்கின்ற ஒரு விற்பனை லேகியம்.

kavitha Sornavalli :சமூக நீதி என்ற பதமே தலித் விடுதலையை நோக்கி நடந்த
அண்ணல் அவர்களால்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அனைவருக்கும் சம உரிமை என்பதை நான் இங்கு தலித் விடுதலைக்காக போராடுவது என்ற அளவில் தலித்தியமாக முன்னிறுத்தி பதில் அளிக்கிறேன்.
தலித்தியம் என்ற சரக்கு சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறதா ? என்றால் ஆமாம்.
யாரும் புகுந்திராத காட்டிற்குள் வழித்தடத்தை ஏற்படுத்தி தரும் யானையைப்போல சாதீய சிக்கல்களால் மூடப்பட்டிருந்த இந்திய சமூகத்தில் தங்களது திடமான கொள்கைளின் மூலம் வழியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் அண்ணலும் பெரியாரும்.
அந்த வழியில் விரும்பி பயணிக்கும், சாதி என்கிற தோலை உரித்து எறிந்த பிற சாதி இளைஞர்கள் (அவர்கள் குறைந்த அளவே என்றாலும்), பகுத்தறிவின் நீட்சியாகவே தலித்தியத்தை பார்க்கிறார்கள். சமூக பரப்பில் தலித்துகளுக்கான நீதி என்பது தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் வலியை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தலித்தியம் என்னும் தேரை அசுர வேகத்துடன் இழுத்துச் செல்ல தோள் கொடுக்கிறார்கள். தலித்தியம் பற்றி பேசுகிற அனவைரையும் கொண்டாடுகிறார்கள். இங்குதான் தலித்தியத்தை மிகச்சிறந்த விற்பனை பொருளாக சந்தை விரிக்கிறார்கள் வியாபாரிகள்.

2009-ம் இறுதியில் முகநூல் வந்தாலும், நான் தலித்தியம் பேசத்தொடங்கியது 2011-ல்தான் என்று நினைகிறேன். வழக்கமான "தலித்" அடையாள தாழ்வுணர்ச்சி எனக்கும் இருந்தது.
பதின் வயதில் நான் அணிந்திருந்தத தங்கச்சங்கிலியை ஆச்சர்யமாக பார்த்த தலித் அல்லாத சாதித்தோழியின் அம்மா ஒருவர் கேட்டே விட்டார் "உங்க வீட்டுல தங்க சங்கிலி எல்லாம் உண்டா" என்று.
அந்த "தங்கச்சங்கிலி" அவமானத்தை என் தலையில் நான் வாழ்நாளின் பாதி தூரத்திற்கு சுமந்து கொண்டே சென்றிருக்கிறேன். படிப்பும் வேலையும் துணிவைத் தந்திருந்தது.மெது மெதுவாக கதைகளின் வழியாக நான் என்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தத் தொடங்கினேன். சுடலையை, மோகினியை், சங்கிலி புத்தாரை, பார்வதி அம்மனை என்று தலித் வாழ்வியல் அடையாளங்களை இலக்கியமாக பதிவு செய்ய ஆரம்பித்தேன். அங்குதான் நான் யார் என்பதை எனக்கே என்னால் வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது.
தலித் அடையாளத்துடன் செயல்படத் தொடங்கிய காலங்களில் சமூக ஊடங்கள் எங்கும் பரவலாக தலித் பெண்ணியவாதிகள் நிரம்பி இருந்தார்கள். அண்ணலின் அத்தனை Quote-களையும் எடுத்துப்போட்டு விவாதிக்கும் அளவிற்கு. 6-ம் வகுப்பிலயே அண்ணல் எனக்கு அறிமுகபடுதப்பட்டார் என்றாலும் அவரின் அத்தனை ஆக்கங்களையும் நான் படித்திருக்கவில்லை. இந்தப் பெண்களை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. எவ்வளவு படித்திருக்க வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து அவர்களைக் கொண்டாடி இருக்கிறேன்.
அவர்கள் எழுதியதை ஷேர் செய்தேன்.தோம். தலித் கூட்டங்களுக்கு அவர்களே தலைமை தாங்கினார்கள். தலித்துகள் சிறுபான்மையாக வசிக்கும் ஊர்களில் அவர்களின் சார்பாக கொடி ஏற்ற இவர்கள் போனார்கள். தலித் பிரதிநிதியாக ஆங்கில ஊடங்களில் அமர்ந்தார்கள். சிலர் ஐநா சபை வரை சென்றார்கள்.
ஆனால் இவர்கள் யாருமே ஒடுக்கப்பட்ட தலித் இனத்திலிருந்து வரவில்லை என்றபோது நிஜமாகவே வலித்தது. இந்தப் பெருமைகளும் பிரதிநித்துவமும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தலித்துக்கு சொந்தமானது என்று தெரிந்தபோதுதான் இவர்களை எதிர்த்து நான் எழுத ஆரம்பித்தேன்.
"எங்களுடன் தோளுக்கு தோளாக வாருங்கள். உடன் பயணியுங்கள். தலைமை தாங்க எண்ணாதீர்கள். அந்த இடம் சமூக சூழலில் ஒடுங்கிகொண்டிருக்கும் ஒரு தலித்துக்கு சொந்தமானது” என்று.
ஆம். இது போன்றவர்கள்தான் தலித்தியத்தை விற்பனை சந்தையில் சல்லிசு விலைக்கு விற்பவர்கள். சல்லிசு விலை என்றல் அற்ப லைக்குகளும், கொஞ்சம் புகழ்மாலைகளும். தலித்தியத்தை சிறந்த விற்பனை லேகியமாக தலித்துகளுக்கே விற்பனை செய்வார்கள். இவர்களுக்கு அண்ணல் என்பவர் வெறும் காபி பேஸ்ட் வாசகம் மட்டுமே.
தலித்தியம் என்பது இவர்களுக்கு தனித்துவத்தை அளிக்கின்ற ஒரு விற்பனை லேகியம்.
பெருங்கூட்டம் ஒன்றின் தலைமையை நோக்கி நகர வைக்கிற விற்பனை லேகியம்.
அதே கூட்டம் ஆட்டு மந்தையென தன்னை பின் தொடர்ந்து வர செய்கிற போதையை அதிகரிக்கும் விற்பனை லேகியம்.
அம்பேத்கர் என்பவரை பேஷன் ஸ்டேட்மென்ட்டாக மட்டுமே பார்க்க வைக்கும் விற்பனை லேகியம்.
இது போன்ற தலித்திய விற்பனையாளர்களின் விற்பனையில் முதல் பலியிடப்படுவது தலித் இனத்தை சேர்ந்த ஆடுகள் மட்டுமே. ஆடுகளை பலி கொடுத்துவிட்டு இவர்கள் தங்களின் தலித் விற்பனையை கூசாது செய்து கொண்டே இருப்பார்கள்.தப்பித்தவறி இவரகளின் வார்த்தை ஜாலங்களில் இருந்து மயங்கி வெளிவரும் தலித்தை இவர்கள் குழு மனப்பான்மையுடன் தாக்க ஆரம்பிப்பார்கள். உதிரி என்பார்கள். அறிவிலி என்பார்கள்.கடைசியில் பகுத்தறிவு இல்லை என்ற தங்களின் எச்சை முகங்களை நம்மீது வீசுவார்கள்.
எந்த சீசனிலும் டிஆர்பியில் முந்த வைப்பது தலித்திய விற்பனை மட்டுமே. அதை சரியாக பயன்படுத்துபவர்கள் icon ஆகி விடுவார்கள். இதை நியாயமாக அனுபவித்திருக்க வேண்டிய தலித் கடைசி வரை புறந்தள்ளப்பட்டுக்கொண்டே இருப்பான்.டாட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக