வியாழன், 22 ஜூன், 2017

ரஜினிக்கு அமித் ஷா கெடு! எடப்பாடிக்கு தினகரன் கெடு...

தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் போயஸ் கார்டன் மாறப் போகிறது” என்றபடியே கழுகார் வந்தார். ‘‘வேதா நிலையத்தில் புதிதாக யாராவது வரப் போகிறார்களா?” என்றோம். “போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ மட்டும் இல்லை. ரஜினிகாந்தின் ‘பிருந்தாவனம்’ இல்லமும் இருக்கிறது” என்று சிரித்தபடியே கழுகார் பேச ஆரம்பித்தார். ‘‘ரஜினியின் பிருந்தாவனத்தின் ஆதரவைப் பெற பல கட்சிகள், பல சக்திகள், பல ஆண்டுகளாக, பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன அல்லவா? அைத வைத்துச் சொல்கிறேன். தினமும் ஏதாவது ஒரு பிரமுகரை ரஜினி சந்தித்து வருகிறார். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆர்வத்தைக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் மற்ற கட்சிகளை விட       பி.ஜே.பி-தான் உன்னிப்பாகக் கவனிக்கிறதாம்!
‘ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் இணைக்கவே பிரதமர் மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் விரும்புகிறார்கள். ஆனால், ரஜினி அதற்குப் பிடி கொடுக்கவில்லை. மும்பையில் ‘காலா’ ஷூட்டிங்கில் இருந்தபோதும் அவர் மனதைக் கரைக்க முயற்சி செய்தார்கள். மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ்கூட ரஜினியைச் சந்தித்துப் பேசினார். எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசினாலும், எந்த உறுதிமொழியையும் ரஜினி எப்போதும் கொடுக்கவில்லை.  அதேநேரத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை, பல அமைப்புகளின் பிரமுகர்களை அவர் சந்தித்து வருவது      பி.ஜே.பி-க்குக் குழப்பத்தைக் கொடுத்துள்ளது.”


‘‘ஓஹோ!”

‘‘இந்த நிலையில், ‘பி.ஜே.பி-யில் இணைவீர்களா...மாட்டீர்களா?’ என்ற ரீதியில் ரஜினிக்கு அமித் ஷா கெடு வைத்துள்ளாராம். டெல்லி தூதர் ஒருவர் ரஜினியின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்துள்ளார். ‘விரைவில் மோடியைச் சந்திக்க ரஜினி வரவேண்டும்’ என்ற நெருக்கடியும் தரப்படுகிறதாம். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் ரஜினி தவிப்பதாகவும் சொல்கிறார்கள். ‘நான் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் ஆரம்பிப்பேன் என்று தெளிவாகச் சொன்ன பிறகு எதற்காக இப்படி நெருக்கடி கொடுக்கிறார்கள்? நான் பி.ஜே.பி-யில் இணைவதாக எப்போதுமே சொல்லவில்லையே?’ என்று புலம்புகிறாராம் ரஜினி!”

‘‘தினமும் அவர் நடத்தும் சந்திப்புகளைப் பார்த்தால் அரசியலில் இறங்குவது முடிவாகிவிட்டது போலத் தெரிகிறதே?” ‘‘1996-ம் ஆண்டு ரஜினியை எந்தக் காரணங்கள் தயங்க வைத்தனவோ... அதே காரணங்கள்தான் 2016-ம் ஆண்டு இறுதிவரையிலும் அவரைத் தயக்கத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தன. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் தங்கள் ஆளுமையாலும், அரசியலாலும் அவரை அச்சுறுத்தியே வந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதாக ரஜினி உணர்கிறார். ரசிகர்கள் சந்திப்பில், ‘நான் என்ன பேசினாலும் அதற்கு அதிகமாக எதிர்ப்பு வருகிறது. அரசியலில் எதிர்ப்புதானே மூலதனம்...’ என ஸ்லோமோஷனில் தொடங்கி, ‘நான் ஒரு பச்சைத் தமிழன்’ எனச் சொல்லி, ‘போர் வரும்வரை காத்திருங்கள்...’ என்று முடித்தது வரை எல்லாமே அவர் தயார் ஆகிவிட்டதற்கான முஸ்தீபுகள். அதைவிட முக்கியம், அந்தச் சந்திப்புக்குப் பிறகு தொடர்ந்து ரஜினி நடத்திய ஆலோசனைகள். பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், அரசியல் பிரபலங்கள் என்று பலதரப்பு மக்களிடமும் அவர் இன்னும் தொடர்ந்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்.”

‘‘இவை அனைத்துமே அவர் நடிக்கும் ‘காலா’, ‘2.0’ திரைப்படங்களின் புரமோஷனுக்காகத்தான் என்பதுதானே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு?”

‘‘அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அரசியல் ஆசை வந்துவிட்டதுதான் முக்கியமான காரணம் என்கிறார்கள்!”

‘‘தி.மு.க-வுடன் நெருக்கமாக இருந்த தொல்.திருமாவளவனையே ரஜினி புயல் அசைத்துவிட்டதே?”

‘‘அரசியல் வட்டாரம், ரஜினியின் ஆலோசகராக திருமாவளவனைச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. திருமாவைப் பாராட்டி பகிரங்கமாக ரஜினி பேசினார். இப்போது, ரஜினியைப் பாராட்டி திருமா பேட்டி தந்து வருகிறார். ‘ஆனந்த விகடனி’ல் திருமாவின் பேட்டி வெளியானது. ‘தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்ற தொனியில் திருமா கருத்துச் சொன்னார். ஸ்டாலினைக் குறை சொல்லும் வார்த்தைகளும் அந்தப் பேட்டியில் இருந்தன. இது தி.மு.க-வுக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்குமான பிரிவினைக்கும், ரஜினிக்கும் திருமாவுக்குமான நெருக்கத்துக்கும் காரணமாக மாறியது.”

‘‘இது எப்படி நடந்தது?”

‘‘ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலை ரஜினி அறிந்துகொண்டது சமீபத்தில்தான். ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் இயக்குநர் பா.இரஞ்சித் இணைந்தார். அப்போது இருந்தே ரஜினியோடு அரசியல் விவாதங்களையும் இரஞ்சித் நடத்தி வந்தார். இப்போது மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பிலும் அது தொடர்ந்தது. இந்த வழியில் திருமாவளவனோடும் ரஜினிக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே ரஜினியும் திருமாவளவனும் நல்ல அறிமுகம் என்றாலும், ரஜினி - இரஞ்சித் கூட்டணிக்குப் பிறகு இது இன்னும் பலமானது. திருமாவளவனின் ஆலோசனைகளும் கருத்துக்களும் கூடுதலாக ரஜினியை எட்டின. ரஜினியின் எண்ண ஓட்டங்களும் திருமாவளவனை வந்தடைந்தன.”
‘‘திருமாவளவனின் பேட்டிகளுக்கு ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன?”

‘‘அந்தப் பேட்டியைப் படித்ததும் திருமாவளவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி உள்ளார். அதில், ‘இதுவரை எல்லோரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது மட்டுமே, ‘நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று கூறியுள்ளனர். ஆனால், நீங்கள் மட்டும்தான் வெளிப்படையாக ‘அரசியலுக்கு நான் வரவேண்டும். அதுவும் தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்’ என்று நெகிழ்ந்தாராம். அதுபோல, தன் குடும்பத்தினர் திருமாவளவன் பேட்டியைப் படித்து மிகவும் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.”

‘‘அப்படியானால் பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினியின் செயல்பாடுகள் இருக்காதோ?”

‘‘ரஜினிக்குத் திருமாவளவன் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களில் மிக முக்கியமானவை, ‘தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சியும் எடுபடாது; அதன் கொள்கைகள், தத்துவங்கள் எதுவுமே மக்களை வசீகரிக்காது. பி.ஜே.பி-யோடு சேர்ந்தால் ரஜினிக்குப் பலவீனம்’ என்பவைதான். திருமாவளவன் சார்பில் வலுவாக இதற்கு வாதங்களும் வைக்கப்பட்டுள்ளன.”

‘‘திருமாவளவனின் பேட்டியை எதிர்க்கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன?”

‘‘ஆளும் அ.தி.மு.க தரப்பு அதைப் பெரிதுபடுத்தவில்லை. காரணம், தங்களுக்குள் இருக்கும் ஓராயிரம் பஞ்சாயத்துகளைப் பேசித் தீர்க்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இந்த நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம், திருமாவளவனின் பேட்டி எல்லாம் அவர்கள் சிந்தனையிலேயே நிற்காது. ஆனால், தி.மு.க தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.”
‘‘இருக்கத்தானே செய்யும்?”

‘‘ ‘கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்று சொன்ன திருமாவளவன், ‘கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு வசீகரத் தலைமை தமிழகத்தில் இல்லை. ரஜினி அந்த இடத்தை நிரப்பக்கூடும். மு.க.ஸ்டாலினுக்குத்  தி.மு.க வாக்கு வங்கியைத் தாண்டி பொதுவான மக்களின் நம்பிக்கையை, வரவேற்பைப் பெறக்கூடிய அளவுக்கு இன்னும் ஓர் அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது ஸ்டாலினைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ‘திருமாவளவன் இதை வேண்டுமென்றே செய்கிறார். கலைஞர் வைரவிழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் திருமாவளவனை மேடை ஏற்றாதது... 2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது நடைபெற்ற சில கசப்பான நிகழ்வுகள்... போன்றவற்றை வைத்துக்கொண்டு திருமாவளவன் இப்படிச் செய்கிறார்’ எனச் சொல்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.”

‘‘ரஜினி அரசியலுக்கு வரப் போவதில் அவரைவிட, அவரின் ரசிகர்கள் மிகுந்த பரபரப்பில் இருக்கிறார்கள். உற்சாக மிகுதியில் அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், வழக்கமான கழக அரசியல் போன்றதாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிகம் கலந்துகொண்டது ரஜினி ரசிகர்கள்தான். சில நிர்வாகிகளே ஆட்களைத் திரட்டிக்கொண்டு போனார்களாம். கூடங்குளம் போராட்டத்தை நடத்திய சுப.உதயகுமார், அந்த நிகழ்ச்சியில், ரஜினி பற்றிக் கடுமையான விமர்சனங்களை வைத்தபோது, அவரைக் கண்டித்து மோசமான கோஷங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர். இதேபோல நாஞ்சில் சம்பத்தையும் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்கள். ‘அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படிச் செய்கிறார்களே இவர்கள்’ என நொந்துபோய் விட்டாராம் நாஞ்சில். இதற்கெல்லாம் தெளிவாக ஹோம்வொர்க் செய்துகொண்டு ரஜினி ரசிகர்கள் வந்ததாகச் சொல்கிறார்கள்.’’

‘‘சட்டமன்றத்தில் தினம் தினம் ஏதாவது பரபரப்புகள் நிகழ்கின்றனவே..?”

‘‘ஆமாம்! ஒருபக்கம் ஸ்டாலின் தினமும் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி எடப்பாடிக்குத் தலைவலி கொடுக்கிறார். இன்னொரு பக்கம், சொந்தக் கட்சியிலேயே அவருக்குச் சங்கடங்கள் கொடுக்கும் காரியங்கள் நிகழ்கின்றன. ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் எத்தனை நாள் நீடிப்பார்’ என்று பந்தயம் கட்டாத குறையாக கோட்டையில் பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்குக் காரணம், தினகரன் வைத்துள்ள கெடுதான். ‘தன்னைக் கண்டுகொள்ளாமல் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் எடப்பாடி’ என்ற கோபம் தினகரனுக்கு இருக்கிறது. ‘ஏற்கெனவே நான் சொன்ன சில அமைச்சர்களை நீக்க வேண்டும். சில அமைச்சர்களைச் சேர்க்க வேண்டும். அதைச் செய்யாமல் இந்த ஆட்சி நீடிப்பது நல்லது அல்ல. இந்த ஆட்சியை ஸ்டாலின்தான் கவிழ்க்க வேண்டும் என்று இல்லை. நானே கவிழ்ப்பேன். மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்’ என்று கொந்தளித்துக் கொண்டு இருக்கிறாராம் தினகரன். ‘எனது அமைதி எல்லாம் ஜூலை 17 ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான். அதன்பிறகு நான் யார் என்று காட்டுவேன்’ என்கிறாராம் தினகரன்!”

‘‘அப்படியா?”

‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியும் பன்னீர் அணியும் போட்டி போட்டுக் கொண்டு செய்கின்றன. ஜூலை மாதத்தில் ஒருநாள் சென்னை வந்து சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை மோடி திறக்க இருக்கிறாராம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை டிசம்பர் மாதம் எடப்பாடி அணி சென்னையில் நடத்துகிறது. இந்த இரண்டு விழாக்களின்போதும் தனக்கு முக்கியத்துவம் தர  வேண்டும் என்று தினகரன் விரும்புகிறாராம். அதற்குள் தனது கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி வர வேண்டும். அதைத் தொடர்ந்து பன்னீர் அணி இணைக்கப்பட வேண்டும் என்று தினகரன் நினைக்கிறாராம்.”
‘‘பலே திட்டமாக இருக்கிறதே?”

‘‘சசிகலா குடும்பத்துக்குள் நடைபெறும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். திவாகரனின் மகன் ஜெயானந்த், டாக்டர் வெங்கடேஷ், தினகரனின் தம்பி பாஸ்கரன் ஆகிய மூன்று பேரும் சந்தித்து, சில விஷயங்களைப் பேசி இருக்கிறார்கள். சசிகலாவைச் சிறையில் சந்தித்தபோது, அவர் சொன்ன சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாராம் டாக்டர் வெங்கடேஷ். தங்கள் குடும்பத்தின் பிடியிலிருந்து இந்த ஆட்சி விலகிச் செல்வதை விடக்கூடாது என்பதே இவர்களின் முடிவாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க ஆதரவைக் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசினார் மோடி. ஆனால், ‘ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க ஆதரவு யாருக்கு என்பதை சசிகலா முடிவு செய்வார்’ என்கிறார் தினகரன். அ.தி.மு.க-வில் இன்னமும் தங்கள் குடும்பம் வைப்பதுதான் சட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தினகரன்.”

‘‘இனி என்ன ஆகும்?”

‘‘தினகரன் தனது வட்டாரத்தில் பேசும்போது, ‘எடப்பாடி வந்துவிட்டால் பன்னீரை அரை மணி நேரத்தில் வர வைப்பேன்’ என்றாராம். தமிழக சட்டமன்றத்தில் தினகரன் ஆதரவு     எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளும்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததன் மூலம், எடப்பாடியை அச்சுறுத்த தினகரன் விரும்புவது தெரிகிறது. இதுபோன்ற ஷாக் ட்ரீட்மென்ட் தொடரும் என்கிறார்கள்” என்றபடி கழுகார் பறந்தார்.  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக