வியாழன், 22 ஜூன், 2017

நீதிபதி கர்ணன் நெஞ்சுவலியால் கொல்கொத்தா அரசு மருத்துவமைனையில் ...

கொல்கத்தா ஜெயிலில் அடைக்க கொண்டு செல்லப்பட்ட நீதிபதி கர்ணன், நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் கூறியதால், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மே 9-ந் தேதியன்று, நீதிபதி கர்ணன் சென்னைக்கு வந்தார். கொல்கத்தா போலீசார் கைது செய்ய வருவதை அறிந்து தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த கொல்கத்தா தனிப்படை போலீசார், அவரது செல்போன் அழைப்புகளை கண்காணித்து, அவர் கோவை புறநகரில் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு ஒரு பண்ணை இல்லத்தில் தங்கி இருந்த அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், நள்ளிரவு 12.20 மணிக்கு அவரை தனியார் விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை விமான நிலைய ஓய்வறையில் பலத்த பாதுகாப்புடன் தங்கவைத்தனர். இந்நிலையில், நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுவிக்கவும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை நிறுத்திவைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று காலை மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, நீதிபதி கர்ணனை கொல்கத்தாவுக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகள் தொடங்கின. காலை 11.50 மணிக்கு அவர் ஏர் இந்தியா விமானத்தில் கொல்கத்தாவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் கொல்கத்தா தனிப்படை போலீசார் 6 பேர் சென்றனர். கொல்கத்தா விமான நிலையம் சென்றடைந்தவுடன், அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி. ராஜ் கனோஜியா, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து நேராக கொல்கத்தா பிரசிடென்சி ஜெயிலுக்கு நீதிபதி கர்ணன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அடைப்பதற்காக, உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட சற்று நேரத்தில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கூறினார். உடனே, ஜெயில் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நீதிபதி கர்ணனை பரிசோதித்து பார்த்தனர். ஈ.சி.ஜி. பரிசோதனையும் செய்யப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், கர்ணனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.அதையடுத்து, நீதிபதி கர்ணன், அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  மாலைமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக