ஞாயிறு, 25 ஜூன், 2017

6 மாதத்தில் 97 படங்கள்.. 8 படங்கள் மட்டுமே வெற்றி ,அதில் ஏழு சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி ....

அதிக திரைப்படங்கள்  : லாபம்?மின்னம்பலம் :தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதத்தில் சுமார் 97 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாகுபலி 2 மட்டுமே வசூலில் பெரும் சாதனைப் படைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருட்டு விசிடி உள்ளிட்ட விவகாரங்களால் சினிமா தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்து வந்தாலும் படங்கள் தயாரிக்கப்படுவது மட்டும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இருநூறு படங்களுக்கு மேல் ரிலீஸாகி வருகிறது. இந்த ஆண்டும் அதிக படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 97 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் விஜய்யின் ’பைரவா’, சூர்யாவின் ’சிங்கம் 3’, ஜெயம்ர வியின் ’போகன்’, விஷாலின் ’கத்தி சண்டை’, ‘பாகுபலி 2’ உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும். ஆனால் இந்த 97 படங்களில் வெற்றியைக் குவித்த படங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்றுதான். அது பாகுபலி 2 !
வசூல் சாதனைப் படைத்துள்ள இந்தப் படத்தைத் தவிர மற்றப் படங்களில் சிறு பட்ஜெட் படங்களான, அதே கண்கள், குற்றம் 23, கவண், தொண்டன், சரவணன் இருக்க பயமேன், ப.பாண்டி உட்பட சில படங்கள் மட்டுமே பார்டரில் பாஸ் செய்துள்ளன.
அடுத்த எதிர்பார்ப்பில், மெகா பட்ஜெட் படங்களான அஜீத்தின் விவேகம், விஜய்யின் மெர்சல், கமலின், விஸ்வரூபம் 2 படங்கள் இந்த வருட கோட்டாவில் வரிசையில் இருக்கின்றன. இந்தப் படங்கள் மற்றும் தெலுங்கு, ஆங்கில டப்பிங் படங்களையும் சேர்த்து 250 படங்களுக்கு மேல் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. ஆனால், அதில் எத்தனை மெகா ஹிட்டாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது போன்ற சூழல் தொடர்ந்து வரும் பட்சத்தில் படங்களில் முதலீடு மட்டும் போட்டு அதற்கான லாபம் என்பது இல்லாமல் நஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே பார்க்க நேர்கிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தமிழ்த்திரைப்பட சங்கங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? என்ற கேள்வி தொடர்ந்து வந்த வண்ணமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக