ஞாயிறு, 25 ஜூன், 2017

நீதிபதி அரிபரந்தாமன் : ஒற்றை இந்திய மதவாதத்தை முடியடிக்க திமுகவால் மட்டுமே முடியும்


1967-க்கு முந்தைய திமுக: நீதிபதி அரிபரந்தாமன்
மின்னம்பலம் " ஒற்றை இந்தியா கருத்தைத் திணிக்கும் மதவாதக் கட்சியை தோற்கடிக்க, 1967-க்கு முந்தைய திமுக இருந்ததைப்போல் தற்போது திமுக மாற வேண்டும்’ என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழாவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில், ‘நீதியரசர்கள் பார்வையில் கலைஞர்’ என்ற கருத்தரங்கம் ஜூன் 24ஆம் தேதி (நேற்று) நடைபெற்றது. இதில் முன்னாள் நீதிபதிகள் எஸ்.மோகன், ஏ.கே.ராஜன், கே.ஞானப்பிரகாசம், ஜி.எம்.அக்பர் அலி, டி.அரிபரந்தாமன் ஆகியோர் பங்கேற்று கருணாநிதி இயற்றிய மக்கள்நலச் சட்டங்கள் குறித்து நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வில் அரிபரந்தாமன் பேசுகையில், “ஒற்றை இந்தியா கருத்தை முன்வைக்கக் கூடிய இந்துத்துவா கருத்துகள் தற்போது வலுவாக எழுந்து வருகின்றன. இந்தக் கொள்கையைத் தகர்ப்பதற்கான ஆயுதம் பெரியாரின் கருத்துகள் மட்டும்தான். ஒற்றை இந்தியா கருத்தைத் திணிக்கும் மதவாதக் கட்சியை நாம் தோற்கடிக்க வேண்டும். 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இருந்ததைப்போல திமுக தற்போது மாற வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு சென்றுவிட்டது. நீட் வேண்டாம் எனத் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதிலே இதுவரை வரவில்லை. நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும். இந்திக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 343 சட்டப்பிரிவை எரித்து திமுக-வினர் பதவியை இழந்தனர். ஆனால், இன்றும் 343 சட்டப்பிரிவு தொடர்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக