செவ்வாய், 23 மே, 2017

அமைச்சர் பதவி கேட்டு 8 எம் எல் ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

சென்னை : முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்பட 8 எம்எல்ஏக்கள் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதிருப்தியில் உள்ள அவர்கள், முதல் முறையாக நேரடியாக வந்து முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். சில நாட்களில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 122 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அவரை எதிர்த்து தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எடப்பாடி தலைமையிலான அரசை தொடர்ந்து ஆதரித்ததால், 122 எம்எல்ஏக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுவதுடன், அதிகமான பணமும் தரப்படும் என்று கூவத்தூரில் தங்கி இருந்த எம்எல்ஏக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த சிலர், தங்களுக்கு பணம் வேண்டாம், அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவர்களுக்கு சில மாதங்களில் அமைச்சரவையில் இருந்த சிலரை தூக்கி விட்டு, அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், கூவத்தூரில் சொன்ன வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாததால் அதிமுக (அம்மா) அணியில் உள்ள எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தியில் இருக்கின்றனர். முதல்கட்டமாக கடந்த மாதம், எஸ்சிஎஸ்டி பிரிவை சேர்ந்த சுமார் 25 எம்எல்ஏக்கள் தமிழ்செல்வன் தலைமையில் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தி எடப்பாடி அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் பிரதான கோரிக்கை, தலித் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வழங்க வேண்டும் என்பதுதான். இதையடுத்து கடந்த 17ம் தேதி முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய எம்எல்ஏக்களுமான தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் தலைமையில் 13 எம்எல்ஏக்கள் சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் கூடி திடீரென ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், கட்சியில் கடந்த ஓராண்டாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. எம்எல்ஏக்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை. இதனால் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் 3 முன்னாள் அமைச்சர்களின் கோரிக்கை, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதாகத்தான் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், முதல்வரின் ஏற்பாட்டின் பேரில் சில மூத்த அமைச்சர்கள் அவர்களிடம் சமாதானம் பேசி அமைதிப்படுத்தினர்.

இந்நிலையில், தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை தொகுதி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் தூசி மோகன் (செய்யாறு), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்) உள்பட 8 எம்எல்ஏக்கள் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென தலைமை செயலகம் வந்தனர். அங்கு வந்தவர்கள் முதல்வர் எடப்பாடி அறைக்கு வெளியே உள்ள வரவேற்பு அறையில் இரு ந்து கொண்டு, முதல்வரை சந்திக்க வேண்டும் என்று உதவியாளர்களிடம் சொல்லி அனுப்பினர். ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும், ஆட்சிக்கு எதிராக இதுவரை வெளியே ரகசிய கூட்டம் போட்டு மிரட்டல் விடுத்து வந்தவர்களும், தன்னை சந்திக்க தலைமை செயலகத்துக்கே நேரில் வந்ததை கேள்விப்பட்ட முதல்வர் எடப்பாடி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பின்னர் தலைமை செயலகத்தில் இருந்த மற்ற மூத்த அமைச்சர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் அறைக்கு சென்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர். சிறிது நேரத்தில், அதிமுக (அம்மா) அணி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு தலைவர் வைத்திலிங்கம் எம்பியும் தலைமை செயலகத்துக்கு நேரில் வந்து இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களை முதல்வர் எடப்பாடி தனது அறைக்கு அழைத்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும் தோப்பு வெங்கடாசலம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தனித்தனியே சந்தித்து பேசினர். பின்னர் நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் தலைமை செயலகத்தில் இருந்து வெளியே வந்த எம்எல்ஏக்கள் தோப்புவெங்கடாசலம், செந்தில்பாலாஜி ஆகியோரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க முயன்றனர். ஆனால், அவர்களில் யாரும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்று விட்டனர். பின்னர் தோப்பு வெங்கடாச்சலம் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, “முதல்வர் எடப்பாடியை சட்டமன்ற கட்சி தலைவராக கூவத்தூரில் தேர்ந்தெடுத்தபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்த 122 எம்எல்ஏக்களுக்கும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்கள் ஆன பிறகும் அறிவித்த வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேற்றி தரவில்லை. இதனால் இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்எல்ஏக்கள் தொகுதிக்குள் சுதந்திரமாக சென்று வர முடியவில்லை. தொகுதி மக்கள் பிரச்னைகளையும் எங்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை.

மேலும், ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், உடனடியாக அதிமுக (அம்மா) அணி சார்பாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார். முதல்வர் எடப்பாடி அணிக்கு தற்போது 122 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. ஓபிஎஸ் அணிக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. திமுக கூட்டணிக்கு 98 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. எடப்பாடி அணியில் உள்ள 5 எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலோ அல்லது தனியாக செயல்பட்டாலோ எடப்பாடி அரசு கவிழும் ஆபத்து உள்ளது. இதனால், தோப்பு வெங்கடாச்சலம் தலைமையிலான ஆதரவு எம்எல்ஏக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு எடப்பாடி அரசு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், அதிமுக (அம்மா) அணியில் உள்ள எஸ்சிஎஸ்டி தரப்பை சேர்ந்த எம்எல்ஏக்கள் 25 பேரும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இப்படி ஆளாளுக்கு போர்க்கொடி தூக்குவதால், ஆட்சியை காப்பாற்ற என்ன செய்யப்போகிறார் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.

மூத்த அமைச்சர்கள், தம்பிதுரையுடன் முதல்வர் அவசர ஆலோசனை

நேற்று மாலை பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரையும் தலைமை செயலகம் வந்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வைத்திலிங்கம் எம்பி மற்றும் அதிமுக அம்மா அணியில் உள்ள மாவட்ட செயலாளர்களும் உடன் இருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தலைமை செயலகத்தில் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்களோ, இல்லையோ உள்கட்சி பிரச்னைகள் பற்றி பேசும் இடமாக தலைமை செயலகம் மாறி வருவது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக