செவ்வாய், 23 மே, 2017

ஆணுறுப்பை பறிகொடுத்த சாமியார் கேரளா பாஜக தலைவருடன் ...

நம் இந்திய நாட்டில் பல காலங்களாக பெண்களின் மீது திணிக்கப்பட்டு வந்த வன்முறைகள், பல்வேறு துணிச்சலான போராட்டங்களால் ஓரளவுக்குக்  கட்டுப் படுத்தப்பட்டன.  இருந்தபோதிலும், இந்த நாட்டில் எங்கேனும்  ஒரு மூலையில்  யாராவது ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறாள்.  சமீபத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகில் உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்த  சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தன்னை பல வருடங்களாக தனது பாலியல் இச்சைகளுக்காக பயன்படுத்தி வந்த சாமியார் ஒருவரது ஆண்குறியை கத்தியால் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சுவாமி கணேசானந்தா (அ) ஹரி சுவாமி (வயது 54) என்று அழைக்கப்பட்டு வந்த போலிச்சாமியார்தான் தொடர்ச்சியாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வந்தவர். இவரது ஆணுறுப்பைத் துண்டித்த பின் அந்த மாணவி காவல்நிலையத்தில் அறிவித்தபோது தான், இந்தக் குற்றத்தின் பின்னால் உள்ள உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
தனது அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பூஜைகள் செய்து அவரைக் குணப்படுத்துவதற்காக அந்த மாணவியின் அம்மாதான் ஹரி சாமியாரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதே காரணத்தைச் சொல்லிக் கொண்டு பலமுறை அங்கு சென்ற சாமியார், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இது 23 வயதுள்ள மாணவியின் 16-ஆவது வயது முதல் தொடர்ந்து வந்துள்ளது. வெகுநாட்களாக வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருந்த அந்த மாணவி, சமயம் பார்த்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த சாமியாரின் ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார்.

அந்த மாணவியின் செயல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், அந்த மாணவியின் துணிச்சலான இந்தச் செயலைப் பாராட்டியதோடு, அவருக்கு அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கும் என்றார். மேலும், அந்தக் குற்றவாளி சாமியாருக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு, இதைவிட ஒரு பெரிய தண்டனை வழங்கவேண்டுமா? என்று பதில் கேள்வியெழுப்பினார். அந்த மாணவியின் செயல் மற்றும் முதல்வர் பினராயி விஜயனின் பதில் என இந்த இரண்டையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டித் தீர்த்தனர். இதனிடையே நாம் பார்க்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன.

பெரும்பாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், இதுகுறித்து வெளியில் சொல்வதில்லை. இது அவர்கள் அதிகபட்சமான பிரச்சனைக்கு ஆளாகும் போதும் தொடர்கிறது. இந்த சமூகத்திற்கான துணிச்சலான பெண்கள் உருவாகி வரும் போது ஒருபுறம் அவர்களைப் பாராட்டிவிட்டு, நமக்கு அதிகம் பழக்கமான பெண்கள், சிறுமிகள் துணிச்சலைக் கையிலேந்தும் போது தடுத்துவிடுவதன் தேக்கநிலையே இதற்குக்காரணம். உண்மையில் அந்த மாணவி எடுத்த முடிவு துணிச்சலானதாக இருந்தாலும், அதிக மன அழுத்தத்தினால் உண்டான தைரியத்தாலேயே அவர் இதைச் செய்தார் என்கின்றனர் மனநல நிபுணர்கள். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மாணவி அனுபவித்து வந்த ஒட்டுமொத்த வலியின் வெளிப்பாடே இந்தச் செயல். தனது தாயும் இதற்கு உடந்தையாக இருக்கையில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். தற்போது, அந்த மாணவியின் தாயாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளியிடப்பட்டிருந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி ஒட்டுமொத்தமான குற்றங்களில் 95% குற்றங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டவை. அதில் அதிகபட்சமாக 34% குற்றங்கள் ஏதாவதொரு காரணங்களால் குடும்பத்திற்கு அறிமுகமானவரால் நிகழ்ந்தவை என்கின்றன அந்த தகவல்கள்.

அதற்கடுத்தபடியாக 28.72% குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நிகழ்ந்தவையாக இருக்கின்றன. குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் 5.3% அதிகரித்துள்ளது. பாஸ்கோ சட்டத்தின் (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) கீழ் பதியப்பட்ட 14,913 வழக்குகளில் 8,800 வழக்குகள் பாலியல் வன்புணர்வுகளாக இருக்கின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக சொல்லப்படும் கணக்குகள் கூட, பெண்கள் தங்கள் வலிகளை வெளியில் சொல்லமுடியாமல் மறைக்கப்பட்டதாக இருக்கலாம். இங்குள்ள சட்டங்கள் மக்களை ஈர்த்து ஒரு நம்பிக்கை மனநிலையைத் தர தவறிவிட்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மலையாளத்தில் வெளிவந்த ‘கோட்டையம் 22 ஃபீமேல்’ என்ற படத்தில் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் ஒருவனுக்கு, உரிய தண்டனை தர நினைக்கிறாள் பாதிக்கப்பட்ட கதாநாயகி. சட்டத்தின் முன்பு நிறுத்துவதும், கொன்றுவிடுவதும் சரியான தீர்வாக அமையாது என்று நினைக்கும் கதாநாயகி, சமயம் பார்த்து அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து தந்து அவனது ஆணுறுப்பைத் துண்டித்து விடுகிறாள். படத்தின் இறுதிக்காட்சிகளில் உண்மையை உடைக்கும் கதாநாயகி, தண்டனையை அனுபவிக்கும் குற்றமிழைத்தவன் என பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அது. இதையே தான் அந்த மாணவியும் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், “அந்த மாணவியின் நடவடிக்கை முற்றிலும் முறையற்றது; கண்டிக்கத்தக்கது. குற்றவாளியைப் பற்றி அவர் காவல்துறையிடம் புகார் அளித்திருக்க வேண்டும். சட்டம் அதன் கடமையைச் செய்திருக்கும்” என்றிருக்கிறார். சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு சட்டத்தின் மீதான நம்பிக்கையின்மையின் அதீத வெளிப்பாடே இந்த நடவடிக்கை என்பதை அறிவாரா சசி தரூர்

தனக்கு பிரயோஜனமற்ற ஒன்று எதற்கு? என தானே தனது ஆணுறுப்பைத் துண்டித்ததாக ஹரி சாமியார் தெரிவித்துள்ளார். எப்படியேனும் பணம் சம்பாதித்துவிடத் துடிக்கும் சாமியார்களை நம்பி, கூட்டமாகக் கூடும் மக்களை நித்தியானந்தா மாதிரியான போலிச்சாமியார்களின் வழிபாட்டுக் கூட்டங்களில் பார்த்திருக்கிறோம் தானே? இப்படிப் பட்டவர்களை நம்பும் அப்பாவி மக்களை விட்டுவிட்டால் கல்லா கட்டாது என்பதற்காகக் கூட அந்தச் சாமியார் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி நிர்பயா எனும் மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். அந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்களில் 4 பேருக்கான தூக்குத்தண்டனையை சமீபத்தில் தான் உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. எப்படியிருந்தாலும் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே.

அரியலூர் நந்தினி, மதனந்தபுரம் ஹாசினி என பாலியல் வன்கொடுமை;செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் நீண்டபடி இருக்க, சட்டம் மட்டுமே குற்றங்களைத் தடுக்கும் ஆயுதம் என எப்படி ஏற்றுக்கொள்வது? பாலியல் ரீதியிலான புரிந்துணர்வுகள் மற்றும் அதற்கான கல்விமுறையில் மாற்றங்களின் மூலம் ஏற்படும் சுய ஒழுக்கம் மட்டுமே, இதுமாதிரியான குற்றங்களைத் தடுப்பதற்கான தற்போதைய தேவை. ஏனென்றால், ஒவ்வொருவராலும் பிணைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தில் நாளை நாமும் பாதிக்கப்படலாம்!t;ச.ப.மதிவாணன்</  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக