வெள்ளி, 14 ஏப்ரல், 2017

டெல்லி போலீஸ் தமிழக விவசாயிகளை கொலை கேசுல உள்ளே தள்ளுவாங்களாம்... மிரட்டல்!


தமிழக விவசாயிகள் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் கொலை வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று டெல்லி போலீசார் விவசாயிகளை மிரட்டி வருகின்றனர்.
By: Amudhavalli டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 31வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று குட்டிக் கரணம் போட்டு போராடி வருகின்றனர்.
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 31வது நாளான இன்று குட்டிக் கரணம் போட்டு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குட்டிக் கரணம் போடுவது ஒன்றுதான் பாக்கி அதனையும் செய்தாகிவிட்ட நிலையில் மத்திய அரசு இப்போதாவது தங்களை திரும்பி பார்க்குமா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக அசராமல் போராடி வரும் விவசாயிகளை போலீசார் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடியிடம் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி டெல்லி போலீசார் தமிழக விவசாயிகளை ஏமாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாய் விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், மீண்டும் போலீசார் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதுவும் கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று டெல்லி போலீசார் மிரட்டுவதாக அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய அரசு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யும் வரையில் டெல்லியில் இருந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், கொலை வழக்கு போடுவோம் என்று மிரட்டினாலும் கவலையில்லை என்றனர். கோரிக்கை நிறைவேறாமல் இங்கிருந்து அகல மாட்டோம் என்று உறுதியாக அய்யாகண்ணு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக