வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஆர் ,கே ,நகர் ..தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ,... பணம் பணம் பணம்

ஆ.முத்துக்குமார் : அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்பதில் ஆட்டத்தைத் தொடங்கி...  ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து என்ற பிரேக்கிங் நியூஸ் மூலம் தற்காலிகமாக தனது ஆட்டத்தை மத்திய அரசு முடித்துள்ளது’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடைசி நான்கு நாள்களில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் அடியோடு மாறிவிட்டது. ஆரம்பத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனனும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷும் முன்னணியில் இருப்பதாக வந்த கணிப்புகளை எல்லாம் கடைசி நேரத்தில் தினகரன் நொறுக்கி எடுத்துவிட்டார். ஒட்டுமொத்தமாக ஆர்.கே. நகர் தினகரன் வசம் வந்துவிட்டது. சி.ஆர்.சரஸ்வதி, தம்பிதுரை மீது தக்காளி வீசியவர்கள், தினகரன் போனபோது ஆரத்தி எடுத்தார்கள். அந்தளவுக்கு தினகரன் அணி ஆர்.கே. நகரில் பணத்தை வெள்ளமாகப் பாய விட்டிருந்தது. ‘கள நிலவரம் அடியோடு மாறி தினகரன் கை ஓங்கியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்தான் முக்கியக் காரணம்’ என டெல்லிக்கு உளவுத்துறை ஓலை அனுப்பியது. இதற்கிடையில் ஓ.பி.எஸ் தரப்பும்  விஜயபாஸ்கரை குறிவைத்தே குற்றச்சாட்டுக்களை கூறியது. டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகாரிலும் விஜயபாஸ்கர் பெயர்தான் ‘ஹைலைட்’ செய்யப்பட்டு இருந்தது. அதனால்தான், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் ஆட்டத்தை விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தே தொடங்கினார்கள்.

தேதி குறித்த பின்னணி!

வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்த 7-ம் தேதியைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.

ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரனின் வெற்றிக்கு ஒரே அஸ்திரமாக இருந்தது, பணம்தான். அதை அவரும் சரியாகக் குறிபார்த்து எறிந்துகொண்டே இருந்தார். அதற்குத் தோள்கொடுத்தவர்கள், அமைச்சர்கள் விஜயபாஸ்கரும், உடுமலை ராதாகிருஷ்ணனும்தான். தினகரன் தரப்பு செய்த எல்லா செலவுகளும் இவர்கள் மேற்பார்வையில்தான் நடைபெற்றன. கடந்த வாரத் தொடக்கத்தில் ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து 10 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையும் விஜயபாஸ்கர் வீட்டில்தான் நடந்துள்ளது. அப்போதுதான், ‘தேர்தல் செலவில் ஒவ்வொருவரின் பங்கு எவ்வளவு, யார் யார் எதற்கு பொறுப்பு?’ என்பதெல்லாம் முடிவு செய்யப்பட்டதாம். அதில், தலைக்கு பத்து ‘சி’ வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பத்து பேரின் பங்கையும் விஜயபாஸ்கரிடம் கொடுத்துவிடுவது என்பதும் அப்போதுதான் முடிவானது. மொத்தத் தொகையை 7-ம் தேதி காலை ஏரியாவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்களிடம் பிரித்துக் கொடுத்துவிடுவது என்றும் முடிவானது.
யார் அந்த கறுப்பு ஆடு!

அமைச்சர்கள் கூட்டத்தில் 7-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டதைத் திடீரென்று மாற்றி, இரண்டு நாட்களுக்கு முன்பே தன் வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வேறு வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டார் விஜயபாஸ்கர். இதை வருமான வரித்துறை கோட்டை விட்டது. விஜயபாஸ்கர் வீட்டில் பத்து அமைச்சர்களின் ‘டிஸ்கஷன்’ நடந்தபோது, அதில் வேறு சில நிர்வாகிகளும் உடன் இருந்துள்ளனர். அவர்கள் மூலம்தான் தன் வீட்டில் பணம், ஆவணங்கள் உள்ள விஷயம் கசிந்திருக்கும் என்று நினைக்கிறார் விஜயபாஸ்கர். “என்னைச் சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்” என தனக்கு நெருக்கமான ஒருவரிடம் புலம்பியுள்ளார் விஜயபாஸ்கர். அந்த கறுப்பு ஆட்டை கண்டறியும் வேலையில்தான் இப்போது விஜயபாஸ்கர் தரப்பு ஈடுபட்டுள்ளது. ஒரு அமைச்சர் மீதுதான் சந்தேக வலை இறுகியிருக்கிறது.
சிக்கிய உதவியாளர்கள்!

விஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை புகுந்த அதே நேரத்தில்தான், அவருடைய அனைத்து உதவியாளர்கள் வீடுகளுக்கும் சென்றுள்ளனர். விஜயபாஸ்கருக்கு நெருக்கமான உதவியாளர் சரவணன். அவர் வீட்டிலும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாம். அதேபோல் மற்ற உதவியாளர்களிடமும் ஒரு சில விபரங்கள் சிக்கி உள்ளன. ஆனால், அவை எதுவும் ஆர்.கே. நகர் சம்பந்தப்பட்டவை அல்ல. மாறாக சுகாதாரத் துறையில் நடைபெற்ற புரோமோஷன், டிரான்ஸ்ஃபர் போன்ற விஷயங்கள். இவற்றை எல்லாம் மொத்தமாக வைத்துக் கொண்டுதான் தற்போது வருவாய் புலனாய்வுத் துறை, விசாரணை நடத்தி வருகிறது. அந்த அதிகாரிகள் கையிலும், வாட்ஸ்அப்பிலும் வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்து உதவியாளர்களே ‘ஷாக்’ ஆகியுள்ளனர். ‘இந்த ஆவணங்கள் எப்படி இவர்கள் கைக்குப் போயின’ என்ற அதிர்ச்சியிலி ருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. துண்டு சீட்டுகளைக்கூட தவறவிடாமல் எடுத்துவைத்துக் கொண்டு, ‘அது என்ன? எதற்கு எழுதப்பட்டது? அதில் இருக்கும் கணக்கு என்ன?’ என்று கேட்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது வருவாய் புலனாய்வுத்துறை.

டென்ஷனான ஐ.டி. அதிகாரிகள்!

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருந்தபோது, ஐ.டி அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரை டென்ஷன்படுத்தும்விதமாக பல விஷயங்கள் நடைபெற்றன. தன் மகளைத் தோளில் தூக்கிக் கொண்டு வெளியில் வந்து நின்ற விஜயபாஸ்கர், பத்திரிகையாளர்களிடம் காரசாரமாகப் பேட்டி கொடுத்தார். “என் மகளைப் பள்ளிக்குச் செல்லக்கூட அனுமதிக்கவில்லை. என்னை மன உளைச்சலுக்கு உட்படுத்தி சித்ரவதை செய்கின்றனர். என் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்கூட எடுக்கவில்லை” என்றார் அவர். அதேநேரத்தில், விஜயபாஸ்கரின் டிரைவர் குமார் கையில் ஒரு பேப்பர் சுருளை எடுத்துக்கொண்டு வெளியில் ஓட முயன்றார். சி.ஆர்.பி.எஃப் போலீஸ் அதிகாரிகள் மல்லுக்கட்டி அதைப் பறிக்க முயன்றனர். ஆனால், குமார் அதை கேட்டுக்கு வெளியில் இருந்த கட்சிக்காரர்களின் கையில் கிடைக்குமாறு தூக்கி எறிந்துவிட்டார். இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளால் டென்ஷனான ஐ.டி அதிகாரிகள், தங்களின் கடுமையைக் காட்ட ஆரம்பித்தனர். விஜயபாஸ்கரை வீட்டுக்குள் இருந்த சோபா ஒன்றில் உட்கார வைத்து, நாங்கள் கிளம்பும்வரை இந்த இடத்தைவிட்டு நீங்கள் எழுந்திருக்கவே கூடாது என்று நெருக்கடி கொடுத்துவிட்டனர். அடுத்து ஐந்தரை மணி நேரம் அவர் மிகவும் நொந்துபோய் அமர்ந்திருந்தார்.
எம்.எல்.ஏ விடுதியில் நடந்தது என்ன?

விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் நான்கு பேர் ஆர்.கே. நகர் பிரசாரத்தை முடித்துவிட்டு சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் தங்கி இருந்தனர். அதை மோப்பம் பிடித்த ஐ.டி. அதிகாரிகள் அங்கும் ரெய்டு நடத்தினார்கள். அதிகாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ விடுதிக்குள் போன ஐ.டி. அதிகாரிகளிடம், நான்கு உதவியாளர்களும் ‘லம்ப்’பாக மாட்டிக் கொண்டனர். அங்குதான் ஆர்.கே. நகர் பண விநியோகம் பற்றிய முக்கிய ஆவணங்களில் ஒன்று சிக்கியது. 
சிட்லபாக்கம் சிக்கியது எப்படி? 

விஜயபாஸ்கர், சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி வீடுகளில் நடந்த ரெய்டுக்கான காரணம் புரிந்தது. ஆனால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் இந்த ரெய்டு சூறாவளிக்குள் எப்படிச் சிக்கினார் என்பது எல்லோருக்கும் ஆச்சர்யம். இத்தனைக்கும் அவர் இப்போது கட்சியில் ஆக்டிவ்வான ஆளும் இல்லை. பிறகு எப்படி? அவர் சிக்கியதற்கு ஒரே காரணம், ஆர்.கே. நகர் தேர்தல்தான். அதில் பணம் விநியோகம் செய்வதற்கு பிளான் செய்த தினகரன் மற்றும் விஜயபாஸ்கர் டீம், யாருக்கும் சந்தேகம் வராத ஆள்களாகத் தேடியது. அதில் தேர்வானவர், இவர். 4-ம் தேதிக்குப் பிறகு விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கிளம்பிய 10 பெட்டிகள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கட்டுப் பாட்டுக்குத்தான் போய் உள்ளன. அங்கிருந்து ரூபாய் கட்டுகள் பிரிக்கப்பட்டு பத்திரமாக உள்ளூர்-வெளியூர் பொறுப்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது நடந்த தொலைபேசி உரையாடலில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மாட்டிக் கொண்டார். அவரிடமும் விசாரணை முடிந்துள்ளது. இந்த விசாரணையில் விஜயபாஸ்கரின் மற்ற பி.ஏ-க்கள் ஒப்பித்ததைப் போலவே, “அமைச்சர் செய்யச்சொன்னார்... செய்தேன்” என்று சொல்லி உள்ளார். அப்படித்தான் அவர் சொல்லியாக வேண்டும். வேறு வழியே இல்லை. ஏனென்றால், செல்போன் உரையாடல் நேரங்கள், உள்ளூர்-வெளியூர் பொறுப்பாளர்கள் பட்டியல், யார் யாருக்கு எவ்வளவு தொகை என்ற விபரங்களோடு பணமும், ஆவணங்களும் அங்குதான் சிக்கின.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது!

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோதே அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் உஷாராகி விட்டார். அதன்பிறகு எச்சரிக்கையாகவே இருந்தார். இப்போது சிக்கியுள்ள ஆவணங்கள் எல்லாம், அமைச்சரின் இ-மெயில் மற்றும் செல்போனை டிராக் செய்வதன்மூலம் கிடைத்தவைதான். அதனால், ரெய்டு முடிந்து செல்லும்போது விஜயபாஸ்கரின் செல்போனையும் கையோடு எடுத்துச் சென்று விட்டனர் ஐ.டி. அதிகாரிகள். அதனால் செயலிழந்து போய் உள்ளார் அவர். மீடியாவில் வெளியான ஆவணங்கள் அனைத்தும் வருமானவரி துறையே வெளியிட்டதுதானாம். விஜயபாஸ்கரின் உஷாருக்கு வைக்கப்பட்ட `செக்’ இது என்கிறார்கள்.
அடுத்த குறி யார்?

ரெய்டு சூறாவளிக்குள் அடுத்து சிக்கப்போகிறவர்கள் பட்டியலில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர். இவர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். எல்லோரையும் ரெய்டு என்ற கயிறால் பிணைப்பது, ஆர்.கே. நகர் தேர்தல் பணிதான். குறிப்பாக உடுமலை ராதாகிருஷ்ணன்தான் சிறிய சிறிய கட்சிகள், அமைப்புகளுக்குப் பணம் கொடுத்து ஆதரவைத் திரட்டியவர். அதிர்ஷ்டவசமாக செங்கோட்டையன் இந்தப் பட்டியலில் இல்லை. செங்கோட்டையன் பற்றி விசாரித்தபோது, உளவுத்துறைக்கு கிடைத்த தகவல், அவர் கடுமையான கடன் சுமையில் இருக்கிறார் என்பதே. அதனால், அவரை இப்போது விட்டுவிட்டனர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேரை வழிக்குக் கொண்டுவந்தாலே மற்றவர்கள் தானாக வழிக்கு வந்துவிடுவார்கள் என்பதுதான் பி.ஜே.பி-யின் கணக்கு.

சசிகலா குடும்பத்தில் ரெய்டு நடத்தினால், அது பட்டவர்த்தனமாகப் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிந்துவிடும் என்பதால் அதை இப்போது செய்யவில்லை. இப்போது இல்லை என்றாலும், விரைவில் ஃபெரா வழக்கில் தினகரனைக் குறி வைக்காமல் பி.ஜே.பி விடாது.

- ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர்
படங்கள்: ஆ.முத்துகுமார், கே.ஜெரோம்  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக