வியாழன், 27 ஏப்ரல், 2017

நல்லகண்ணு :தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு!

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: நல்லக்கண்ணு
மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசை புறக்கணித்து வருகிறது என்று கூறியிருக்கிறார் நல்லக்கண்ணு. நாகர்கோவிலில் இன்று (27.4.2017) இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னைக்காக அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து ஆதரவு கொடுத்து உள்ளனர். விவசாயிகளுக்காக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. 140 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி தற்போது ஏற்பட்டு உள்ளதாக அரசே ஒப்புக்கொண்டு உள்ளது. தமிழகத்திற்கு வந்த மத்திய குழு இங்கு நிலவும் வறட்சிக்கு போதுமான நிதி அளிக்கவில்லை. இதற்காக டெல்லியில் போராடிய விவசாயிகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பிரதமர் சந்திக்கவில்லை. மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, காவிரி தீர்ப்பை அமல்படுத்துவது போன்றவற்றை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அதிகாரிகள் அவர்கள் இஷ்டத்திற்கு செயல்படுகிறார்கள். தாது மணல் கொள்ளை, மணல் திருட்டு, கனிம வளங்களை கொள்ளை அடிப்பது போன்றவை தொடர்ந்து நடைபெறுகிறது. குடிமராமத்து என்ற பெயரில் அரசு குளங்களை தூர்வார அனுமதித்து உள்ளது. ஆனால் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. மாறாக மணல் அள்ளுவதற்காகவே குளங்கள் தூர்வாரப்படுகின்றன. இங்கு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் அதனை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. நீராதாரங்களை பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைக்கு உபரி நீரை வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் இப்போது குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் குடங்களுடன் அலைவதை பார்க்கிறோம். ஆனால் அரசு இதை கண்டுகொள்ளவில்லை. அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா கட்சி காலூன்ற பார்க்கிறது. தற்போது அவர்கள் அதிமுக-வின் தலைமையை தீர்மானிக்கும் அளவுக்கு செயல்படுகிறார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது இந்த கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குமரி மாவட்டத்தில்தான் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி சசிபெருமாள் உயிரை கொடுத்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஒரு போதும் திறக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக