திங்கள், 17 ஏப்ரல், 2017

வளர்மதி பன்னீர் அணிக்கு ஓடுகிறார் ...

அ.தி.மு.க., வின் இரு அணிகளிடையே சமரச பேச்சு துவக்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சசிகலா அணியிலிருந்து விலகி, பன்னீர்செல்வம் அணிக்கு மாற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் பாட நுால் வாரிய தலைவராக உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதற்கு பரிசாக, அவருக்கு தமிழக அரசின் பாடநுால் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரன் ஆதரவாளராக வலம் வந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்தார். மாநில பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்களின் தேர்தல் பிரசார பயண விவகாரத்தில், வளர்மதி மீது புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, அவரிடம், தினகரன் விசாரணை நடத்தினார். இதனால், அதிருப்தி அடைந்த வளர்மதி, தேர்தல் ரத்துக்கு மறுநாள், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தார்.
ஏற்கனவே, வளர்மதி மீது ஏற்பட்ட மோதலால், செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது சசிகலா அணியை விட்டு ஒதுங்கி உள்ள வளர்மதியும், பன்னீர்செல்வம் அணியில், ஐக்கியமாக உள்ளார். அதுகுறித்து, முக்கிய நிர்வாகிகளிடம் பேசி வருவதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக