திங்கள், 17 ஏப்ரல், 2017

தினகரன் மீது மூன்று பிரிவில் வழக்கு: டெல்லி கமிஷனர்!

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதற்காக டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற்றதாக புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளதை டெல்லி காவல்துறை உறுதி செய்துள்ளது.
டெல்லி காவல்துறை துணை கமிஷனர் மதுர் வர்மா இன்று மதியம்(17.4.2017) செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக கூறி பணம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.
அவரிடம் இருந்து 1.30 கோடி கைப்பற்றியுள்ளோம். மேலும், 2 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்துள்ளோம். லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170, 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சுகேஷ் சந்திரசேகர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். விசாரணை நடப்பதால் வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என்றார்.

டிடிவி தினகரன் பெயரும் எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு, தினகரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
சுதீஷ் சந்திராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி. தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முறைப்படி விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஒருவர் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதே நடைமுறையாகும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றம் சம்மந்தப்பட்டவரிடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தலாம். இந்த 2 நடைமுறைகளில் போலீசார் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.
இதற்காக இன்று அல்லது நாளை டெல்லி போலீசார் சென்னை வருகிறார்கள். அப்போது டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்திவிட்டு விசாரணைக்காக டெல்லிக்கு வந்து ஆஜராகுமாறு அறிவுறுத்துவார்கள் என்ற தெரிகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையின் பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கம் நிலையில், டி.டி.வி. தினகரன் லஞ்சபுகாரில் சிக்கி இருப்பதும், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லி போலீசார் சென்னைக்கு வர இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் பேசியதற்கான ஆடியோ பதிவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடப்பதாகவும், சுகேஷ் சந்திரா, தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளாரா என்பது குறித்தும் நடத்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக