செவ்வாய், 4 ஏப்ரல், 2017

உயர்நீதிமன்ற உத்தரவு .... விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

தமிழக விவசாயிகளை, சிறு குறு விவசாயிகள் என்று பாராமல், கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரது.

மின்னம்பலம் :தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுடன் (4.4.2017) 22 நாட்களாகப் போராடி வருகின்றனர். கடந்த 21 நாட்களும், தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்தல் போராட்டம், மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து போராட்டம், ஒப்பாரி போராட்டம், தூக்குகயிறு மாட்டிக்கொண்டு போராட்டம், எலிக்கறி திண்ணும் போராட்டம், பாம்புக்கறி திண்ணும் போராட்டம், பாதி தலையை மொட்டையாக மழித்துப் போராட்டம் என்று புதுவிதமான யுத்திகளில் போராடி வந்தனர். இன்று விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப்போனதாலும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காததாலும், விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், கடன் தொல்லைக்குள்ளான தமிழக விவசாயிகள் இதுவரை 400 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் வாங்கியக் கடனைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. 5 ஏக்கர் நிலத்துக்கு மேல் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகள் பெரு விவசாயிகள் என்று அரசு வரையறை செய்துள்ளது. அதனால், இந்த சிறு குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி சலுகையை 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற முடியாது.
தமிழகத்தில் வறட்சியாலும், காவிரியில் தண்ணீர் வராததாலும் சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தமிழக அரசு சிறு குறு விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்காமல், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் போராடி வரும் அய்யாக்கண்ணு சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் முரளிதரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு என்று வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. ஆனால், விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதென்பது அரசின் கொள்கை முடிவு என்பதற்கான எந்த சான்றுகளும் அரசுத் தரப்பில் இருந்து சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால், தமிழக விவசாயிகளை, சிறு குறு விவசாயிகள் என்று பாராமல், கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, இது தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. நாங்கள் டெல்லியில் 22 நாட்களாகப் போராடிவருகிறோம். இன்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச உள்ளோம். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் வாங்கியக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றபடும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக விவசாயிகளும் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக