செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற காரணமான ஹர்மான் சித்து !

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவதற்குக் காரணமாக இருந்தவரும் மதுபிரியர்தான் என்பது தெரியவந்துள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களை அகற்றக் கோரி சண்டிகரைச் சேர்ந்த ஹர்மான் சித்து (46) என்பவர் முதன்முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பல வழக்குகள் வந்தன. உச்சநீதிமன்றம் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. அதன்படி, இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக தமிழத்தில் 3,321 மதுக்கடைகளும், ஒடிசாவில் 1,167 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இப்படி படிப்படியாக மதுக்கடைகள் மூடி வருகின்றன.
இதுகுறித்து ஹர்மான் சித்து கூறுகையில், “எனக்கு மது அருந்துவது பிடிக்கும். நான் வீடு, ரெஸ்டாரென்ட் மற்றும் பப்புகளில் மது அருந்துவதே மிகவும் விரும்புவேன். ஆனால், எனக்கு மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டதில்லை. நாட்டில் மது அருந்திவிட்டு வாகனங்களில் சென்று ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. அதில், உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது என் மனதை பாதித்தது. அதனால், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். தற்போது, உச்சநீதிமன்றம் மதுக்கடைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதனால், இனிவரும் காலங்களில் சாலை விபத்துகள் குறையும்.
உச்சநீதிமன்றத்தை உத்தரவையடுத்து, சண்டிகரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு, முக்கிய மாநில சாலைகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடாமல் அங்கேயே வியாபாரம் தொடர அந்த அரசு இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதற்கான அடுத்த விசாரணை வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி நடக்கவுள்ளது. நானும் ஒரு விபத்தில் சிக்கி கழுத்துக்கு கீழே உள்ள உடலின் பாகங்கள் அசைவற்ற நிலையை அடைந்தது. ஆனால், சமூகசேவையில் தடையின்றி செயல்பட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக